இணையதளத்தில் கொல்லப்பட்ட ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், திலிப் குமார்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர்கள் திலிப் குமார், அமிதாப் பச்சன் ஆகியோர் உயிருடன் இருக்கையிலேயே அவர்கள் இறந்துவிட்டதாக வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரபலங்கள் பற்றி அவ்வப்போது வதந்திகள் வருவதுண்டு. அவர்களின் சொந்த வாழ்க்கையில் பிரச்சனை, பட வாய்ப்பு நழுவிவிட்டது, காதல் உள்ளிட்டவை குறித்து வதந்திகள் பரவும்.
ஆனால் சில பிரபலங்கள் உயிருடன் இருக்கும்போதே அவர்கள் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவியதும் உண்டு. அவ்வாறு பரவிய சில வதந்திகளைப் பற்றி பார்ப்போம்.

ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 2011ம் ஆண்டு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது இணையதளத்தில் அவர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு தான் தங்கள் தலைவர் உயிருடன் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

அமிதாப் பச்சன்
கடந்த ஆண்டு ஒரு பிளாக்கில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் பலியாகிவிட்டதாக வதந்தி பரவியது. மேலும் அவரது இறுதி சடங்கு நடக்கும் விவரம் கூட தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அமிதாபின் ரசிகர்கள் வதந்தியை பரப்பியவர்களை ட்விட்டரில் திட்டித் தீர்த்தனர். அமிதாப் இந்த வதந்தியை கண்டுகொள்ளவே இல்லை.

திலிப் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக இணையதளத்தில் வதந்தி பரவியது. இதை பார்த்த இந்தி பட இயக்குனர் அனுராக் கஷ்யப் திலிப் குமாரின் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதன் பிறகு தன் தவறுக்காக மன்னிப்பு கேட்டார்.

கனகா
ஒரு காலத்தில் பிரபல நடிகையாக இருந்த கனகா புற்றுநோயால் இறந்துவிட்டார் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து அவர் செய்தியாளர்களை அழைத்து பேட்டி கொடுத்து தான் இன்னும் உயிருடன் இருக்கும் விஷயத்தை உறுதிப்படுத்தினார்.


Click it and Unblock the Notifications











