ரஜினி கூட யார் நடிச்சா நல்லா இருக்கும் ?
காந்தப் பார்வை... புன்னகையில் ஒரு வசீகரம்... இதுதான் ரஜினியின் அடையாளம். கறுப்பாக இருந்தாலும் தன் ஸ்டைலான நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றவர் ரஜினி. அவருடன் நடிக்கும் நடிகையர்களை அன்போடு அண்ணி என்று அழைப்பது ரசிகர்களின் வழக்கம்.
திரைப்படங்களில் வேறு கதாநாயகர்களுடன் நடிப்பதை விட ரஜினியுடன் நடிக்கும் நடிகைகள் விரைவில் பிரபலமாகிவிடுவார்கள். இதன்காரணமாகவே ரஜினியுடன் யார் ஜோடி சேருவது என்று போட்டியே உருவாகும்.
ரஜினியுடன் ஸ்ரீவித்யா, ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, ரதி, மாதவி, அம்பிகா, ராதா, மீனா, குஷ்பு, ரேவதி, நதியா, ஸ்ரேயா, ஐஸ்வர்யாராய், தீபிகா படுகோனே என பலரும் நடித்திருக்கின்றனர். அவருடன் அதிகமான படங்களில் நடித்த நடிகைகளில் யார் ரஜினிக்கு சரியான ஜோடியாக இருந்தார்கள் என்று சிலரை பட்டியலிட்டுள்ளோம் படியுங்களேன்.

மயில் ஸ்ரீதேவி
ரஜினியுடன் அதிக அளவில் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதேவி. இந்த ஜோடிக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. 25 படங்களுக்கு மேலே நடித்திருக்கிறது இந்த ஜோடி.

அதிரடி ஸ்ரீப்ரியா
பைரவியில் தொடங்கி கிட்டத்தட்ட 25 படங்கள் வரை ஜோடி சேர்ந்து நடித்திருக்கின்றனர் ரஜினி ஸ்ரீப்ரியா ஜோடி. பில்லா படத்தில் ஸ்ரீப்ரியாவின் அதிரடியான நடிப்பை பார்த்து ரஜினியே அசந்து போனாராம்.

கண்ணழகி மாதவி
தம்பிக்கு எந்த ஊரு, தில்லு முல்லு படங்களில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்தவர் மாதவி. கண்ணழகி மாதவியை ரஜினிக்கு ஜோடியாக அப்போதைய ரசிகர்கள் அதிகம் விரும்பினார்களாம்.

அடாவடி ராதிகா
ரங்கா, போக்கிரி ராஜா போன்ற படங்களில் ரஜினியுடன் அடாவடியாக நடித்து சூப்பர் என்று பெயர் பெற்றவர் ராதிகா. பல படங்களில் நடித்த இந்த ஜோடி செம ஜோடி என்று ரசிகர்களே ஒத்துக்கொண்டுள்ளனர்.

அமைதியான அம்பிகா
படிக்காதவன், மிஸ்டர் பாரத் படங்களில் ரஜினி அம்பிகா ஜோடியை பாராட்டாத ரசிகர்களே இல்லை. இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆனது என்கின்றனர் ரசிகர்கள்.

ரசனையான ராதா
ராதா உடன் பல படங்களில் நடித்திருந்தாலும் ராஜாதி ராஜா படத்தில் ரஜினி - ராதா ஜோடி சூப்பர் என்று பேசினார்கள் ரசிகர்கள்.

அட்டகாச அமலா
வேலைக்காரன், மாப்பிள்ளை, போன்ற படங்களில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்தவர் அமலா. எங்கே போனாலும் அண்ணி புராணம் பாடினார்கள் ரசிகர்கள்.

ரஜினி அங்கிள்…. மீனா
சின்ன வயதில் அங்கிள் என்று ஆசையாய் கூப்பிட்டவர் மீனா. எஜமான் படத்தில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்தார். வீரா, முத்து என அவருடன் நடித்து நானும் சூப்பர் ஜோடிதான் என்று பெயரெடுத்தவர்.

குஷ்புவை விட முடியுமா?
மன்னன் படத்தில் காதலித்தாலும் அண்ணாமலை படத்தில் ஜோடி சேர்ந்தார் குஷ்பு. வரிசையாய் ரஜினி - குஷ்பு ஜோடி களை கட்டியது. ரஜினி கட்சி ஆரம்பித்தால் குஷ்புதான் கொ.ப.செ என்று கூட ரசிகர்கள் கொண்டாடிய காலம் உண்டு.

ரியல் ஜோடி லதா
எத்தனைதான் ரீல் ஜோடியுடன் மேக் அப் போட்டு ரஜினி நடித்திருந்தாலும் ரியலாக மேக்அப் இல்லாமல் லதா உடன் இருப்பதையே அவரது ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனராம்.


Click it and Unblock the Notifications











