பெரும் சவாலாக மாறும் பொன்னியின் செல்வன்.. வெல்லப் போவது யாரு!
சென்னை: பொன்னியின் செல்வன்...இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படம். அமரர் கல்கி எழுதிய காலத்தால் அழியாத வரலாற்று காவியம் பொன்னியின் செல்வன். கல்கி வர இதழில் 5 ஆண்டுகள் தொடர்கதையாக வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது.
இந்த காவியத்தை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது எம்ஜிஆர், கமலஹாசன் உள்பட பலரது கனவு. இதில் மிக தீவிரமாக இயங்கியவர் இயக்குனர் மணிரத்னம். இந்த நாவலை படமாக எடுப்பதையே தனது கனவாக கொண்டுள்ள மணிரத்னம் நாவலை திரைப்படமாக எடுக்கும் காப்புரிமையையும் விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

மணிரத்னத்தின் ஒவ்வொரு படம் வெளியான பின்னரும், அவரது அடுத்த பட அறிவிப்பு பொன்னியின் செல்வனாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு எழும். இந்த முறையம் அதே போன்றதொரு தகவல் வெளியாகியுள்ளது. ரஜினியின் மகள் சவுந்தர்யாவும், இந்த நாவலை வெப் சீரிஸ் ஆக எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்துள்ள நிலையிலும், இந்த நாவலை படமாக எடுப்பது அவ்வளவு சிரமமா என்ற கேள்வி எழலாம். பொதுவாகவே வரலாற்று படம் எடுப்பது சிரமமான விஷயம். அண்ணண் - தம்பி இடையேயான அரியணை போட்டியை மையப்படுத்தி வந்த பாகுபலியை திரையில் கொண்டு வர ராஜமவுலிக்கு நான்கரை ஆண்டுகள் ஆகின.

ஆனால் பொன்னியின் செல்வனை பொறுத்தவரை 5 பாகங்கள், வந்திய தேவன் அருள்மொழித்தேவன் , ஆதித்த கரிகாலன், குந்தவி தேவி, வானதி, மந்தாகினி தேவி, நந்தினி, பழுவேட்டரையர்கள், செம்பியன்மாதேவி, கண்டராதித்தர் என 50-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள். எந்த கதாபாத்திரமும் தேவையில்லாமல் வராத வகையில் அனைத்து பாத்திரங்களையும் பயன்படுத்தி கதையை அமைத்திருப்பார் கல்கி. 5 பாகங்களையும் படித்து முடித்து திரும்ப படிக்க ஆரம்பித்தால் மறுபடி புதிதாக படிப்பது போல் இருப்பதுதான் இதன் சிறப்பு.
இக்கதையை திரையில் கொண்டுவர எவ்வளவு செலவு ஆகும் என்பதே கணக்கிட முடியாத ஒன்று. அப்படியே கணக்கிட்டால் அத்தனை கதாபாத்திரங்களையும் இணைத்து திரைக்கதை அமைத்து, அதற்கு ஏற்ற கதாபாத்திரங்கள் மூலம் அதை ரசிகர்கள் கண்முன் கொண்டு வருவது மிகப்பெரிய சவால். இந்த சவாலை முதன் முதலில் வெல்லப்போகிறவர் யார் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.


Click it and Unblock the Notifications











