நெகிழ்ச்சியில் மாதவன்.. அடுத்த ஜி.டி. நாயுடு யார்? மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்த படக்குழு
கோவை: கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள பயோபிக் படம் ஜி.டி. நாயுடு. இதில் மையக் கதாபாத்திரமான ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடித்துள்ளார். அவருடன் சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் புரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
படத்தின் புரோமோஷன்களில் ஒரு பகுதியாக, "அடுத்த ஜி.டி. நாயுடு யார்?" என்ற மாநில அளவிலான கண்டுபிடிப்புப் போட்டி கோவையில் சிறப்பாக நடைபெற்றது. மறைந்த ஜி.டி. நாயுடுவின் குடும்பத்தினருடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இந்த போட்டியை நடத்தியிருந்தன. திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களின் புதுமையான சிந்தனைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த போட்டிக்கு எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்று படக்குழு கூறுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 165 பொறியியல் கல்லூரிகளில் இருந்து 780 புதிய கண்டுபிடிப்புகளுடன் மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டுள்ளனர்.

பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு முதலில் 36 புதிய கண்டுபிடிப்புகள் அடுத்த கட்டமான எக்ஸ்பிளனேஷன் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டது. அதிலிருந்து 12 புதிய கண்டுபிடிப்புகளை இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்தனர்.
வேலூர் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த நாராயணன், கோவை STEM லேப்ஸ் தலைவர் ராமராஜ் மற்றும் பிரிகால் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜனார்த்தனன் உள்ளிட்டோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
நம்பி நாராயணன்: இறுதிச் சுற்றின் சிறப்பு நடுவராக முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும் பத்ம பூஷண் விருது பெற்றவருமான டாக்டர் நம்பி நாராயணன் பங்கேற்றது போட்டியாளர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இறுதிச் சுற்றில் 12 அணிகளும் தங்களது திட்டங்களை விரிவாக விளக்கினர். தொழில்நுட்ப திறன் மட்டுமின்றி, வணிக ரீதியாக அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா, சந்தையில் அதற்கான தேவை என்ன, பெரிய அளவில் உற்பத்தி செய்யும் சாத்தியம் உள்ளதா என்பதையும் நடுவர்கள் ஆய்வு செய்தனர்.

இறுதியாக நடுவர்களின் ஒட்டுமொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களை பிடித்த அணிகள் தேர்வு செய்யப்பட்டன. இந்த முடிவுகள் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. டாக்டர் நம்பி நாராயணன், ஜி.டி. நாயுடுவின் மகன் ஜி.டி. கோபால், ஜி.டி. நாயுடு கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ஆர். மாதவன், தயாரிப்பாளர் வர்கீஸ் மூலன் உள்ளிட்டோர் முன்னிலையில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
10 லட்சம் பரிசு: முதல் பரிசாக ரூ.5 லட்சத்தை ஈரோட்டில் உள்ள எம். குமாரசாமி பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய "பார்கின்ஸ்கிரைப்" (ParkinScribe) திட்டம் வென்றது. பார்கின்சன் நோயாளிகளுக்கு உதவும் வகையில் இந்த கண்டுபிடிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் பரிசான ரூ.3 லட்சத்தை சென்னை ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய "EDU4AUTISM" என்ற கண்டுபிடிப்பு கைப்பற்றியது. ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான கல்வி தொழில்நுட்பத் தீர்வாக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் பரிசான ரூ.1.25 லட்சத்தை ஜே.கே.கே. முனிராஜா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வென்றனர். விவசாயிகளுக்காக குறைந்த செலவில் சூரிய சக்தியை பயன்படுத்தி இயங்கும் உலர்த்தி (PCM தொழில்நுட்பம்) அவர்களின் திட்டமாகும்.
நான்காம் பரிசாக ரூ.50 ஆயிரத்தை சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவர்கள் உருவாக்கிய "ஸ்மார்ட் எல்பிஜி மானிட்டர்" கண்டுபிடிப்பு பெற்றது. இந்திய வீடுகளில் எரிவாயு பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் பரிசான ரூ.25 ஆயிரத்தை வேலூர் தொழில்நுட்ப நிறுவன (VIT) மாணவர்கள் உருவாக்கிய "சைலண்ட் எஸ்ஓஎஸ்" (Silent SOS) என்ற தனிநபர் அவசரகால பாதுகாப்பு கருவி வென்றது. இந்த போட்டியில் மொத்தமாக ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசுத் தொகையை திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கின.
மாற்றுச் சிந்தனை: இந்த போட்டி குறித்து தயாரிப்பாளர் வர்கீஸ் மூலன் பேசுகையில், "தமிழ்நாட்டின் வகுப்பறைகளில் இருக்கும் அடுத்த தலைமுறை ஜி.டி. நாயுடுக்களை கண்டுபிடிப்பதே எங்களின் நோக்கம். இரண்டு நாட்களில் ஏராளமான புதுமையான திட்டங்களை பார்த்தோம். மாற்றுச் சிந்தனை கொண்ட இளைஞர்கள் ஏற்கனவே உருவாகி இருப்பதை இந்த போட்டி நிரூபித்துள்ளது" என்றார்.

ஜி.டி. நாயுடுவாக நடித்துள்ள நடிகர் ஆர். மாதவன் கூறுகையில், "நாங்கள் பார்த்த ஒவ்வொரு திட்டமும் இந்தியாவில் உள்ள உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பதாக இருந்தது. ஜி.டி. நாயுடு தனது வாழ்நாள் முழுவதும் அதைத்தான் செய்தார். இன்று அவரது பெயரில் 780 இளம் பொறியியல் அணிகள் அதே பாதையில் பயணிப்பதை பார்க்க பெருமையாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.
நாட்டிற்கு பயனுள்ள கண்டுபிடிப்புகள்: ஜி.டி. நாயுடுவின் மகன் ஜி.டி. கோபால் பேசுகையில், "என் தந்தை பாராட்டுகளை விரும்பியவர் அல்ல. நாட்டிற்கு பயன்படும் பொறியியலாளர்கள் உருவாக வேண்டும் என்பதைத்தான் அவர் எப்போதும் விரும்பினார். அந்த கனவை இந்த போட்டி ஓரளவுக்கு நிறைவேற்றியிருக்கிறது. இதில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், கல்லூரிகளுக்கும், நடுவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் நம்பி நாராயணன் கூறுகையில், "என் வாழ்க்கையில் பல போட்டிகளுக்கு நடுவராக இருந்திருக்கிறேன். ஆனால் இந்த போட்டியில் பார்த்த மாணவர்களின் சிந்தனையும், தன்னம்பிக்கையும் என்னை மிகவும் கவர்ந்தது. தோல்விக்கு அஞ்சாமல் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நினைக்கும் இளம் பொறியியலாளர்களை பார்த்து தமிழ்நாடு பெருமைப்பட வேண்டும்" என்று பாராட்டினார்.
கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் ஜி.டி. நாயுடுவாக ஆர். மாதவன் நடித்துள்ளார். அவருடன் சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. ஏற்கனவே படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியிலும் நம்பிக்கையிலும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications