செல்வராகவன் படத்திலா நடிக்கப் போற, ஜாக்கிரதை: சாய் பல்லவியை எச்சரித்த நண்பர்கள்
சென்னை: செல்வராகவன் படத்திலா நடிக்கப் போகிறாய், ஜாக்கிரதை என்று தன் நண்பர்கள் தன்னை எச்சரித்ததாக சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த என்.ஜி.கே. படம் ரிலீஸான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 52 கோடி வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் செல்வராகவன் படத்தில் நடித்தது குறித்து சாய் பல்லவி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது,
நான் தெலுங்கு படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் எஸ்.ஆர். பிரபு சார் எனக்கு போன் செய்தார். அதன் பிறகு செல்வராகவன் சாரிடம் கதை கேட்க வருமாறு கூறினார்கள். எனக்கு ஸ்க்ரிப்ட் ரொம்ப பிடித்ததால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன். படத்தில் ரகுல் ப்ரீத் சிங் உள்பட 2 ஹீரோயின்கள் என்பதால் நடிக்க சம்மதமா என்று மீண்டும் கேட்டார்கள். இருவருக்குமே வெயிட்டான ரோல் என்பதால் எனக்கு அது பெரிய விஷயமாக தெரியவில்லை.
செல்வராகவன் சார் படத்தில் நடித்தது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. செல்வா சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்று நினைத்தேன். என் நண்பர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்கள். ஆனால் நிஜத்தில் அவர் ரொம்ப ஸ்வீட். நட்பாக பழகுவார். என்.ஜி.கே. படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிறகு செல்வா சாரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம் என்பதை தெரிந்து கொண்டேன்.

பிற படத்தின் ஷூட்டிங்கின்போது செல்போனை பயன்படுத்துவோம். ஆனால் செல்வா சார் பட செட்டில் வசன பேப்பரும் கையுமாக தான் இருப்போம். அவர் பட செட்டில் ஒரு ஒழுங்குமுறையை கற்றுக் கொண்டேன்.
ஒரு கலைஞரிடம் நன்றாக வேலை வாங்கத் தெரிந்தவர் செல்வா சார். நான் சூர்யா சாரின் ரசிகை. அவர் ஒழுக்கமான நடிகர். அவரின் அர்ப்பணிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். பல டேக்குகள் வாங்கினால் அழுதுவிடுவேன். படப்பிடிப்பின் மூன்றாவது நாளே சின்னப் பிள்ளை போன்று அழுதேன். ஆனால் எத்தனை டேக் போனாலும் அதே எனர்ஜியுடன் நடிப்பார் சூர்யா சார் என்றார்.


Click it and Unblock the Notifications











