Dalit Cinema: தலித் நடிகர்கள் தமிழ் சினிமாவில் ஏன் இல்லை..? பிரச்னையும் ரியாலிட்டியும் என்ன?
சென்னை: இந்திய சினிமாவிலேயே தமிழ் சினிமாவுக்கு என்று இருக்கும் பாரம்பரியமும் அதன் பரிணாமமும் மற்ற மொழி படங்களை காட்டிலும் வித்தியாசமானது. அதற்கு முக்கிய காரணம் திராவிட இயக்க கருத்துக்களை திரையிலும் பேசி மக்கள் மத்தியில் பகுத்தறிவை பரப்பிய வரலாறு தமிழ் சினிமாவுக்கு உள்ளது. அண்ணாதுரையின் வேலைக்காரி, கலைஞரின் பராசக்தி என திராவிட இயக்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே நடந்தவை இவை.
திராவிட இயக்க கருத்துக்களுக்கு வரவேற்பு கிடைத்த தமிழ் சினிமாவில் தலித் வாழ்வியலை, அடிமைப்பட்ட வாழ்க்கையாக மட்டுமே சித்தரித்து, அவர்கள் மீது பாவத்தை கருணையையும் உண்டாக்கி, அப்படி பாதிக்கப்படுகிற மக்களை காக்க, தலித் அல்லாத ஒருவர் சமூக நீதி சிந்தனைகளுடன் வருவார் என்ற, "மீட்பர்" சிந்தனை கதைகளே இங்கு பல வெளியாகி உள்ளன. ஆனால் இயக்குநர் பா. ரஞ்சித் போன்ற இயக்குநரின் வருகை என்பது தமிழ் சினிமாவில் தலித் அரசியலையும் வாழ்வியலையும் மிகவும் எதார்த்தமாக படமாக்கியது மட்டுமல்லாமல், மீட்பர் என்ற கான்செப்ட்கள் உடைக்கப்பட்டது. '
அவருக்கு முன்னர் சில இயக்குநர்கள் அப்படி இருந்தாலும், பா. ரஞ்சித்தின் திரைப்படமாக்கல் மொத்தமாகவே தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டது. இவரது படங்கள் இந்த சமூகத்தை மேலும் நல்லிணக்கத்தை நோக்கி நகர்த்துகிற, பிரிவினைகளை உடைக்கிற, சகோதரத்துவத்தை பேசுகிற படமாக இருக்கிறது. அடிமைப்பட்ட வாழ்வைப் போலவே தலித்துகளை காட்சிப்படுத்தி வந்த தமிழ் சினிமாவில், அந்த காலம் எல்லாம் மலையேறிப் போச்சு என்று எடுத்துக் கூறியவர் பா. ரஞ்சித். மேலும் பா. ரஞ்சித் தான் தலித் சமூகத்தில் இருந்து வந்தவர் என்பதை தொடர்ந்து வெளிப்படுத்துவது என்பது தலித் சமூகம் வரலாறு நெடுகிலும் சுரண்டப்பட்டது, வஞ்சிக்கப்பட்டது, இவ்வளவுக்குப் பின்னரும் சகோதரத்துவத்துடன் மற்றவர்களை அரவணைக்க தயாராகவே இருக்கிறது என்பதன் ஒரு எடுத்துக்காட்டு என்று பலரும் கூறுகிறார்கள்.

கருப்பின நடிகர்கள்: ஹாலிவுட் படங்களில் கருப்பின மக்களின் வாழ்க்கை குறித்து பேசிய பல படங்கள் அம்மக்களை வெள்ளையர்கள் எப்படி சுரண்டினார்கள், அடிமைப்படுத்தினர் என்பது உள்ளிட்டவற்றை படமாக்கி உள்ளார்கள். கருப்பின மக்களின் வாழ்க்கையை படமாக்கும் போது, அதில் கருப்பின நடிகர்களும் நடிகைகளுமே நடிக்கிறார்கள். அவரகளால் தங்கள் மூதாதையர்கள் கடந்து வந்த பாதையை உணர்ந்து நடிக்க முடிகிறது. இப்படியான படங்கள் மட்டுமல்லாமல் ஜனரஞ்சகமான படங்களிலும் கருப்பின கதாபாத்திரங்களை தவிர்க்க முடியாது.
ரசிகர்கள் கோரிக்கை: இப்படி இருக்கையில் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் கருப்பின நடிகர்கள், நடிகைகள் இருப்பது போல, தலித் நடிகர்களும் நடிகைகளும் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வருவதை பார்க்க முடிகிறது. இப்படியான கோரிக்கை வைப்பவர்கள் சில நுட்பமான விஷயங்களை கவனிக்க வேண்டியது முக்கியமாகிறது. வெள்ளை இனத்தவர்கள் மற்றும் கருப்பினத்தவர்கள் என இருவருக்கும் இடையில் 'நிறம்' மிகவும் முக்கியமான வித்தியாசமாக உள்ளது. இதனால் கருப்பினத்தவர்களின் வாழ்க்கையை படமாக்கும் போது கருப்பின நடிகர்கள் நடிகைகளை நடிக்க வைக்க வேண்டிய கட்டாயம் இயல்பாகவே ஏற்பட்டுவிடுகிறது.

வித்தியாசம் என்ன?: ஆனால் இந்தியா போன்ற நாட்டில், தலித்திற்கும் தலித் அல்லாதவருக்கும் இருக்கும் வித்தியாசம் என்ன என்று கேட்டால், இதுதான் வித்தியாசம் என்று அறிவியல் பூர்வமாக, ஏற்புடைய காரணத்தையோ, வித்தியாசத்தையோ சொல்ல முடியுமா? முடியாது, அண்மையில் இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட ஹோம்பவுண்ட் படத்தை பார்த்த வெளிநாட்டவர்கள் பலரும் சாதி மற்றும் அதன் செயல்பாட்டை புரிந்து கொள்ள முடியாமல் குழப்பம் அடைந்தனர். இருவருமே ஒரே மாதிரிதானே இருக்கிறார்கள், இருவரின் நிறத்தில், தோற்றத்தில், தலைமுடியின் நிறத்திலுமே கூட வித்தியாசம் இல்லையே? அப்படி இருக்கும் போது இதில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு எப்படி வருகிறது என்ற கேள்வியை குழப்பத்துடனே முன் வைத்தார்கள்.

தலித் நடிகர்கள?: இந்த கேள்விதான் வரலாற்று நெடுகிலும் எழுப்பப்படும் கேள்வியாக உள்ளது. ஏற்புடையதில்லை என்றாலும் கருப்பின மற்றும் வெள்ளையினத்தவர்களுக்கு இடையே நிறத்தை பாகுபாடாக கருதுகிறார்கள். ஆனால் இங்கு அதுவுமே இல்லை எனும்போது, தலித் கதாபாத்திரங்களுக்கு தலித் அல்லாத நடிகர்களை நடிக்க வைப்பது என்பதில் எந்த சிக்கலும் இல்லை. அதேபோல் கதாபாத்திரத்தின் தன்மை, பின்னணி என எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு தான் நடிகர்கள் நடிக்கிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். மேலும் தலித் நடிகர்களும் நடிகைகளும், தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் பலரது கவனத்தை ஈர்க்கிற முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் வரிசையில் இல்லாதது ஏமாற்றமே! அது வரும் காலங்களில் மாறும் என்று உறுதியாகச் சொல்லலாம்.


Click it and Unblock the Notifications











