Bhavatharini Husband: பவதாரிணியின் திருமண வாழ்க்கை எப்படி இருந்தது?.. கணவர் யார் தெரியுமா?
சென்னை: ”காற்றில் வரும் கீதமே” என பாடிய பவதாரிணி காற்றில் கீதமாய் கரைந்து விட்டார். 1976ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி இசைஞானி இளையராஜாவுக்கும் ஜீவா ராஜய்யாவுக்கும் மகளாக பிறந்தார். 47 ஆண்டுகள் இந்த மண்ணில் இசையுடன் வாழ்ந்து வந்த பவதாரிணி நேற்று (ஜனவரி 25) மாலை 5.30 மணிக்கு இசையுடனே கலந்து விட்டார்.
இளையராஜா தனது மகள் பவதாரிணிக்கு கொல்லூரில் உள்ள மூகாம்பிகை திருக்கோயிலில் திருமணம் செய்து வைத்தார். ஆர். சபரிராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், கடைசி வரை தனது மனைவிக்காக வாழ்ந்து வந்தார் சபரி ராஜ் என்கின்றனர்.

இசைஞானியின் அன்பு மகள்: தமிழ் திரையுலகில் மட்டுமின்றி உலகளவில் தனது இசையால் பல கோடி மக்களை கட்டிப்போட்டு 80 வயதிலும் இசைக்கச்சேரிகளை நடத்திக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவின் அன்பு மகள் 47 வயதிலேயே புற்றுநோய் பாதிப்புக் காரணமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசன் முதல் சிம்பு வரை தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் பவதாரிணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இலங்கையில் இருந்து இன்று மதியம் சென்னைக்கு பவதாரிணியின் உடல் இறுதி அஞ்சலிக்காக கொண்டு வரப்படுகிறது.
பவதாரிணி திருமணம்: கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் பிரபல பத்திரிகையாளர் ராமசந்திரனின் மகன் ஆர். சபரிராஜ் உடன் பவதாரிணியின் திருமணம் கடந்த 2005ம் ஆண்டு நடைபெற்றது. சென்னையில் சினிமா பிரபலங்கள் பங்கேற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் கோலாகலமாக நடைபெற்றது.
உடல்நலக்குறைவால் பாதிப்பு: கடைசி வரை தனது மனைவியை காப்பாற்ற வேண்டும் என கணவர் சபரி ராஜனும் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பு இருந்தும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் ரகசியமாக மறைத்து வைத்துக் கொண்டு மாநாடு படத்திற்கு பாட்டு பாடுவது, சில படங்களுக்கு இசையமைப்பது என இயங்கிக் கொண்டிருந்த பவதாரிணி தனது இயக்கத்தை நிறுத்திக் கொண்டார்.
இசை நிகழ்ச்சி ரத்து: இந்த வாரம் இலங்கையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், திடீரென மகள் பவதாரிணியின் மரணம் இளையராஜாவை சுக்கு நூறாக உடைத்து விட்டது. இலங்கையில் இசை நிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில் மகள் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த இளையராஜா சென்னைக்கு மகளின் உடலை கொண்டு வந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட சகோதரர்களும் இளையராஜாவுடன் இருப்பதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











