விஜயகாந்த் செய்தால் மாஸ்.. ராதிகா செய்தால் நாக்கு மேல பல்லு போட்டு பேசும் ஊரு சார் இது.. என்ன விஷயம்?
சென்னை: மறைந்த 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் இறுதி ஊர்வலத்தில் நடிகை ராதிகா சரத்குமார் செய்த ஒரு செயல் தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. ஒருபுறம் அவரது செயலுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், மறுபுறம் "இதே செயலை ஒரு ஆண் நடிகர் செய்திருந்தால் 'மாஸ்' என்று கொண்டாடியிருப்பார்கள்" என்று ராதிகாவுக்கு ஆதரவாகவும் ஏராளமானோர் குரல் கொடுத்து வருகின்றனர்.
பாக்யராஜ் மறைந்த நாளிலேயே அவரது உடல் மருத்துவமனையில் இருந்து இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டபோது, யூடியூப் சேனல்கள், புகைப்படக் கலைஞர்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் என ஏராளமானோர் கேமராக்களுடன் சூழ்ந்து கொண்டனர். அதோடு, திரைப்பிரபலங்களை பார்க்க ரசிகர்களும் பெருமளவில் திரண்டதால், குடும்பத்தினரால் கூட சுதந்திரமாக நகர முடியாத சூழல் ஏற்பட்டது.
எங்களுக்கு கொஞ்சம் தனிப்பட்ட நேரம் கொடுங்க: அந்த நேரத்தில் மிகவும் உடைந்த மனநிலையிலிருந்த நடிகை ராதிகா, கண்ணீருடன் ஊடகங்களை நோக்கி, "உங்களுக்கு டி.ஆர்.பி. வேண்டுமென்றால் நாங்கள் நடித்துக் கொடுக்கிறோம். ஆனால் எங்களுக்கான தனிப்பட்ட நேரத்தை தயவு செய்து கெடுக்காதீர்கள்" என்று கையெடுத்து கும்பிட்டுக் கேட்டுக் கொண்டார். அந்த வீடியோ வெளியானபோது பலரும் அவரது வேதனையை புரிந்து கொண்டனர்.

ஆனால், ராதிகாவின் வேண்டுகோளுக்குப் பிறகும் கூட்ட நெரிசலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பாக்யராஜின் இறுதி ஊர்வலத்தின் போதும் கேமராக்கள், செல்போன்கள், நேரலையில் ஒளிபரப்பும் யூடியூப் சேனல்கள் என கூட்டம் நெருங்கி வந்ததால், இறுதி மரியாதை செலுத்த வந்த திரைப்பிரபலர்களுக்கே நடந்து செல்ல முடியாத நிலை உருவானது.
வேதனையின் உச்சத்தில் ராதிகா: இதனால் பொறுமை இழந்த ராதிகா, தனது அருகில் நின்று கொண்டிருந்தவர்களை கைகளால் விலக்கி, தனக்கும் அருகில் வந்திருந்தவர்களுக்கும் வழி ஏற்படுத்திக் கொண்டு நடந்தார். இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், "பாரதிராஜா மறைவின் போதும் இப்படித்தான் முன் வந்து ஓவர் சீன் போட்டார். இப்போ பாக்யராஜ் மறைவிலும் அதே செய்கிறார்", "ஆக்ஷன் கதாபாத்திரத்துக்கா ஆடிஷன் எடுக்கிறார்? இல்லை வில்லி ரோலுக்கா?" என்று சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
விஜயகாந்த் செய்தால் மாஸ்.. ராதிகா செய்தால்?: ஆனால் இந்த விமர்சனங்களுக்கு எதிராக மற்றொரு தரப்பினர் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர். அவர்கள் சுட்டிக்காட்டுவது நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் செயலைத்தான்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்தபோது, படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு நேரடியாக வந்த விஜயகாந்த், இறுதி ஊர்வலம் முடியும் வரை களத்திலேயே இருந்து ஏற்பாடுகளை கவனித்தார். ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு தனது கையாலும், கையில் இருந்த துண்டாலும் கூட்டத்தை விலக்கி பாதை அமைத்த வீடியோக்கள் இன்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
அப்போது அந்த செயலுக்கு "இதுதான் தலைமை... இதுதான் கேப்டன்... செம்ம மாஸ்" என்று பாராட்டிய பலரும், இன்று அதேபோன்ற சூழ்நிலையில் வேதனையில் இருந்த ராதிகாவை மட்டும் குறிவைத்து விமர்சிப்பது ஏன் என்ற கேள்வியை அவரது ஆதரவாளர்கள் எழுப்பி வருகின்றனர்.
சுஹாசினியும் வெடித்தார்: ராதிகா மட்டுமல்ல, நடிகை சுஹாசினியும் பாக்யராஜின் உடலை அருகில் நின்று செல்போனில் படம் பிடிக்க முயன்றவர்களை பார்த்து கடும் கோபமடைந்தார். "செருப்பாலே அடிப்பேன்... கொஞ்சமாவது மரியாதை இருக்கட்டும்" என்று அவர் ஆவேசமாக பேசிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனியுரிமையா? டிஆர்பியா?: ஒரு கலைஞரின் இறுதி அஞ்சலி நிகழ்வில், குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் அமைதியாக அஞ்சலி செலுத்துவதற்கு கூட இடமில்லாத அளவுக்கு கேமராக்களும் கூட்ட நெரிசலும் உருவாக வேண்டுமா என்ற கேள்வி தற்போது மீண்டும் எழுந்துள்ளது. அதே நேரத்தில், "ஒரே செயலை ஒரு ஆண் செய்தால் 'மாஸ்' என்றும், ஒரு பெண் செய்தால் 'ஓவர் சீன்' என்றும் சொல்வது ஏன்?" என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. பாக்யராஜின் இறுதி ஊர்வலம் தற்போது ஒரு பிரபலத்தின் மறைவை மட்டுமல்ல, துயர நிகழ்வுகளில் தனியுரிமை, ஊடக நெறிமுறைகள் மற்றும் பாலின அடிப்படையிலான பார்வை ஆகியவை குறித்த புதிய விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications