கூலி படத்துக்கு இவ்வளவு ஹைப் நல்லதா?. தப்பிப்பார்களா ரஜினியும், லோகேஷ் கனகராஜும்.. ஒரு அலசல்
சென்னை: ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் தருணத்துக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கின்றன. ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்த நேரம் எல்லாம் கூலி பற்றிய பேச்சாகத்தான் எங்கும் இருக்கும். அந்தப் பேச்சு பாசிட்டிவ்வாக இருக்குமா இல்லை நெகட்டிவ்வாக இருக்குமா என்பதுதான் விஷயமே. ஏனெனில் படத்துக்கு ஏகப்பட்ட ஹைப் ஏறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
லோகேஷ் கனகராஜும், ரஜினிகாந்த்தும் கூலி திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்கள். ரஜினியின் போட்டியாளராக முன் நிறுத்தப்படும் கமலின் தீவிர ரசிகர் லோகேஷ் கனகராஜ். அவர் ரஜினியை வைத்து படம் இயக்கியிருக்கிறார். இந்த ஒரு விஷயம்தான் படத்துக்கு முதலில் பெரிய ஹைப்பை ஏற்றிவிட்டது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், ரஜினியின் கெட் அப் என அத்தனையும் மாஸாக இருந்தன. இதனால் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
டிக்கெட் புக்கிங்கில் மாஸ்: படத்தின் ட்ரெய்லருக்கு என்னவோ சுமாரான வரவேற்புதான். இருப்பினும் அது ஒருவகையான ட்ரிக் என்று பேசிக்கொள்கிறார்கள் ரசிகர்கள். அதாவது ட்ரெய்லரை படு மாஸாக காண்பித்து ஹைப் ஏற்றுவதைவிடவும் சுமாராக ட்ரெய்லரை விட்டு படத்தில் சம்பவம் செய்வதுதான் லோகியின் பிளான் என்று ஏகத்துக்கும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். லோகேஷ் அதற்கு தகுந்தபடி செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதேசமயம் படத்தின் டிக்கெட் புக்கிங் அதகளமாக இருக்கிறது.

ரஜினி ரஜினிதான்: கேரளாவில் ஒரு மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கான டிக்கெட் விற்று தீர்ந்தது, தமிழ்நாட்டில் டிக்கெட் புக்கிங் தொடங்கி சில மணி நேரங்களிலேயே சர்வர் கிராஷ் ஆனது என; கோலிவுட் ஒரு திருவிழாவுக்கான முன்னோட்டத்தை பார்த்துக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்றும் ஆரூடங்கள் கூறப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
உஷாரான லோகேஷ் கனகராஜ்: ஆனால் லோகேஷ் கனகராஜ் உஷாராகத்தான் இருக்கிறார். அவர் தான் கொடுக்கும் பேட்டிகளில் எல்லாம் எந்த அளவுக்கு எதிர்பார்ப்பை பற்ற வைக்காமல் இருக்க முடியுமோ அந்த அளவுக்கு பேசிவருகிறார். 'ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்குமா என தெரியாது. ஆனால் டிக்கெட்டுக்கு கொடுக்கும் 150 ரூபாய்க்கு படம் வொர்த்தாக இருக்கும்' என க்ளெவராக பேசிவருகிறார்.
கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா?: இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில் இதற்கு முன்னர் எக்கச்சக்க ஹைப்பை பெற்ற படங்களான கங்குவா, GOAT, குட் பேட் அக்லி, தக் லைஃப் உள்ளிட்ட படங்களின் ரிசால்ட் என்னவாக இருந்தது என்பது அனைவருக்குமே தெரியும். முக்கியமாக அந்தப் படத்தின் ரிசல்ட்டுகளை பார்த்து ஹைப் ஏற்றுவதையே இயக்குநர்கள், ஹீரோக்கள் நிறுத்த வேண்டும் என்ற நிலையை உருவாக்கிவிட்டது.

கூலிக்கு நல்லதா?: அதனை லோகேஷ் கனகராஜ் அதில் நிதானமாகஇருக்கிறார். அதனால்தான் படத்தின் கதை டைம் ட்ராவல் இல்லை, ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும் என்று பலர் சொன்னாலும்; அந்தப் பேச்சுக்கு பெரிதாக செவி மடுக்காதது என லோகி இந்தத் தலைமுறை இயக்குநர்களில் தெளிவாக இருக்கிறார். படக்குழு தரப்பில் படத்துக்கு எந்த வித ஹைப்பும் ஏற்றவில்லை. அதேசமயம் இது ரஜினி படம் என்பதாலும்; லோகேஷுடன் அவர் முதன்முதலாக இணைந்திருப்பதாலும் இயல்பாகவே படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஹைப் ஏறிவிட்டது.
நட்சத்திர பட்டாளம்: அதுமட்டுமின்றி படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். அவ்வளவு பெரிய ஸ்டார் காஸ்ட்டும் எதிர்பார்ப்பு எகிற காரணமாகிவிட்டது. இப்படி கூலியை சுற்றி இமயம் அளவுக்கு ஹைப்புகள் ஏறியிருக்கின்றன. இந்த ஹைப்புகள் எல்லாம் படத்துக்கு நல்லதா என்றால்; ஒரு சில காட்சிகளுக்கு அந்த ஹைப்புகள் கை கொடுக்கும்; வசூல் கொடுக்கும்.
ஆனால் கொஞ்சம் திருப்திப்படுத்துவதற்கு படம் தவறினாலும் இதுவே பேக் ஃபயர் ஆகிவிடும் ஆபத்தும் உண்டு. ரஜினிக்கு கடைசியாக வெளியான வேட்டையனும், லோகேஷுக்கு லியோவும் சுமார் வெற்றியைத்தான் கொடுத்தன. எனவே இந்தப் படம் இரண்டு பேருக்குமே முக்கியமானதுதான். சூழல் இப்படி இருக்க இயல்பாகவும், திரைத்துறையில் சிலரும், ரசிகர்களில் ஒருதரப்பினராலும் ஏறியிருக்கும் ஹைப்பினால் உருவாகியிருக்கும் அபாய வட்டத்திலிருந்து ரஜினியும், லோகேஷ் கனகராஜும் தப்பித்து; பெரிய சேதாரத்தை சந்திக்காமல் இருப்பார்களா என்பதற்கு 14ஆம் தேதி பதில் கிடைத்துவிடும். ரஜினிக்கும், லோகேஷுக்கும் ஆல் தி பெஸ்ட்.


Click it and Unblock the Notifications











