பாரதிராஜாவின் சட்டையை பிடித்து வெளியே தள்ளிய ஏவிஎம்.. விழுந்து வளர்ந்த இயக்குநர் இமயம்.. விதை வீரியம்
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நல குறைவால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 84. மகன் மனோஜ் உயிரிழந்த சோகத்தில் இருந்த அவர்; அதே சோகத்தோடு சென்றிருக்கிறார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையிலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது இறுதிச்சடங்குகள் இன்று மாலை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கன்னட இயக்குநர் புட்டண்ணாவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் பாரதிராஜா. அவரிடம் சினிமா தொடர்பான நுணுக்கங்களை கற்றுக்கொண்டு 16 வயதினிலே திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமானார். அதுவரை செட்டுக்குள் இருந்த சினிமாவை வயல் வெளிகளுக்கு அழைத்து வந்தார். கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கவுண்டமணி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.

வரிசையாக ஹிட்டுகள்தான்: அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு பாரதிராஜாவின் இயக்கத்துக்கென்று தனி எதிர்பார்ப்பு உருவானது. அச்சமயத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள்,அலைகள் ஓய்வதில்லை என அவரது பெரும்பாலான படங்கள் மெகா ஹிட்டாகின. இதன் காரணமாக இயக்குநர் இமயம் என்ற இடத்துக்கு உயர்ந்தார் அவர். அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என நடிகர்களும், நடிகைகளும் ஏங்கியிருந்தார்கள்.
மிரள வைக்கும் அறிமுகங்கள்: அதேபோல் அவர் எக்கச்சக்க நடிகர்கள், நடிகைகளை அறிமுகம் செய்திருக்கிறார். அவர் அறிமுகம் என்றாலே திறமை இருக்கும் என்பதுதான் இப்போதைக்கு வரைக்கும் வரலாறு. கல்லை கூட பாரதிராஜா நடிக்க வைத்துவிடுவார் எனவும் திரைத்துறையில் சொல்வார்கள். அந்த அளவுக்கு கலைஞர்களிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என நுட்பங்களை தெரிதவர் இமயம்.
உயிரிழந்த பாரதிராஜா: தொடர்ந்து இயக்குநராக ஓடிக்கொண்டிருந்த அவர்; வயோதிகம் காரணமாக இயக்குநர் வண்டியை நிறுத்தி; நடிகராக மாறினார். அதிலும் தன்னுடைய வீரியமிக்க உழைப்பை செலுத்தி பெயர் வாங்கினார். இப்படிப்பட்ட நிலைமையில்தான் மகன் மனோஜ் உடல்நல குறைவால் கடந்த வருடம் உயிரிழந்தார். அதை கண்டு நொறுங்கி போன பாரதிராஜா, மன உளைச்சலுக்கு ஆளாகி; உடல்நல குறைவுக்கும் உள்ளானார். அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காததால் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
பாரதிராஜாவுக்கு நடந்தது: இந்நிலையில் அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை பார்ப்போம். அதாவது, சினிமாவில் அவர் நுழைந்த புதிதில் அவரது நண்பர் ஒருவர், ஏவிஎம் ஸ்டூடியோவில் பாலசந்தரின் சர்வர் சுந்தரம் படத்தின் திரையிடலுக்கு அழைத்து சென்றாராம். விநியோகஸ்தர்களுக்கான காட்சி அது. உள்ளே நின்றுகொண்டிருந்த பாரதிராஜாவை ஒருவர் வந்து 'நீ யார் என கேட்க'; நண்பருடன் வந்திருக்கிறேன் என சொன்னாராம். அந்த நண்பரோ, இவரை எனக்கு யார் என்றே தெரியாது என பல்டி அடித்திருக்கிறார்.
விழுந்த பாரதிராஜா; எழுந்த இமயம்: உடனே பாரதிராஜாவின் சட்டையை பிடித்து ஏவிஎம் கேட் வரை இழுத்து வந்து வெளியே தள்ளிவிட்டாராம். இவருக்கு கண்கள் எல்லாம் கலங்கிவிட்டனவாம். அப்போது அவர் தனது மனதுக்குள், 'இதே ஏவிஎம் என்னை அழைக்கும்படி ஆற்றலை வளர்த்துக்கொள்கிறேன்' என நினைத்துக்கொண்டு எழுந்தாராம். பின்நாட்களில் அதே ஏவிஎம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் புதுமை பெண் படத்தை இயக்கினார் இயக்குநர் இமயம்.


Click it and Unblock the Notifications
