இதை பிஜிஎம்முன்னு சொன்னா ஹார்மோனியம் கூட நம்பாது! விடுதலையால் சிக்கிய ராஜா "சார்".. இப்படி ஆகிடுச்சே
சென்னை: விடுதலை 1 படத்தின் பிஜிஎம் மிக மோசமாக இருப்பதாக இணையத்தில் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றன.
இயக்குனர் வெற்றிமாறன்.. இதுவரை தோல்வி படங்களே கொடுத்தது இல்லை என்ற சிறப்பான ஸ்ட்ரீக்கை வைத்து இருக்கிறார். அப்படிப்பட்ட வெற்றிமாறன்.. இந்த முறையும் விடுதலை முதல் பாதி மூலம் வெற்றியை பதிவு செய்து இருக்கிறார்.
உலகில் எடுத்த படங்களில் எதிலும் தோல்வியே சந்திக்காத ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே இருக்கிறார்கள். நாடின் லபாக்கி என்ற லெபனான் இயக்குனர் போன்ற ஒரு சிலர் மட்டுமே சினிமா துறையில் தான் எடுத்த படங்களில் எல்லாம் வெற்றியை பதிவு செய்து இருக்கிறார்கள். அந்த வகையில்.. லெபனானுக்கு எப்படி நாடினோ.. நம்ம ஊருக்கு வெற்றிமாறன்.

படம் ஹிட்
சூரி நடிப்பு, பாப்பாவாக வரும் பாவனி ஸ்ரீ என்று எல்லோரின் நடிப்பும் படத்தில் அசத்தல். நெஞ்சை பிளிற வைக்கும் விசாரணை காட்சிகள், பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள், வர்க்க ஏற்றத்தாழ்வால் ஏற்படும் மோதல், மைனிங் நிறுவனத்தின் வருகை, சவ் சவ் சாப்பிட்டு உணவிற்கு கஷ்டப்படும் போலீசார், போலீசில் அதிகார படிநிலை மோதல்கள் என்று இந்த படம் முழுக்க ஏகப்பட்ட வெளிப்படையான அரசியல்களும், உள்ளார்ந்த அரசியல்களும் உள்ளன. ஹான்.. வெற்றிமாறனிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். படம் ஏற்கனவே வெற்றிபெற்றது உறுதியாகிவிட்டது.. ஆனால் படத்தில் ஒரு விஷயம் மட்டும் துருத்திக்கொண்டு நிற்பதாக ரசிகர்கள் கடுமையான விமர்சனங்கள் வைத்து வருகின்றன.. அந்த விஷயம் இளையராஜா "சார்"!

இளையராஜா
படத்தின் பிஜிஎம் மிக மோசமாக இருப்பதாக இணையத்தில் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றன. படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளன. இரண்டு பாடல்களுமே டாப் நாட்ச். ஆனால் படத்தில் பிஜிஎம் எந்த இடத்திலும் ஒட்டாமல்.. மொசைக் தரையில் வழுக்கி ஓடும் கோலி குண்டு போல தனியாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் ஒரு பக்கம் தனியாகவும்.. பிஜிஎம் ஒரு பக்கம் தனியாகவும் ஓடிக்கொண்டு இருக்கிறது. முக்கியமாக "வாத்தியாரை" தேடி போலீஸ் செல்லும் கிளைமேக்ஸ் காட்சிகளில் காட்சிகள் ஒரு மாதிரியும்.. பிஜிஎம் வேறு மாதிரியும் இருப்பதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. சேசிங் காட்சிகளுக்கு.. எதோ போர் காட்சிகளுக்கு வைப்பது போன்ற பிஜிஎம்மை வைத்து இருப்பது தியேட்டரிலேயே கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

பிஜிஎம்
இதை இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது என்று சொல்வது போல இதை பிஜிஎம்முன்னு சொன்னா ஹார்மோனியம் கூட நம்பாது என்னும் அளவிற்குத்தான் மிக மோசமாக படத்தின் பிஜிஎம் அமைந்து உள்ளது. அசுரன் படத்தில் பாதி முழுக்க தனுஷ் அண்டர் பிளே செய்து இருப்பார். படத்தின் இன்டர்வல் சீனுக்கு முன் அவர் சண்டை போடும் காட்சியில் வரும் ஒரு பிஜிஎம்தான் அந்த படத்தையே தூக்கி நிறுத்தியது. அந்த ஒரு காட்சியில் படத்தின் மொத்த களமும் மாறியது. படத்தையே அந்த ஒரு தீம் புரட்டி போட்டது. ஒரு படத்திற்கு பிஜிஎம் எவ்வளவு முக்கியம் என்பதை அந்த ஒரு காட்சியை பார்த்தால் தெரிந்துவிடும்.

மாற்ற வேண்டும்
ஆனால் அதே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 1 படத்தில்.. பிஜிஎம் மிக மோசமாக சொதப்பி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இளையராஜா லெஜண்ட்தான்.. லெஜண்ட்தான்.. ஆனால் இந்த படத்தின் பின்னணி இசைக்கும் காட்சிகளுக்கும் எங்குமே சம்பந்தம் இல்லையே பாஸ்.. நீங்கள் நம்பலைனாலும் அதான் நிசம்! இதை வெற்றியின் தீவிர ரசிகர்கள் பலரும் இணையத்தில் கொட்டி தீர்த்து உள்ளனர். இளையராஜாவிடம் இருந்து விடுதலை அடையுங்கள் அப்போதுதான் விடுதலை 2 வெற்றிபெறும் என்று நெட்டிசன்கள் வெற்றிக்கும் அறிவுரை கூட தொடங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











