'நாயகன்' ரீமேக்கில் கமல் வேடம் யாருக்கு?.. வாசகர்களின் தேர்வு யார் தெரியுமா??
சென்னை: தற்போதைய நிலவரப்படி தமிழ் சினிமாவில் பார்ட் 2 படங்களை அதிகம் எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். எந்திரன் 2, சண்டக்கோழி 2 அவ்வளவு ஏன் வெளியாகி 34 வருடங்களைக் கடந்த மணல் கயிறு படத்தையும் நம் ஆட்கள் விட்டு வைப்பதாக இல்லை.
1987ம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவில் மட்டுமின்றி, கமல்ஹாசன் திரை வாழ்க்கையிலும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் நாயகன்.
இந்தப் படத்தை ரீமேக் செய்தால் அதில் எந்த நடிகர் கமல்ஹாசன் வேடத்திற்கு பொருந்துவார் என்ற கேள்விக்கு நமது வாசகர்கள் பலரும் தங்கள் மனங்கவர்ந்த நடிகரைத் தேர்வு செய்திருக்கின்றனர்.
இந்த வாக்கெடுப்பில் முதலிடத்தைப் பிடித்த நடிகர் யார் என்பதை இங்கே காணலாம்.

நாயகன்
1987ம் ஆண்டு கமலஹாசன், சரண்யா, ஜனகராஜ், நாசர் என்று பல்வேறு நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டராக மாறிய படம் நாயகன். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இப்படம் சிறந்த நடிகர்(கமல் ஹாசன்), சிறந்த ஒளிப்பதிவு(பி.சி.ஸ்ரீராம்) மற்றும் சிறந்த காலை(தோட்டா தரணி) என்று 3 தேசிய விருதுகளைக் கைப்பற்றியது. வெளியாகி 29 வருடங்கள் கடந்தும் கூட நாயகன் படத்தின் மீதான மவுசு கூடிக்கொண்டே தான் செல்கிறதே ஒழிய குறைந்தபாடில்லை.

நாயகன் ரீமேக்
தமிழ் சினிமாவின் டான் மற்றும் கேங்ஸ்டர் படங்களின் முன்னோடியாக அமைந்த இப்படம் என்றும் பார்க்கக் கூடிய 100 படங்களின் பட்டியலிலும் இடம் பெற்றிருக்கிறது.இப்படிப் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இப்படத்தை ரீமேக் செய்தால் கமல்ஹாசன் வேடத்திற்கு பொருந்தக் கூடிய நடிகர் யார்? என்ற கேள்வியை நமது வாசகர்கள் முன்னிலையில் வைத்தோம். அவர்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் இந்தப் பட்டியலில் முதலிடம் பெற்ற அந்த நடிகர் யார் என்பதை இங்கே பார்க்கலாம்.

சூர்யா
நடிகர் சூர்யா சுமார் 11% வாக்குகளைப் பெற்று இந்தப் பட்டியலில் 4 வது இடத்தைப் பிடித்திருக்கிறார். அஞ்சான் தோல்வியால் நாயகன் ரீமேக்கில் சூர்யா நடிப்பது சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை. ராஜு பாய் என்ற மும்பை தாதாவாக சூர்யா நடித்து வெளியான அஞ்சான் கொடுத்த தோல்வி நாம் அனைவரும் அறிந்த ஒன்று என்பதால் இனிமேல் தாதா அதுவும் மும்பை தாதாவாக நடிப்பதற்கு சூர்யா முன்வருவாரா? என்பதும் கேள்விக்குறியே. ஆனால் அப்படி ஒன்று நடந்து ரசிகர்கள் சூர்யாவை ஏற்றுக் கொண்டால் நமக்கும் மகிழ்ச்சியே.

விஜய்
இந்த வாக்கெடுப்பில் நடிகர் விஜய் 3 வது இடம் பெற்றிருக்கிறார். நாயகன் ரீமேக்கில் விஜய் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று சுமார் 11% ரசிகர்கள் தங்கள் வாக்கினை விஜய்க்கு ஆதரவாக பதிவு செய்திருக்கின்றனர். விஜய்க்கும் இது போன்ற ஒரு வாய்ப்பு கிடைத்தால் மறுக்க மாட்டார் எனினும் ஏற்கனவே வெளியான தலைவா படம் சரியாக ஓடாததால் இந்த முடிவினை அவர் மறுபரிசீலனை செய்வதற்கும் வாய்ப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம்
எந்தக் கதாபாத்திரம் என்றாலும் அதில் தன்னுடைய உச்சபட்ச உழைப்பைக் கொட்டும் சீயான் விக்ரம் இந்தப் பட்டியலில் 24% வாக்குகளுடன் 2 வது இடத்தைப் பிடித்திருக்கிறார். கமலுக்குப் பின்னர் அதிகமாக தன்னுடைய உருவத்தை மாற்றி நடித்து வரும் விக்ரம் இந்தப் படத்தின் ரீமேக்கில் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதற்கு சின்ன கமல்ஹாசன் என்ற விக்ரமின் பெயரும் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

அஜீத்
இந்தக் கதாபாத்திரத்திற்கு அஜீத் பொருத்தமாக இருப்பார் என்று சுமார் 54% வாசகர்கள் வாக்களித்து இருக்கின்றனர். இதன் மூலம் இந்தப் பட்டியலில் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கிறார் அஜீத். வாலி, பில்லா, மங்காத்தா என்று வரிசையாக நெகட்டிவ் வேடங்களில் அஜீத் நடிப்பதும், அஜீத்தின் இந்த வில்லத்தனத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டதும் கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ரஜினியின் பில்லா ரீமேக்கில் நடித்து அதனை வெற்றிப் படமாக மாற்றிய அஜீத் நாயகன் ரீமேக்கில் நடிப்பாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications