3 விரல்கள் இல்லை.. ஊசி, மருந்து என படாதபாடுபட்ட விஜயகாந்த்.. இறப்புக்கு பின் வெளிவரும் சோகம்!
சென்னை: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாக ஊசி, மருந்து மாத்திரை என்று படாதபாடுபட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
தேமுதிக நிறுவனரான விஜயகாந்த் கடந்த 26ந் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுவிட திணறியதால் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அவர் உயிரிழந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து நேற்று விஜயகாந்தின் உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள், திரையுலகினர், கலைத் துறையினர் இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாக விஜயகாந்த் உடல், சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இறுதி ஊர்வலம் மதியம் 1 மணி அளவில் புறப்பட்டு, கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
ரசிகர்கள் கவலை: சினிமா, அரசியல் புயல் போல இருந்த விஜயகாந்த், 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பின் அவர், பழைய விஜயகாந்தாக பார்க்க முடியவில்லை. நிற்பது, நடப்பதில் தடுமாற்றம், பேசுவதில் தடுமாற்றம் என நாளுக்கு நாள் அவர் உடல் நிலை மோசமாகி வெளியிலே தலைகாட்டாமல், இருந்தார். தீபாவளி, கிறிஸ்துமஸ்,பொங்கல் போன்றவற்றுக்கு கட்சியின் சார்பில் இருந்து பெயர் அளவிற்கு ஒரு அறிக்கை மட்டுமே வந்தது.
கால் விரல் அகற்றம்: சட்டசபையில் எதிர்கட்சி இருக்கையில் அமர்ந்து இடிபோல் முழக்கமிட்ட விஜயகாந்த் பேசமுடியாமல் தடுமாறியதைப் பார்த்து ரசிகர்கள் கலங்கி போனார்கள். உடல்நலக் குறைவு காரணமாக தொடர்ந்து மருந்துகள் உட்கொண்டு வந்த விஜயகாந்துக்கு 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காலில் வீக்கம் ஏற்பட்டது. ரத்த ஓட்டம் சீராக இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து, மருத்துவர்களின் ஆலோசனை பேரில் காலில் இருந்த 3 விரல்கள் அகற்றப்பட்டன.
நீரழிவு நோய்: இதுகுறித்து தேமுதிக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தது. அதில், நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது. மேலும், கால் விரல்கள் அகற்றப்பட்ட செய்தியை தேமுதிக தலைமை அலுவலம் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதையடுத்து, விஜயகாந்த் உடல்நலம் பெற அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இப்படி ஊசி, மருந்து மாத்திரை என படாதபாடுபட்டு வந்த விஜயகாந்தின் உயிர் நேற்று பிரிந்தது.


Click it and Unblock the Notifications











