twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏன் ரஜினி, கமலிடம் சண்டை போட்டேன்?- எஸ்பி முத்துராமன்

    By Shankar
    |

    ரஜினியிடம் கமலிடம் சண்டை போட்ட அனுபவங்கள் பற்றி மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஒரு படவிழாவில் பேசினார்.

    திருமாருதி பிக்சர்ஸ் சார்பில் மாருதி டி பாலகிருஷ்ணன் தயாரிக்கும் படம் 'விரைவில் இசை'.

    அறிமுக இயக்குநர் வி.எஸ்.பிரபா இந்தப் படத்தை இயக்குகிறார். மகேந்திரன் நாயகனாக நடிக்கிறார். ‘விழா'வுக்குப்பின் அவர் நடிக்கும் படம் இது. அவருடன் ‘உடும்பன்' நாயகன் திலீப்பும் நடிக்கிறார்.

    ஒரு நாயகி ஸ்ருதி ராமகிருஷ்ணா, இன்னொரு நாயகி அர்ப்பணா. மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் இரண்டாவது மகன் சஞ்சய் சங்கர் இதில் முழுநீள நகைச்சுவை நடிகராக அறிமுகமாகிறார்.

    இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று கமலா திரையரங்கில் நடைபெற்றது.

    பாடல்களை எஸ்.பி.முத்துராமன் முன்னிலையில் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் வெளியிட தயாரிப்பாளர் கேயார், சங்கர் கணேஷ் பெற்றுக் கொண்டனர்.

    எஸ்பி முத்துராமன்

    எஸ்பி முத்துராமன்

    விழாவில் .எஸ்.பி.முத்துராமன் பேசும்போது, "இங்கே அபிராமி ராமநாதன் தன்னை நடிக்க நான் கூப்பிடவில்லையே என்று வருத்தப்பட்டார். அவரை நடிக்கக் கூப்பிட்டிருந்தால் ஒரு நல்ல அபிராமி மால் கிடைத்திருக்காது. ஒரு நல்ல தயாரிப்பாளர் கிடைத்திருக்க மாட்டார். இன்று படம் எடுப்பது சுலபம். வெளியிடுவது சிரமம். இந்த நிலையில் இங்கே புதிதாக படம் தயாரிக்க வந்துள்ள தயாரிப்பாளர் திருமாருதி பிக்சர்ஸ் டி.பாலகிருஷ்ணனை வரவேற்கிறேன்.

    ரஜினிக்கு இருந்த சவால்

    ரஜினிக்கு இருந்த சவால்

    ரஜினி திரையுலகில் நுழையும் போது அவருக்கு ஒரு சவால் இருந்தது.
    அப்போது நடிப்பில் கொடி கட்டிப்பறக்கும் சிவாஜி இருந்தார். நினைத்த தோற்றத்தில் மாற்றிக் கொண்டு நடிக்கும் கமல் இருந்தார்.

    'இவர்களுக்கு இடையில் நான் புகுந்து எப்படி வெற்றி பெறுவது என்று யோசித்தேன். அதனால்தான் எனக்கென்று ஒரு ஸ்டைல், ஸ்பீடு, வேகம் என்பதை என் பாணியாக சேர்த்துக் கொண்டு நடித்தேன். வெற்றி பெற்றேன்' என்று இதைப் பற்றி ரஜினியே என்னிடம் கூறியுள்ளார்.

    ஜெய்சங்கர்

    ஜெய்சங்கர்

    நான் ரஜினியை வைத்து 25 படங்கள் இயக்கி இருக்கிறேன். மொத்தம் 70 படங்கள் இயக்கியிருக்கிறேன் ஆனால் நான் அறிமுகமான 'கனி முத்துப்பாப்பா' படத்தின் நாயகர்களாக முத்துராமன், ஜெய்சங்கர் நடித்தார்கள். நான் இயக்கிய முதல் கலர் படம் 'துணிவே துணை' நாயகனும் ஜெய்சங்கர்தான்.

    முதல் படத்தில் நடித்தபோது அவர்கள் பரபரப்பாக இருந்தார்கள். நான் அவசரப்பட்டு எடுத்தேன். என்னைக் கூப்பிட்டு அவர்கள் அப்போது சொன்னார்கள். 'அவசரப்பட வேண்டாம்.நினைக்கிற மாதிரி எடுங்க.. நிதானமாக இருங்க. தேதிகள் கூடுதலாக தருகிறோம்' என்றார்கள்.

    படங்கள் வெளியீட்டுச் சிக்கலில் இருந்த போது பேசிய பணத்தில் பாதிதான் வாங்கிக் கொள்வார் ஜெய்.

    ரஜினி தந்த முக்கியத்துவம்

    ரஜினி தந்த முக்கியத்துவம்

    ஏவிஎம்மின் 'முரட்டுக்காளை'யில் அவரை வில்லனாக்கிய போது எங்களை நம்பி அவர் நடிக்க ஒப்புக் கொண்டார். இதையறிந்த ரஜினி அவரை மதிக்கும் வகையில் ஜெய்யையும் சம அளவில் விளம்பரப் படுத்தச் சொன்னார். அந்த வில்லன் பாத்திரத்தை வழக்கமானதாக, சாதாரணமாக அமைத்து விடவேண்டாம், தனக்கு இணையாக அவரது பாத்திரத்தையும் பெரிதாக அமைக்க வேண்டும் என்றார். இப்போது இந்தப் படத்தில் அவர் மகன் நடிக்கிறார். மகிழ்ச்சி.

    ரஜினி - கமலை வைத்து 35 படங்கள்

    ரஜினி - கமலை வைத்து 35 படங்கள்

    நான் ரஜினியை வைத்து 25 படங்கள் இயக்கியிருக்கிறேன். கமலை வைத்து10 படங்கள் இயக்கியிருக்கிறேன். நடிகர் திலகத்தை வைத்து 3.படங்கள் இயக்கியிருக்கிறேன்.

    இது எல்லாம் எப்படி? எங்களுக்குள் அந்தளவுக்கு புரிதல் இருந்தது.

    எங்களுக்குள் சண்டையே வந்ததில்லையா? ரஜினியுடன் கமலுடன் நான் போடாத சண்டைகளா? இந்த சண்டையைப் பார்த்தவர்கள் இவர் இனி ரஜினி படம் எடுக்கமாட்டார். இதுவே இவர்களது கடைசி படம் என்றுதான் பேசுவார்கள். ஆனால் அவர்கள் எனக்குத்தான் அதிகப் படங்கள் கொடுத்தார்கள். எங்களுக்குள் தனிமனித ஈகோ இல்லை. நீயா நானா போட்டி இல்லை.

    என் சாதனையா?

    என் சாதனையா?

    படம் காட்சி எப்படி சிறப்பாக வரவேண்டும். என்பதற்கான கருத்து மோதல்தான் அது.

    எது சரியென்று நான் அவர்களைச் சமரசம் செய்யவேண்டும். இல்லையேல் அவர்கள் சொல்வதில் சமரசம் ஆகவேண்டும். எல்லாமே படத்துக்காக மட்டும்தான்.
    20 ஆண்டுகளில் 70 படங்கள். என் சாதனையா? அல்ல. அது என் படக் குழுவினரின் சாதனை. அது என் படக்குழுவினரின் வெற்றி.

    அதேபோல இந்தக் குழுவும் ஒற்றுமையுடன் இருந்து வெற்றி பெறவேண்டும்," என்று வாழ்த்தினார்.

    கேயார்

    கேயார்

    கேயார் பேசும்போது "இங்கு நிறையபேர் வந்திருக்கிறீர்கள். இதில் வியாபார நோக்கமில்லை. அன்புக்கும் நட்புக்கும் வந்திருக்கிற உங்கள் வாழ்த்து வெற்றியைத் தேடித் தரும். ஜெய்சங்கர் தன்னைச் சுற்றி இருப்பவர்களை வாழ வைத்தவர். அவரது மகன் நடிக்க வந்திருக்கிறார்.

    அவர் பல தயாரிப்பாளர்களின் ரிடர்ன் செக்குகளை வைத்திருந்தவர். இருந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு உதவியவர். மனித நேயமுள்ளவர்.

    கொஞ்சமா பேசு

    கொஞ்சமா பேசு

    இந்த மகேந்திரன் எனது 'கும்ப கோணம் கோபாலு' படத்தில் நடித்த போது அவனது நடிப்பைப் பார்த்து பாண்டியராஜனே மிரண்டார். இன்று நாயகனாகி இருப்பது மகிழ்ச்சி. ஆனால் அதிகம் பேசுவான். இனி குறைத்துக் கொள். நீ வளர வேண்டும். ரஜினி சார் கொஞ்சம்தான் பேசுவார். அதிகம் அர்த்தம் இருக்கும். நீயும் குறைவாகப் பேசு," என்று கூறி வாழ்த்தினார்.

    அபிராமி ராமநாதன்

    அபிராமி ராமநாதன்

    தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் பேசும்போது, "அப்போது எங்கள் அப்பா பிரபலமான பைனான்சியராக இருந்தார். எல்லாப் படங்களும் அவரிடம் பணம் வாங்கி எடுத்தார்கள். ஆனால் எஸ்.பி.எம்.. கமலை நடிகராக்கியவர். என்னையும் நடிக்க வைத்திருக்கலாமே,'' என்றார்.

    நடிகர் அருண்விஜய் பேசும்போது "மகேந்திரன் என் தம்பி மாதிரி. தோற்றத்திலும் என்னை மாதிரியே இருப்பான். வளரட்டும்," என்றார்.

    பேரரசு

    பேரரசு

    இயக்குநர் பேரரசு பேசும்போது, "இயக்குநர்கள் பாலுமகேந்திரா, மகேந்திரன், ஒய்.ஜி.மகேந்திரன் போன்று பல வெற்றி பெற்ற மகேந்திரன்கள் வரிசையில் இந்த மகேந்திரனும் சேரட்டும்.

    சினிமாவில் வாரிசுகள் வருவது கஷ்டம். வாரிசுகள் வருவது தவறில்லை. இதில் வரும் உதவி இயக்குநர்கள் பற்றிய பாடல் தேசியகீதமாய் வெற்றிபெறும் ''என்றார்.

    பரத்

    பரத்

    நடிகர் பரத் பேசும்போது, " வெற்றிகள் பெற்ற பல மகேந்திரன்கள் உண்டு. நம் கேப்டன் மகேந்திர சிங்டோனி போல இந்தமகேந்திரனும் வெற்றி பெறட்டும் "என்றார்.

    சங்கர் கணேஷ்

    சங்கர் கணேஷ்

    இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் பேசும்போது "நாங்கள் ஒலிப்பதிவு முடிந்து இரவு 2 மணிக்கு நடந்துதான் போவோம் .எல்லாரும் காரில் போய் விடுவார்கள். இந்தக் கமலா தியேட்டர் இடம் வயல் காடாக இருக்கும் .பேய்க்கு பயந்து கொண்டு சத்தமாகப் பாடிக் கொண்டு போவோம். அப்படி கஷ்டப்பட்ட நாட்கள் அவை. மகேந்திரனும் போராடியவன். கஷ்டப்பட்டால் உயரலாம்," என்றார்.

    ஷக்தி

    ஷக்தி

    நடிகர் ஷக்தி பேசும்போது. "மகேந்திரன் என்னை விட அதிகம் பேசுவான். குழந்தை நட்சத்திரமாக நடித்ததால் அதிகம் பேசுவோம். சிம்புவுக்கு நடனம் வரும். எனக்கு நடிக்க கொஞ்சம் வரும். இவன் அதுக்கும் மேல.. எல்லாம் செய்வான். நாட்டாமையிலே இவன் எதுக்கு சாட்சி சொன்னான் தெரியுமா? ஏன்னா இவன் அதுக்கும் மேல..." என்றார்.

    பங்கேற்றவர்கள்

    பங்கேற்றவர்கள்

    நிகழ்ச்சியில் வி.எஸ்.பிரபா, ஒளிப்பதிவாளர் விபி சிவானந்தம், அறிமுக இசை அமைப்பாளர் எம்.எஸ்.ராம், நடிகைகள் அர்ப்பணா, சஞ்சனாசிங், ஒய்.ஜி மகேந்திரன், நாயகன் மகேந்திரன்,அபஸ்வரம் ராம்ஜி, ஸ்டண்ட் மாஸ்டர் பாண்டியன், பாடலாசிரியர்கள். அண்ணாமலை, வைரபாரதி, நடன இயக்குநர் ஷ்யாம் சுந்தர், ஷாண்டி, ஸ்டுடியோ 9 சுரேஷ், யூடிவி தனஞ்ஜெயன் மயில்சாமி, பாண்டியராஜன். ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தயாரிப்பாளர் மாருதி பாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.

    English summary
    In a audio release function veteran director SP Muthuraman has shared his experience, clashes with Superstar Rajini and Kamal Hassan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X