பறவையே எங்கு இருக்கிறாய்.... அஞ்சலியைத் தேடும் ரசிகர்கள்
இன்றைக்கு ஊடகங்களில் பரபரப்பாக அடிபடும் செய்தி அஞ்சலிதான். அப்படி ஒன்று அழகில்லைதான். ஆனால் அழகான பெண்களே அசந்து போகும் அளவிற்கு நடிப்பில் ஒரு அழகியலை கொண்டு வந்த பெண் அவள்.
கற்றது தமிழ் பார்த்த போது அந்த நடிகையைப் பற்றி அவ்வளவாக தெரியவில்லை.... புதிய பெண். ஜீவாவின் காதலை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்று கண்களில் அழகாக காட்டியிருப்பாள் அந்தப் பெண்.
அவள் பெயர் என்ன எனக்கு அப்போது தெரியவில்லை. ஆயுதம் செய்வோம் படத்தில் கொஞ்சம் கவர்ச்சியாக பார்க்க நேர்ந்த போது அழகான நடிகையின் நடிப்பு வீணடிக்கப்படுகிறதோ என்று நினைக்கத் தோன்றியது.

சேர்மக்கனியின் நடிப்பு
அங்காடித் தெருவில் சேர்மக்கனியாக அவதரித்தாள் அஞ்சலி. ஆம் அப்படித்தான் சொல்லவேண்டும். ஜவுளிக்கடைகளுக்குச் செல்லும் போது சேர்மக்கனியைப் போல எத்தனையோ இளம் பெண்களை பார்க்க நேர்ந்த்து உண்டு.
ஆனால் அங்காடித் தெரு வந்த பின்புதான் கடைத் தெருவில் பார்க்கும் பெண்கள் எல்லோரும் என் கண்களுக்கு சேர்மக்கனிகளாகவே தெரிந்தார்கள்.

அஞ்சலிக்கான படங்கள்
அதன்பின்பு அஞ்சலிக்காகவே படம் பார்க்க போனதும் உண்டு. கதாநாயகன் யார் என்ற கவலை இல்லை. அஞ்சலி சில காட்சிகளில் மட்டுமேதான் நடித்திருக்கிறாள் என்று தெரிந்தும் அரவாண் பார்க்கப் போனேன். எங்கேயும் எப்போதும் பார்த்ததும் அப்படித்தான்.

யார் இந்த அஞ்சலி?
அஞ்சலியின் கடந்த காலமும் கரடுமுரடானதுதான். ஆந்திராவில் உள்ள ஜகன்னபேட்டா என்ற குக்கிராமத்தில் பிறந்த அஞ்சலிக்கு பெற்றோர் வைத்த பெயர் பால திரிபுர சுந்தரி. அம்மா பார்வதி தேவி. இதுமட்டும் தான் இப்போதைக்கு தெரிகிறது. பெரிய பின்னணி எதுவும் இல்லாததால் ஏழ்மையில் வாழ்ந்து வந்துள்ளது அஞ்சலியின் குடும்பம்.

சித்தியிடம் சிக்கிய அஞ்சலி
பார்வதிதேவிக்கு இரண்டுமே பெண் குழந்தைகள். தங்கையான பாரதிதேவிக்கு இரண்டுமே ஆண் குழந்தைகள். பாரதிதேவிக்கோ பெண் குழந்தை என்றால் கொள்ளை பிரியம். அதனால், தனது அக்கா மகள் திரிபுர சுந்தரியை தத்தெடுத்துக் கொண்டாராம் பாரதி தேவி

களஞ்சியத்திடம் அறிமுகம்
நடிப்பில் இருந்த ஆர்வம் காரணமாக சித்தியுடன் சென்னைக்கு வந்த திரிபுர சுந்தரி சந்தித்தது இயக்குநர் களஞ்சியத்தை. அவரது சத்தமின்றி முத்தமிடு படத்தில் தேவயாணியின் தம்பிக்கு ஜோடியாக அறிமுகமானார். திரிபுர சுந்தரி என்ற பெயரை அஞ்சலியாக மாற்றியவரும் களஞ்சியம்தானாம்.

படம் வராத காரணம் என்ன?
கஷ்டப்பட்டு நடித்தும் படம் வெளிவரவில்லை. ஆனால் அதற்குப்பின்னர் நடித்த கற்றது தமிழ் படம் வெளியே வந்தது. அந்த படத்தில் சிறப்பாக நடித்த அஞ்சலிக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது. தொடர்ந்து அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களுக்காகவும் பிலிம்பேர் விருது பெற்றுள்ளார் அஞ்சலி.

பறவையே எங்கு இருக்கிறாய்?
20 படங்கள் வரை நடித்தாகி விட்டது தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்த அஞ்சலியை திடீரென்று காணவில்லை... உயிருக்கு ஆபத்து... காதலனுடன் ஓடிப்போனாளா?... கொடிய நோய்... என்றெல்லாம் செய்திகள் இறக்கை கட்டிப் பறக்கின்றன. பிரபலமாய் இருப்பது கூட சிலருக்கு சிரமம்தான். அதனால்தான் எங்கோ கண் காணாத தூரத்திற்குப் போய் ஒளிந்து கொண்டாயோ அஞ்சலி. மீண்டும் வருவாயா? ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











