Thalapathy 69 Producer: 4 ஆண்டுகளில் தளபதி விஜய் படம்.. யாரு இந்த கேவிஎன் தயாரிப்பாளர்?
சென்னை: எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கவுள்ள தளபதி 69 படத்தை தயாரிக்கும் வாய்ப்பு கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் தயாரிப்பு நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. இன்று அந்த படத்திற்கான பூஜையை சிறப்பாக போட்டுள்ளனர்.
தளபதி 69 பட பூஜைக்கு பாலிவுட் நடிகர் பாபி தியோல், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நடிகர் நரேன் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். அனைவருக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்திருந்தார் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா.

K Venkat Narayana எனும் தனது பெயரைத்தான் சுருக்கமாக KVN என தயாரிப்பு நிறுவனத்துக்கு பெயர் வைத்துள்ள வெங்கட் நாராயணாவுடன் நடிகர் விஜய் அமர்ந்து பேசும் காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வரும் நிலையில், யாரு இந்த வெங்கட் நாராயணா என்பது குறித்து லேசாக இங்கே அலசலாம் வாங்க..
டிவிவி நிறுவனத்துக்கு மிஸ்ஸான வாய்ப்பு: தளபதி 69 படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான டிவிவி தயாரிக்கப் போவதாக தகவல்கள் கசிந்தன. ஆனால், கடைசி நேரத்தில் அந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விஜய் விருப்பம் தெரிவிக்காத நிலையில், கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் விஜய் படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது. ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை தயாரித்த கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் விஜய் படத்தை தயாரிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட நிலையில், கே வெங்கட நாராயணன் அந்த வாய்ப்பை பிடித்துக் கொண்டார்.

தளபதி 69 பட தயாரிப்பாளர்: நடிகர் விஜய்யின் 69 மற்றும் கடைசி படமாக கருதப்படும் படத்திற்கு தளபதி 69 என தற்காலிகமாக பெயர் வைத்துள்ளனர். எச். வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், நரேன், பூஜா ஹெக்டே, பிரியாமணி மற்றும் மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்று நடைபெற்ற பூஜையில் கேவிஎன் தயாரிப்பு நிறுவனர் கே. வெங்கட நாராயணா கலந்துக் கொண்டு விஜய்யுடன் பேசிய காட்சிகள் வெளியாகி உள்ளன.
4 வருடத்தில் அசுர வளர்ச்சி: பெரும் தொழிலதிபரான வெங்கட நாராயணா கடந்த 2021ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான சாகத் படத்தை தயாரித்து தயாரிப்பாளராக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். 2022ம் ஆண்டு பை டு லவ், 2024ம் ஆண்டு கேடி தி டெவில் உள்ளிட்ட படங்கள் வெளியாகி உள்ளன. யஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் டாக்ஸிக் படத்தையும் இந்த நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இந்நிலையில், முதன்முறையாக தமிழ் படம் ஒன்றை தயாரிக்க முன் வந்துள்ளார் வெங்கட நாராயணா. அடுத்து பாலிவுட்டில் அக்ஷய் குமாரை வைத்தும் ஒரு படத்தை இவர் தயாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரபல விநியோகஸ்தர்: 2021ம் ஆண்டு தயாரிப்பாளராக அறிமுகமான இவர், ஏகப்பட்ட படங்களை வாங்கி விநியோகமும் செய்திருக்கிறார். பொகரு, ஆர்ஆர்ஆர், சீதாராமம், விக்ராந்த் ரோணா, 777 சார்லி, கல்கி 2898 ஏடி மற்றும் தமிழ் படமான கங்குவா படத்தையும் இவர்கள் தான் கன்னடத்தில் வாங்கி வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் பிரெஸ்டிஜ் எஸ்டேட்ஸ் சிஇஓ: தளபதி 69 படத்தின் தயாரிப்பாளரான கே வெங்கட நாராயணா இதற்கு முன்னதாக பிரெஸ்டிஜ் எஸ்டேட்ஸ் நிறுவனத்தின் சிஇஓவாக பணியாற்றி வந்தார். அதிலிருந்து ராஜினாமா செய்த பின்னர் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார். இவருடன் இணைந்து இவரது மனைவி நிஷா வெங்கட் கோனங்கியும் கேவிஎன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இன்று நடைபெற்ற தளபதி 69 படத்தின் பூஜையிலும் அவர் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











