நீட் தேர்வுக்கு எதிரான பிரபலங்களின் குரல்.. CM விஜய்க்கு எதிரானதா? TN அரசியலுக்கு இப்படி ஒரு நிலையா?
சென்னை: உலகின் பல்வேறு நாடுகள் இந்தியாவில் நடைபெறும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் இணைந்து நடத்தும் போராட்டம் குறித்து கவனித்து வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு பிரதமர் மோடி என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது. இப்படி இருக்கையில், தமிழ்நாட்டிலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.
பிரபலங்களின் இந்த குரலானது, நீட் தேர்வுக்கு எதிரானதாக இருக்கும் போது, அதை முழுக்க முழுக்க முதலமைச்சர் விஜய்க்கு எதிரானது என்ற குறுகிய பார்வையில் மடைமாற்றம் செய்து பரவலாக்குவது என்பது மிக எளிதாக நடைபெற்று வருகிறது. இப்படியான சம்பவம் இது தமிழ்நாடு தானா? இந்திய அரசியல் பாதையைத் தீர்மானித்த மாநிலத்தில் இருந்துதான் இப்படியான மடைமாற்ற நிகழ்வுகள் நடைபெறுகிறதா என்ற கேள்விகள் எழாமல் இல்லை. சரி, நீட் தேர்வுக்கு எதிரான இந்த போராட்டம் முதலமைச்சர் விஜய்க்கு எதிரானதாக மடைமாற்றம் ஆனது எப்படி என்ற கேள்விக்கு பதிலை பலரும் தேடி வருகிறார்கள்.

பிரபலங்கள் ஆதரவு: நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் சினிமா பிரபலங்கள் வாக்குச் செலுத்த வந்த போது வெள்ளை நிறச் சட்டையும் வெளிர் காக்கி நிற பேண்ட்டும் அணிந்து வந்து வாக்களித்தவர்கள் அனைவரும் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் என்று இணையத்தில் முழுக்க முழுக்க பிரபலங்களை கொண்டாடியவர்கள் இன்றைய முதலமைச்சரான விஜய்யின் ரசிகர்களும் தவெகவினரும் தான். இப்படி இருக்கையில் ஜூலை 23ஆம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராகவும், நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களை காவல்துறையினரைக் கொண்டு கைது செய்ததையும் கண்டித்து பிரபலங்கள் விமர்சித்துப் பேசினர்.
மடை மாற்றம்: இதை முழுக்க முழுக்க முதலமைச்சர் விஜய்யை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது போலவும், அவரது ஜன நாயகன் படத்தை ரிலீஸ் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தது போலவும் மடைமாற்றம் செய்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினர். இப்படி மடைமாற்றம் செய்பவர்கள் விஜய்யை தங்களது அபிமான நடிகராக மட்டுமே இன்னும் பார்த்து வருகிறார்களோ என்ற கேள்வி எழாமல் இல்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சர் இருக்கையில் யார் இருந்தாலும் அவர்களை நோக்கி கேள்வி எழுப்ப தான் செய்வார்கள்.

யார் வில்லன்?: ஒருவேளை சினிமாவில் விஜய்யை எதிர்த்துப் பேசினாலே வில்லன்கள் என்று நினைத்துக் கொள்வது போல, நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களை கைது செய்த காவல்துறை, முதலமைச்சர் விஜய் கட்டுப்பாட்டில் தானே உள்ளது? அப்படியானால் முதலமைச்சர் விஜய்யை நோக்கித்தானே கேள்வி எழுப்புவார்கள். அப்படிக் கேள்வி எழுப்புபவர்களை விஜய்க்கு வில்லனாக சித்தரிக்கும் போக்கு அரசியல் அபத்தம் என்று பலரும் கூறி வருகிறார்கள்.
சர்வாதிகாரப்போக்கு: இயக்குநர் பா. ரஞ்சித் பேசியது ஆர்ப்பாட்டத்தின் மையப்புள்ளியில் இருந்து விலகி இருந்தாலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் இதை எப்படிப் பேசுவாய்? நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் தலித் அமைச்சர்களின் நடவடிக்கைகளை எப்படி விமர்சிக்கலாம் என்று கேள்வி எழுப்புவதே சர்வாதிகார போக்கின் அடையாளம் தான். தமிழ்நாடு அரசியலில் நடைபெற்ற மக்களுக்கு எதிரானது முந்தைய அரசுகளின் நடவடிக்கைகள், நிர்வாக தவறுகளை விஜய் தனது படங்களில் விமர்சித்து பேசினால் ஃபயர் விடும் அவரது ரசிகர்கள் முதலமைச்சராக இருக்கும் விஜய்யை விமர்சிக்கும் சினிமா பிரபலங்களையும் பொதுமக்களையும் தொடர்ந்து சமூக விரோதிகள் போல சித்தரிக்கும் போக்கு என்பது, தமிழ்நாடு அரசியல் களத்திற்கு ஒரு கரும்புள்ளியே என்று பலரும் கூறி வருகிறார்கள். மேலும் சினிமாவில் மட்டும் அரசியல் பேசாமல் களத்திலும் மக்களுக்காக குரல் கொடுக்கும் திரைப்பிரபலங்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டிற்கு ஆரோக்கியமானது என்று கருதாமல், முதலமைச்சர் விஜய் என்ற ஒற்றை மனிதருக்கு எதிரானவர்கள் என்று கருதுவது அரசியல் அபத்தம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications