உண்மையான கெத்து யாரு? அல்லு அர்ஜுனுக்கு பளார்.. பா. ரஞ்சித் ஜெய் பீம் படங்களை பாராட்டும் தெலங்கானா
சென்னை: இந்தியா முழுவதுமே, ஹாட் ஆஃப் த டாப்பிக்குகளில் ஒன்றாக இருப்பது, அல்லு அர்ஜுன் விவகாரம்தான். அல்லு அர்ஜுன் மற்றும் தெலங்கானா அரசுக்கும் இடையேயான பிரச்னையாக இது பார்க்கப்படுகின்றது. ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் இது சம்பந்தமான பேச்சுகள் அதிகம் அடிபடுகின்றது. இப்படியான நிலையில், அல்லு அர்ஜுன் மற்றும் அவர் நடித்து வெளியாகியுள்ள புஷ்பா 2 படம் குறித்து தெலங்கானா அமைச்சர் சீதாக்கா, ஹைதராபாத் ஏசிபி விஷ்ணு மூர்த்தி ஆகியோர் தமிழ் படங்களான ஜெய் படத்தினையும் இயக்குநர் பா. ரஞ்சித் படத்தையும் பாராட்டியுள்ளனர். இது பலரது கவனத்தினை ஈர்த்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் இப்போது எந்த படங்கள் கெத்து என்ற பேச்சும் அதை ஒட்டிய விவாதமும் தொடங்கியுள்ளது.
அதாவது பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிகளை வசூலிக்கும் படங்கள் கெத்தா? இல்லை, மக்களின் உண்மையான வரலாற்றை, இந்த சமூகத்தை பண்படுத்த உதவுகின்ற, அல்லது முயற்சிக்கின்ற, இந்த மண்ணுக்கான அரசியலைப் பேசுகின்ற படங்கள் கெத்தா என்ற கேள்வியும் அதை ஒட்டிய விவாதமும் எழுந்துள்ளது. இந்த விவாதம் மிகவும் ஆரோக்கியமான அதேநேரத்தில் சமகாலத்தில் மிகவும் தேவைப்படுகின்ற, கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

கடந்த சில தசாப்தங்களாகவே, ஒரு படத்தின் வெற்றி என்பது, அதன் வசூலை மைய்யமாகக் கொண்டு, கணக்கிடப்படுகின்றது. வணிக ரீதியான வெற்றி என்பது, தயாரிப்பாளர்களுக்குத் தேவைதான். வணிக வெற்றியை மட்டும் நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட பல படங்களின் உருவாக்க முறை, வியாபார முறை என்பது ஒன்றாகத்தான் உள்ளது. அதாவது, தவறு செய்பவனை, கடத்தல் தொழில் செய்பவனை, கொலைகாரனை, சட்டத்தை மதிக்காதவனை, ஊழல் செய்பவனை கதாநாயகனாக காட்டுகின்றார்கள். இவ்வாறு வெளிவந்த பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூலைக் குவித்துள்ளது.
புஷ்பா 2: அண்மையில் வெளிவந்த புஷ்பா 2 படமும் அந்த வரிசைதான். அதாவது, செம்மரங்களை வெட்டிக் கடத்துகின்ற ஒரு கடத்தல்காரனை கதாநாயகனாகவும், அதனைத் தடுக்க முயற்சிக்கின்ற, தடுக்கின்ற போலீஸை வில்லனாகவும் சில நேரங்களில் முட்டாளாகவும் காட்சி படுத்தியுள்ளது. தெலங்கானா அமைச்சர் சீதாக்கா பேசும்போது இதைத்தான் குறிப்பிட்டு பேசியுள்ளார். மேலும் இப்படியான படத்திற்கு தேசிய விருதும் கொடுத்துள்ளார்கள். ஆனால், ஜெய் பீம் போன்ற படங்களுக்கு இயக்குநர் பா. ரஞ்சித்தின் படங்களுக்கு தேசிய விருது கொடுப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
யார் கதாநாயகன்: கடத்தல்காரர்களை, தவறு செய்பவர்களை, கொலைகாரர்களை கதாநாயகனாக காட்டினால்தான் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி கொடுக்க முடியாமா என்றால், இல்லை எனக் கூறலாம். இந்த ஆண்டு வெளியான லப்பர் பந்து, கருடன், போன்ற படங்கள் பெரிய ஹீரோக்கள் நடிக்கவில்லை என்றாலும், பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றியைப் பெற்ற படங்கள். அதேபோல், பெரிய ஹீரோக்கள் நடித்து, வியாபார நோக்கத்திற்காக, பெண்களை ஆபாசமாக காட்சிப் படுத்துகின்ற, காட்சிகளோ பாடல்களோ இல்லாமல் வெளியாகி வணிக ரீதியாக கணிசமான வெற்றியும் காலத்திற்கும் பாராட்டத் தகுந்த படங்கள் எனப் பெயர் பெற்ற, படங்கள் என்றால் அதில், மகாராஜா, தங்கலான், வேட்டையன் ஆகிய படங்களைக் குறிப்பிடலாம்.
ஆபாசம்: ஆனால் புஷ்பா படத்தில் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க, நடிகை ஸ்ரீலீலாவை ஆபாசமாக நடனமாட வைத்தது, அதேபோல் ராஷ்மிகா மந்தனாவை மிகவும் ஆபாசமாக நடனமாடவைத்த பாடல் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இப்படியான படங்களை ரசிகர்கள் இரண்டாயிரம், நான்காயிரம் செலவு செய்து பார்ப்பதற்கு பதிலாக, பா. ரஞ்சித் இயக்கிய படங்களைப் அவ்வளவு செலவு செய்து பார்த்தாலாவது, அறிவு வரும் என ஹைதராபாத் ஏசிபி விஷ்ணு மூர்த்தி கூறியுள்ளார்.
கெத்து: அந்த வகையில் பார்த்தால், இயக்குநர் ஹெச். வினோத் ஒரு மேடையில் கூறிய, ஒரு மனிதனை இன்னும் சிறந்த மனிதனாக மாற்றுகின்ற, அல்லது மாற்ற முயற்சிக்கின்ற படங்கள்தான், நல்ல படங்கள் எனக் கூறினார். அந்த வகையில் பார்த்தால், புஷ்பா 2 படம், ஒரு மனிதனை சிறந்த மனிதனாக மாற்றுகின்ற படமாக இல்லை. அது புஷ்பா 2 படத்திற்கு மட்டுமல்ல, எந்த மொழியில் வெளிவந்திருந்தாலும், பெண்களை வியாபார யுத்தியாக, போகப் பொருளாக, ஆபாச பிண்டமாக காட்சிப்படுத்தியுள்ள எந்த படத்திற்குமே அந்தத் தகுதி இல்லை. அந்த வகையில், பா. ரஞ்சித், ஞானவேல், மாரி செல்வராஜ், வெற்றி மாறன் உள்ளிட்டோரின் படங்கள்தான் கெத்து. இந்த வரிசையில் பல இயக்குநர்களை வரிசைப்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications











