வக்கிரமும் வன்மமும் - பா. ரஞ்சித்தும் மாரி செல்வராஜும்.. இந்த கேள்விகள் அவர்களை நோக்கி மட்டும் ஏன்?
சென்னை: பா. ரஞ்சித் தயாரித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வெளியான படமான பைசன் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ளது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பைசன் சூப்பர் டூப்பர் ஹிட் படம். இந்த படத்தை பாராட்டிய அரசியல் தலைவர்களும் இருக்கிறார்கள், படத்தை எதிர்த்த அரசியல் குளிர் காயும் தலைவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் மட்டும் இல்லாமல், சமூக வலைதள வாசிகள் தொடங்கி சில பிரபலங்களும் கூட படத்தை பாராட்ட மனமில்லாமல், புள்ளி வைத்தும் ஒரு அளவுக்கு மேல் பா. ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜை தனிப்பட்ட ரீதியாக விமர்சித்ததையும் பார்க்க முடிந்தது.
சமூக அவலங்களை கேள்வி கேட்கும் படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வந்து கொண்டேதான் இருக்கின்றன. அதாவது ஊழலுக்கு எதிரான படங்கள், பெண்கள் பாதுகாப்பு குறித்த படங்கள் போன்ற படங்களுக்கு எதிர்ப்பு என்பது, பெரும்பாலும் கிடையாது. அவை அனைத்தும் கதையாக பாராட்டுக்களைத் தான் குவித்துள்ளன. இப்படி இருக்கும்போது, ஜாதிய எதிர்ப்பு படங்களுக்கு மட்டும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்று இரு பிரிவாக ரசிகர் பட்டாளம் / சமூகம் பிரிந்து நிற்கிறது. ஜாதி எதிர்ப்பு படங்களை தமிழ் சமூகம் பாராட்டாமலோ கொண்டாடாமலோ இல்லை. இதே மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படம் கொண்டாடப்பட்டது. ஆனால் கர்ணன், மாமன்னன், பைசன் படங்கள் ஆதிக்க சாதியினரை நோக்கி கேள்வி எழுப்புகிறது. திருப்பி அடிக்கிறது. சாதிய கட்டுமானத்திற்குள் அடங்க மறுக்கிறது. அதனால் அந்த படங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்புகிறது.

ஜாதிய எதிர்ப்பு படங்களை தடை செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி, அந்த படத்தின் இயக்குநர்களுக்கு மிரட்டல் விடுக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் எல்லாம் சொல்லும் ஒரே டெம்ப்ளேட் வசனம், " ஜாதி எல்லாம் முன்பு இருந்தது. ஆனால் இன்றைக்கு அனைத்து ஜாதி மக்களும் சகோதரர்களாக பழகி வருகிறார்கள். இப்போது வந்து ஜாதி படங்களை எடுத்து, மக்களை பிரிக்கிறார்கள். இப்போது எல்லாம் யாருங்க ஜாதி பாக்குறாங்க?" என்பதுதான்.
கண்டித்ததே இல்லை: இப்படி விமர்சிக்கும் யாருமே, தமிழ் சினிமாவில் ஒரு ஜாதியை உயர்வாகவும் மற்றொரு ஜாதியை மிகவும் தாழ்வாகவும் காட்சிப்படுத்திய படங்களையும், ஜாதிப் பெருமைகளை வெறிகளாக பேசிய படங்களையும் கண்டித்ததே கிடையாது. ஆனால் ஜாதிய எதிர்ப்பு படத்திற்கு மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வந்து எதிர்த்து விடுகிறார்கள். பா. ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் போன்றவர்களால் தான் தமிழ் சினிமா பின்னோக்கி நகர்கிறது என்று விமர்சிக்கிறார்கள். அவர்களுக்கு பா. ரஞ்சித்தே சரியான பதிலடியை கொடுத்திருந்தார். அதாவது, தமிழ் சினிமாவை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் வேறு யாருக்குமே இல்லையா என்ற, நாங்கள் மூவர் தான் தமிழில் படங்கள் இயக்குகிறோமா என்ற கேள்வியை கேட்டு பதிலடி கொடுத்திருந்தார்.

தரமான பதிலடி: அதேபோல் சில மாதங்களுக்கு முன்னர் திரைத்துறையில் முக்கியமான பிரபலம் ஒருவர், மாரி செல்வராஜும், பா. ரஞ்சித்தும் தாங்கள் ஒடுக்கப்பட்டோம் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் பயன்படுத்துவது எல்லாம் பல லட்சங்கள் மதிப்புள்ள சொகுசுக் கார்கள் என்று விமர்சித்தார். இந்த விமர்சனத்திற்கு பொட்டில் அறைந்தது போல, பதிலடி கொடுத்திருந்தார் மாரி செல்வராஜ். அதாவது, தன்னிடம் இருக்கும் கார்களைப் பற்றி பேசிக் கொண்டு, ஒவ்வொரு காரும் எப்போது வாங்கப்பட்டது, அந்த கார் வாங்கும்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டே சிறப்பு பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதுவும் அந்த பிரபலம் விமர்சித்த சில வாரங்களுக்கு உள்ளாகவே இந்த பேட்டி அமைந்தது. கபாலி படத்தில் ரஜினி பேசும் வசனமான நான் கோட் போடுவது உனக்கு பிரச்னை என்றால் நான் கோட் போடுவேன்டா என்று கூறுவதைப் போல, நச் பதிலடியாக இருந்தது.

வன்மம்: இவர்களை நோக்கி வரும் அடுத்த கேள்விகளில் ஒன்று, தமிழ் நடிகைகளை, நடிகர்களை இவர்கள் பயன்படுத்துவதில்லை என்பது. இந்த கேள்வி மற்ற பெரிய நடிகர்களை நோக்கியோ, இயக்குநர்களை நோக்கியோ எழுப்பப்படவில்லை. அப்படியே கேள்வி எழுப்பினாலும் அதை, பொத்தாம் பொதுவாக பேசிவிடுகிறார்கள். ஆனால் மாரி செல்வராஜ், பா. ரஞ்சித்தை நோக்கி இந்த கேள்விகள் மிகச்சாதாரணமாக எழுப்பப்பட்டு வருகிறது. இவர்களை நோக்கி கேள்விகள் எழுப்பக் கூடாது என்றில்லை. ஆனால் தனது படத்தில் பணியாற்றும் கலைஞர்களின் பூர்வீகம் தமிழ்நாடா என்று சோதித்து அதை, உறுதி செய்து கொண்டு கலைஞர்களை தேர்வு செய்தால், அது அவர்கள் பின்பற்றும் தத்துவத்திற்கே எதிரானது.
நோக்கம்: தமிழரா என்று தெரிந்து கொண்டு வாய்ப்பு அளிப்பது என்பது, கிட்டத்தட்ட எந்த ஜாதி என்று பார்த்து வாய்ப்பளிப்பதற்குச் சமம். இயக்குநர்களாக தாங்கள் வார்க்க நினைக்கும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிகர்களைத்தான் தேர்வு செய்வதுதான் சரியே!. மேலும் இப்படி கேள்வி எழுப்புவது என்பது தமிழ் சமூகத்திற்கு எதிராக இவர்களை சித்தரிக்க முயல்வதன் அறிகுறிதான். இந்த முயற்சிகள் எல்லாம் என்றைக்கும் வெற்றி பெறாது என்பதற்கு இவர்கள் இயக்கும் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பும், பாக்ஸ் ஆபீஸ் வெற்றிகளும் சாட்சி. மேலும் இவர்களுக்கு சினிமாவில் வெற்றி பெறுவது நோக்கமல்ல, மாறாக மக்களை அரசியல்படுத்துவதைத்தான் நோக்கமாக கொண்டுள்ளார்கள். அதில் தொடர்ந்து வெற்றி கண்டே வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











