சூர்யா படத்தை ஏன் தடுக்குறீங்க..1000 கோடி வசூல் பண்ணியிருக்கும்? புலம்பும் ரசிகர்கள்!
சென்னை: ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் மே 14ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் படம் எதிர்பார்த்தபடி வெளியாகவில்லை. சூர்யாவின் படத்தை திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்த நிலையில், படம் வெளியாகாதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. தியேட்டரில் படம் பார்க்க காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதற்கிடையில், கருப்பு படம் ரிலீஸ் ஆகாத விரக்தியில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி கண்ணீர் மல்க பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், படம் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து உணர்ச்சிபூர்வமாக பேசியிருந்தார். இந்நிலையில், அனைத்து பிரச்சனைகளும் சரிசெய்யப்பட்டு கருப்பு திரைப்படம் இன்று வெற்றிகரமாக திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. சென்னை ரோகினி திரையரங்கில் காலை 9 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து நடிகை திரிஷா, இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் பார்த்தனர்.

ரசிகர்கள் வேதனை: அப்போது படம் பார்த்த ரசிகர் ஒருவர் பேசுகையில், "கருப்பு படம் நேற்று வெளியாகாமல் போனது எங்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. நேற்று படம் வெளியாகி இருந்திருந்தால், நிச்சயமாக ஆயிரம் கோடி வசூலை எட்டியிருக்கும். சூர்யாவின் படம் வெளியாகும் போது எல்லாம் சிலர் அவரை குறிவைத்து தாக்குகிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. சூர்யா நடித்த கங்குவா படம் நல்ல படம். ஆனால், அந்த படத்தையும் பலர் தேவையில்லாமல் விமர்சித்தார்கள். அதேபோல தற்போது கருப்பு படத்திற்கும் சிலர் எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கியுள்ளனர். நேற்று ஆர்.ஜே. பாலாஜி கண்ணீர் வடித்தார். அவரின் ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் இந்த படம் இன்று பதில் சொல்லும். ஒரு படம் நன்றாக இல்லை என்றால் அழலாம். ஆனால் படம் வெளியாகாததால் ஒருவர் அழுவது, அவர் அந்த படத்திற்காக எவ்வளவு உழைத்திருப்பார் என்பதை காட்டுகிறது.
பிளாக்பஸ்டர் ஹிட்: ஆர்.ஜே. பாலாஜி இந்த படத்திற்காக மிகுந்த கடுமையான உழைப்பை கொடுத்திருக்கிறார். கண்டிப்பாக இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும். கருப்பண்ணசாமியே தியேட்டரில் வந்து இறங்கியிருக்கிறார். அதனால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும். சூர்யா ஒரு நடிகராக மட்டுமல்லாமல், மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல உதவிகளை செய்து வருகிறார். இருந்தும் ஏன் அவரை சிலர் எதிர்க்கிறார்கள் என்பது புரியவில்லை என உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார். இந்த ரசிகரின் பேச்சு தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications