இந்தி திணிப்பு எதிர்ப்புக்கே சென்சார்.. கண்ணை மறைக்கும் ரசிக மனப்பான்மை.. விஜய் அக்கறை செலுத்துவாரா?
சென்னை: துப்பாக்கி கொடுத்து தூக்கிவிட்ட விஜய்க்கே துரோகம், சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் ஆனால் ஸ்கிரீன் கிழியும், எல்லாவற்றிற்கும் பின்னால் திமுக இருக்கிறது, இந்தி திணிப்பு எதிர்ப்பு படமான பராசக்தி படத்திற்கே சென்சார் கொடுத்துவிட்டார்கள், ஜன நாயகனுக்கு கொடுக்கவில்லை என்றால் அதில் இருந்தே தெரிகிறதே பாஜகவும் திமுகவும் தான் மறைமுக கூட்டணியில் இருக்கிறார்கள் என பல விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் இணையத்தில் முன் வைத்து வருகிறார்கள்.
விஜய் ரசிகர்கள் வெறுமனே விஜய் ரசிகர்களாக இருந்து மட்டுமே இப்படியான விமர்சனங்களை முன் வைத்தார்கள் என்றாலே, ஒரு சமூகமாக இதை சீர் படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. ஆனால் நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்களும் இவ்வாறு பேசுவது என்பது, பதற்றத்தையும் கூடவே ஏமாற்றத்தையும் கொடுக்கிறது.

நடிகர் விஜய் தனது முதல் மாநில மாநாட்டில், மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல் இந்தி திணிப்புக்கு எதிராக கையெழுத்து போட்ட போது கூட, அவரது கட்சிக்கு தேர்தல் வியூக ஆலோசனை வழங்குபவராக இருக்கும் பிரசாந்த் கிஷோர் கையெழுத்து போடவில்லை. இப்படியான சம்பவங்கள் எல்லாம் தவெகவின் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளது. இரண்டாவது மாநில மாநாட்டில் இருந்து பேரறிஞர் அண்ணாவின் புகைப்படத்தையும் விஜய் தொடங்கி அவரது கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து முன்னிலை படுத்தி வருகிறார்கள்.
சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி உள்ள பராசக்தி படம் தமிழ்நாட்டில் நடைபெற்ற மொழிப்போர் அதாவது இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்ட கதைக்களத்தை வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தயாரித்த நிறுவனம் டான் பிக்சர்ஸ், திமுகவுடன் நெருக்கமாக இருக்கும் நிறுவனம் என்று கூறப்படுகிறது என்ற காரணம் தொடங்கி தொடக்கத்தில் சொன்ன மற்ற காரணங்களுக்காகவும் பராசக்தி படத்தை எதிர்ப்பது என்பது விஜய் ரசிகர்களின் அரசியல் அறியாமையை தான் வெளிப்படுத்துகிறது.

அரசியல் நிலைப்பாடு: அசோகர் காலம் தொட்டு இன்று வரை தெற்காசிய நிலப்பரப்பில் தமிழ்நாடு எப்போதுமே அரசியல் நிலைப்பாட்டில், நாகரீக நிலைப்பாட்டில் ஒரு படி முன்னரே நின்றுள்ளது. அப்படியான தமிழ்நாடு, ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின்னர் ஒருங்கிணைந்த இந்தியாவில் தமிழ்நாடு, தேசிய கட்சியான காங்கிரஸை புறம் தள்ளி அதற்கு காரணமே, இந்தி திணிப்பு எதிர்ப்பு தான். அப்படியான இந்தி திணிப்பில் பங்காற்றியவர்களில் பேரறிஞர் அண்ணாவுக்கும் அவர் தொடங்கிய திமுகவும் தனி பங்கு உள்ளது. அப்படியான கதைக்களத்தை முன்னிருத்து வரும் பராசக்தி படத்திற்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பது என்பது முழுக்க முழுக்க ரசிக மனப்பான்மைதான்.
ரசிக மனப்பான்மை: விஜய் படத்துடன் வெளியாகிறது என்ற காரணத்திற்காக பராசக்தி படத்தை எதிர்ப்பது என்பது முற்றிலும் ரசிக மனப்பான்மையின் வெளிப்பாடுதான். ரசிகர்கள் தான் இப்படி புரிந்து கொள்ளாமல், அதாவது அரசியல் நிலைப்பாட்டில் தவறிழைக்கிறார்கள் என்று பார்த்தால் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் நடவடிக்கைகள் அதிருப்தியை தருகிறது. தனது படத்திற்கான சென்சார் பெரும் பிரச்னை நடைபெற்று வருகிறது என்பது ஊர் அறிந்த விஷயம்.

விஜய் ரசிகர்கள்: அப்படி இருக்கும்போது, மொழிப்போர் குறித்த படத்தை தனது ரசிகர்களான விர்ச்சுவல் வாரியர்ஸ் படத்தையும் படக்குழுவையும் மோசமாக விமர்சிப்பதை தவிருங்கள் என்று அறிவுறுத்தி இருக்கலாம். அரசியல் நிகழ்வில் விஜய் மொழிப்போர் தியாகிகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய போதாவது, அவரது கட்சித் தொண்டர்களாக உள்ள அவரது ரசிகர்கள் மொழிப்போர் தியாகிகள் குறித்து தேடித் தெரிந்து கொள்ளவில்லயே என்று, ரசிமனப்பான்மையில் இருப்பவர்களை கடிந்து கொள்ளவும் முடியாத சூழல் இது. தற்போது தான் தமிழ்நாடு முழுவதும் சுமந்து செல்லும் அண்ணாதுரை பேச்சை படத்தில் வசனமாக வைத்ததை நீக்கச் சொல்லியுள்ளது சென்சார் நிறுவனம். ஒரு அரசியல்வாதியாகவும் சினிமாகாரராகவும் படக்குழுவுக்கு நம்பிக்கை அளிக்கும் படியான வார்த்தைகளைச் சொல்லி இருந்தால், சிவகார்த்திகேயனே திரையரங்கை அலங்கரித்தாலும் விஜய் தமிழ்நாட்டு மக்களால் அரசியல் களத்தில் அலங்கரிக்கப்பட்டு இருப்பார். ஆனால் விஜய் அதைத் தவற விட்டுவிட்டார்.
பொறுப்பு: டான் பிக்சர்ஸ், சிவகார்த்திகேயன் போன்ற காரணங்களுக்காக பராசக்தி படத்தை விஜய் ரசிகர்கள் இவ்வளவு விமர்சிக்கிறார்கள் என்றாலும் அது அரசியலாகவே தவறுதான். இதுவே சூர்யா தயாரித்து நடித்து புறநானூறு என்ற பெயரில் படம் உருவாகி விஜயின் ஜன நாயகனுடன் ரிலீஸ் ஆகிறது என்றால் விஜய் ரசிகர்கள் அமைதியாக இருந்திருப்பார்களா என்றால், நிச்சயம் வாய்ப்பில்லை. சிவகார்த்திகேயனை விமர்சிப்பதை போலவே சூர்யாவையும் விமர்சித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதற்கு கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் பல சம்பவங்கள் உதாரணத்திற்கு உள்ளது. இதை மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும் செய்து வந்தாலும், இப்படியான செயல்களில் ஈடுபடும் ரசிகர்களை கொண்ட நடிகர்களில் அவற்றை நிறுத்தச் சொல்லும் நடிகராக விஜய் உருவெடுக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது.



Click it and Unblock the Notifications











