திரிஷா விவகாரம்.. வாய் திறக்காத விஜய், அஜித்..டென்ஷனாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: திரிஷா பற்றி படுமோசமாக விமர்சித்த மன்சூர் அலிகானை பலர் கண்டித்து வரும் நிலையில், அஜித், விஜய் மற்றும் முன்னணி நடிகர்கள் கண்டிக்காதது ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் திரிஷா, கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், சாண்டி என பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் மன்சூர் அலிகான், லியோவின் பிளாஷ் பேக் சொல்லும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சர்ச்சைப்பேச்சு: அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், லியோ படத்தில் திரிஷாவுடன் நடிக்கிறேன் என்று தெரிந்ததும் கண்டிப்பாக அவருடன் ஒரு படுக்கையறை காட்சி இருக்கும். குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டதுபோல் அவரையும் தூக்கி போடலாம் என்று நினைத்தேன். ஆனால் த்ரிஷாவை கண்ணில் கூட காட்டவில்லை என்று பேசியது சர்ச்சைக்குள்ளானது.
சரியான பதிலடி: மன்சூர் அலிகான் பேசியதை வன்மையாக கண்டித்த த்ரிஷா, ஆணாதிக்க மனநிலை மற்றும் அவமரியாதை செய்யும் விதம், பெண் வெறுப்பை பரப்பும் வகையிலும் அவரது பேச்சு இருக்கிறது. அவருடன் சேர்ந்து இனி நடிக்கமாட்டேன். அவர் மனித குலத்துக்கே இழுக்கு என சரியான பதிலடி கொடுத்து இருந்தார். மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், குஷ்பு, மாளவிகா மோகனன் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
மன்னிப்பு கேட்கவேண்டும்: மேலும், தென்னிந்திய நடிகர் சங்கமும், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ அந்த ஊடகம் முன்பு உண்மை மனதுடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம். இல்லையென்றால் நடிகர் சங்கத்தில் இருந்து அவர் விலக்கப்படுவார் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதற்கு பதில் அளித்த மன்சூர் அலிகான், தப்பு செய்தால் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் நான் தவறு செய்யவில்லை. அந்த வீடியோவை எடிட் செய்துவிட்டார்கள் என்று பேசிய இருந்தார்.
நெட்டிசன்கள் கண்டனம்: மேலும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி திரிஷா பற்றி மன்சூர் அலிகான் கூறிய கருத்து கண்டிக்கத்தக்கது என்று கூறியிருந்தார். திரிஷா விவகாரத்திற்கு தெலுங்கு நடிகரே குரல் கொடுத்து இருக்கும் நிலையில் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய், சூர்யா என எந்த நடிகர்களும் கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பதை நெட்டிசன்கள் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











