ஏஜிஎஸ் ரெய்டில் சிக்கிய அந்த முக்கிய 'ஃபைல்'.. விஜயிடம் வருமான வரித்துறை விசாரிப்பதன் பரபர பின்னணி!
Recommended Video
சென்னை: மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் விஜயை வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்று விசாரிக்க காரணம் ஏஜிஎஸ் நிறுவனத்தில் கைப்பற்றிய சில முக்கிய ஆவணங்களே காரணம் என கூறப்படுகிறது.
வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் ஏஜிஎஸ் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
திரைத்துறையின் முக்கிய பைனான்சியர் மற்றும் தயாரிப்பாளரான அன்புச் செழியன் வீட்டிலும் அலுவலகத்திலும் ரெய்டில் இறங்கியது வருமான வரித்துறை. சென்னையில் மட்டும் இன்று 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மாஸ்டரில் பிஸி
வருமான வரித்துறையின் இந்த அதிரடி சோதனைகளால் தமிழ்த் திரைத்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜயிடமும் விசாரணையை தொடங்கியது வருமான வரித்துறை. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் பட ஷுட்டிங் வேலையில் பிஸியாக உள்ளார் நடிகர் விஜய்.

முறைப்படி சம்மன்
இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சி நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி மோதும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜயின் கையில் முறைப்படி விசாரணைக்கான சம்மனை வழங்கினர்.

ஜாகுவார் கார்
பின்னர் அங்கிருந்த நடிகர் விஜயை தனியாக அழைத்து சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சில நிமிடங்கள் தனியாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நடிகர் விஜயை அவரது காரிலேயே சென்னைக்கு அழைத்து வர முடிவு செய்தனர். தங்களின் இன்னோவா காரில் அழைத்த வருமானத்துறையினரிடம் தனது ஜாகுவார் காரிலேயே வருவதாக நடிகர் விஜய் கூறினார்.

விசாரணைக்கு காரணம்
இதனைத் தொடர்ந்து அதற்கு அனுமதித்த அதிகாரிகள் அவருடன் அவரது காரிலேயே சென்னைக்கு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜயிடம் இந்த கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த காரணம் ஏஜிஎஸ் குழுமத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட சில முக்கிய ஆவணங்களே என கூறப்படுகிறது. நடிகர் விஜய் கடைசியாக ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்திருந்தார்.

கணக்கில் குளறுபடி
அந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் விஜய் சம்பந்தப்பட்ட சில ஆவணங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட், படத்திற்கு இறுதியாக செலவான தொகை, நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளம், படத்தின் லாபம் உள்ளிட்ட கணக்குகளில் குளறுபடி இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

நேரில் சம்மன்
இதனை தொடர்ந்தே நடிகர் விஜயிடம் சற்றும் தாமதிக்காமல் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது வருமான வரித்துறை. இதற்காக மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெறும் நெய்வேலி என்எல்சியின் 2 வது சுரங்கப் பகுதிக்கு சென்ற அதிகாரிகள் நேரில் சென்று சம்மன் வழங்கி விசாரணையை தொடங்கியிருக்கின்றனர்.

ரசிகர்கள் அதிர்ச்சி
இந்த விசாரணை திருப்தியளிக்காத நிலையில் நடிகர் விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் கையோடு சென்னைக்கு அழைத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அழைத்து வந்த சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிது.


Click it and Unblock the Notifications











