For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஒரு திரைப்படத்தின் படைப்பாளி யார்?

  By Shankar
  |

  திரைப்படம் என்பது இயக்குநரின் படைப்பு என்றுதான் எல்லாரும் நம்புகிறார்கள். ஒரு படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை ஓர் இயக்குநரே ஒரு படத்தில் எல்லாமுமாக இருக்கிறார் என்பதால் இவ்வாறு கருதுவதில் எந்தக் குறையுமில்லைதான். ஆனால், ஒரு திரைப்படம் இயக்குநரின் படைப்பே என்ற முடிவுக்கு வருவது முழு உண்மையுமாகாது. படிப்படியான பல்வேறு ஆக்க நிலைமைகள் ஒரு படத்துக்கு உண்டு. அங்கே ஒவ்வோர் இடத்திலும் ஓர் இயக்குநரே முன்னின்று வழிநடத்தித்தான் வேண்டியதைப் பெறுகிறார் என்பதால்தான் அவர்க்கு முதலிடம். மற்றபடி ஒவ்வொரு பணியடுக்கிலும் அத்திரைப்படத்திற்குரிய படைப்பு வேலையைச் செய்து தருபவர் வேறொரு படைப்பாளியே. அதனால்தான் திரைப்படத்தைக் 'கலை' என்று ஏற்றுக் கொள்வதில் ஒரு பிரிவினர் தயக்கம் காட்டியே வருகின்றனர். வங்கிகள் அதை ஒரு தொழில்துறை என்று ஏற்றுக்கொள்வதில்லையே அதைப்போல. பிறகு மனமிரங்கி வந்து 'அது ஒரு கூட்டுக்கலை' என்கிறார்கள்.

  ஒரு கலைப்படைப்பு என்றால் கர்த்தாவிடமே அதன் ஒட்டுமொத்தத் தோற்றுவாயும் இருக்க வேண்டும். ஓவியம் என்றால் அது முழுக்க முழுக்க ஓவியனின் படைப்பே. அதன் படைப்பாக்கத்தில் பிறிதொருவர்க்கு இடமே இல்லை. பத்தாயிரம் செய்யுள்களால் ஆன பெருங்காப்பியம் என்றாலுமே அது முழுக்க முழுக்க அக்காப்பியவானின் படைப்புச் செயலே. அங்கே இன்னொருவர்க்கு இடமே இல்லை. ஆனால், திரைப்படம் என்பது ஒரேயொருவரின் படைப்பு என்று எப்படிச் சொல்ல முடியும் ? பலருடைய கலைச்செயல்களும் உழைப்புக்கூறுகளும் கலந்த ஒன்றுதான் திரைப்படம். ஒருவரின் கற்பனைத் திட்டமும் வேட்பும் பெருஞ்செல்வமும் அதற்கு முதல் தேவை. கலைத்தேர்ச்சியும் கைவண்ணமும் மிக்க கலைஞர்களின் படைப்புத் திறனும் ஒப்பீட்டளவில் படைப்பு மனவெழுச்சி தேவையற்ற தொழிலாளர்களின் உழைப்பும் சேர்ந்த 'ஒரு திரண்ட படைப்பு' என்றுதான் திரைப்படத்தைக் கூறவேண்டும். ஏறத்தாழ கட்டடக் கலையைப் போன்றது.

  Who is the creator of a Movie?

  மணிரத்னம் தம் பழைய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறினார் : "ஒரு சினிமாவில் நடிகர்கள் நடிச்சுத் தந்துடறாங்க. ஒளிப்பதிவாளர் நமக்கு வேண்டியதை வேண்டியவாறு எடுத்துக் கொடுத்துடறார். இசையமைப்பாளர் இசையமைச்சுக் கொடுத்துடறார். எடிட்டர் இவற்றையெல்லாம் முறைப்படத் தொகுத்துக் கொடுத்துடறார். ஓர் இயக்குநராக எங்கள் வேலை இந்தப் பணிகள் அனைத்தையும் தொடர்ந்து மேற்பார்வையிடுவதே. அந்தத் திரைப்படத்திற்கு என்ன தேவையோ அவற்றை ஒவ்வொருவரிடமும் கேட்டுப் பெறுவதுதான் எங்கள் வேலையே..."

  களிநயத்திற்காக மணிரத்னம் அவ்வாறு சொல்கிறார் என்றே எடுத்துக்கொண்டாலும் கூட, அவர் கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. பெரும்பாலும் இந்தியத் திரையுலகில்தான் ஒரு திரைப்படத்தின் கதையை எண்ணுவதிலிருந்து ஓர் இயக்குநரின் பங்கேற்பு தொடங்குகிறது. அவரே திரைக்கதையையும் எழுதுகிறார். அவரே உரையாடல்களையும் சிந்திக்கிறார். ஒரு படத்தின் எழுத்துப் படியை நம்மூர் இயக்குநர்கள் மாங்கு மாங்கு என்று எழுதிக்கொண்டிருக்கிறார்கள். தொழிற்பாடு அமைப்பாக மாறிப்போன மேலை நாட்டின் திரைத்துறையில் ஓர் இயக்குநர் அப்படத்தின் எழுத்து வேலைகளுக்கு அரிதாகத்தான் வருவார். அல்லது வருவதேயில்லை. அப்பணியை வேறொரு திறமையான குழு செய்கிறது. அந்தக் குழுவினர் ஆக்கித் தரும் திரைக்கதையை அத்திரைப்படப் பொறுப்பை ஏற்கும் ஓர் இயக்குநர் படமாக எடுத்துத் தருகிறார். அந்தத் தொடர்கண்ணிப் பணிகள் அனைத்திற்கும் பெரும்பொருட் செலவு பிடிக்கும். மேலை நாடுகளில் பகாசுர நிறுவனங்கள் பொருளாதார வலிமையோடு திரைப்படத் தொழிலில் ஈடுபட்டுள்ளன. அவை அப்பெரும் முதலீட்டு நடவடிக்கையைப் பிசிறில்லாமல் செய்து முடித்து வணிகம் செய்கின்றன. அங்கே இயக்குநர் தரப்பிலேயேகூட இரண்டுக்கும் மேற்பட்ட குழுக்கள் பணியாற்றும்.

  தென்னிந்தியத் திரைப்படத்தில் ஒருவர் இயக்குநராக விரும்பினால் அவர்க்கென்றே ஒரு கதையுலகம் அமைய வேண்டும். அதைத் திரைக்கதையாக எழுதி முதற்படியை உருவாக்குவார். தாம் உருவாக்கிய திரைக்கதையை வாய்வழியாகச் சொல்லி சொல்லி வாய்ப்பு தேடுவார். அந்தக் கதையும் அதில் அவர் கையாண்ட முறைகளும் அப்போதைய திரையுலக வெற்றிப் போக்குகளோடு அது கொண்டுள்ள பொருத்தமும் என எல்லாம் கூடிவரவேண்டும். அப்படி வந்தால் அவர் கதையைக் கேள்வியுறும் சிறு தயாரிப்பாளர் ஒருவர் படமாக்க முன்வருவார். அந்தச் சிறு தயாரிப்பாளர்க்கு அதுதான் முதற்படமாகவோ இரண்டாம் படமாகவோ இருக்கும். நிச்சயமாக அத்தயாரிப்பாளரின் பத்தாம் படமாக இருக்காது. ஏனென்றால் பத்துப் படங்கள்வரை இங்கே தயாரிப்பாளர் நிலைப்பதே இல்லை. பெரு முதலீட்டுப் படங்களை எடுக்கின்றவர்கள் இதுபோன்ற முதல் முயற்சியாளர்களோடு அன்னம் தண்ணீர் புழங்குவதில்லை. ஆகவே நம் இயக்குநர்க்கு வாய்த்த தயாரிப்பாளரும் புது முயற்சியாளர்தான். இப்போது ஒரு திரைக்கதையை வைத்துக்கொண்டு 'ஓர் இயக்குநரும் ஒரு தயாரிப்பாளரும்' என்னும் இருவர் திரைப்பட முனைவோராக மாறி நிற்பார்கள்.

  அடுத்து அத்திரைப்படத்தின் உண்மையான ஆக்குநர் வந்து இணைகிறார். அவர்தான் ஒளிப்பதிவாளர். திரைமொழி என்று ஒன்று உண்டு. அதை உருவாக்குபவர் ஒளிப்பதிவாளர்தான். ஓர் இயக்குநர் தமக்கு வேண்டியதைக் கற்பனையில் உருவாக்கி வைத்திருக்கிறார். அக்கற்பனைக்குரிய அரங்கங்களையும் நடிகர்களையும் அவர் முன்னிறுத்துகிறார். அங்கே அதைப் பதிவாக்கும் பணியை ஒளிப்பதிவாளரே செய்கிறார். நாம் காணும் படம் ஒளிப்பதிவாளரின் கண்கள் கண்டபின் நம்மை வந்து சேர்கிறது. பாண்டியராஜன் உருவாக்கிய வெள்ளந்தி மனிதர்கள் தோன்றும் ஒரு திரைக்கதையை அசோக்குமார் என்னும் ஒளிப்பதிவாளரின் படைப்பாற்றல்தான் 'ஆண்பாவம்' என்ற சாதனையை நிகழ்த்தியது. ஒளிப்பதிவுதான் திரைப்பட மாயம் செய்கிறது. ஸ்ரீதரின் திரைப்படங்கள் அவருடைய ஒளிப்பதிவாளர்க்குப் பல்வேறு வாய்ப்புகளை வழங்கின. பாரதிராஜாவின் கற்பனை நிவாஸ் என்னும் ஒளிப்பதிவாளரால்தான் நமக்குக் காட்டப்பட்டது. எண்ணிப் பார்த்தால் ஒளிப்பதிவாளரால்தான் திரைப்படம் உருப்பெறுகிறது. அவருடைய கண்களே பார்வையாளரின் கண்களாக இடம் மாறுகின்றன. ஒளிப்பதிவுக் குழப்பங்களால் ஒரு திரைப்படம் அதன் செம்மையை அடைவதே இல்லை. பாக்யராஜின் பிற்காலப் படங்கள் தோல்வியுற்றமைக்கு 'அகல்திரைச் சட்டகத்தைத்' திறம்படக் கையாள முடியாமல்போன அவருடைய ஒளிப்பதிவாளர்களும் காரணமாயினர். ஒரு திரைப்படத்தின் அன்னையும் பிதாவும் என்று 'இயக்குநரையும் ஒளிப்பதிவாளரையும்' தான் கூற வேண்டும்.

  - கவிஞர் மகுடேசுவரன்

  English summary
  Who is the real creator of a movie? Here is poet Magudeswaran's analysis.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X