போலிப் புனிதங்களை உடைத்த K. பாக்யராஜுக்கான அரசு மரியாதை.. விமர்சனங்களும் அதன் பின்னணியும்!
சென்னை: தமிழ் சினிமாவின் "திரைக்கதை மன்னன்" கே. பாக்யராஜ் மறைவுக்கு தமிழ்நாடு அரசு அரசு மரியாதை வழங்கியதைச் சுற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன. அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற சில வசனங்களையும் காட்சிகளையும் மட்டும் சுட்டிக்காட்டி, அரசு மரியாதை வழங்கியது சரியா என்ற கேள்வியை சிலர் எழுப்பி வருகின்றனர்.
ஆனால், ஒரு கலைஞரின் வாழ்நாள் சாதனையையும் சமூகத்திற்கு அவர் ஏற்படுத்திய தாக்கத்தையும் மறந்துவிட்டு, சில வசனங்களை மட்டும் வைத்து அவரை மதிப்பிடுவது சரியான அணுகுமுறை அல்ல என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
தமிழ் சமூகம் என்பது காதல், உடலியல், தாம்பத்தியம் போன்ற விஷயங்களை இன்று சிலர் நினைப்பதைப் போல எப்போதும் மறைத்து வைத்த சமூகம் அல்ல. சங்க இலக்கியங்களிலேயே அகம் மற்றும் புறம் என மனித வாழ்க்கை பிரிக்கப்பட்டது. அதில் அகப்பாடல்கள் காதல், பிரிவு, கூடல், ஊடல், தம்பதிகளின் மனநிலை உள்ளிட்ட உணர்வுகளை மிக இயல்பாகவும் நாகரிகமாகவும் பதிவு செய்துள்ளன. உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளில் கூட அறத்துப்பாலும் பொருட்பாலும் இணையாக காமத்துப்பால் இடம்பெற்றிருப்பது, காதலும் தாம்பத்தியமும் தமிழர் வாழ்க்கையின் இயல்பான அங்கமாக இருந்ததற்கான மிகப்பெரிய சான்றாக பார்க்கப்படுகிறது, இன்று வரை கொண்டாடப்படுகிறது.

அப்படிப்பட்ட இலக்கிய மரபைக் கொண்ட சமூகத்தில், குடும்ப வாழ்க்கைக்குள் நடக்கும் இயல்பான உரையாடல்களை திரையில் காட்டிய திரைக்கதை மன்னன் பாக்யராஜை மட்டும் "விரசம்" என்ற ஒரே வார்த்தையில் ஒதுக்குவது முரண்பாடான அணுகுமுறையே. அவர் உலகத்தில் இல்லாத புதிய விஷயங்களை பேசவில்லை; வீட்டுக்குள் பேசப்பட்டும், வெளியில் பேசத் தயங்கப்பட்டும் வந்த வாழ்க்கை உண்மைகளையே தனது திரைக்கதைகளில் பதிவு செய்தார்.
பளார் கேள்வி: பாக்யராஜின் படங்களில் இடம்பெற்ற பல வசனங்கள் இன்று மீண்டும் பேசப்படுவதற்குக் காரணம், அவற்றின் பின்னால் இருந்த சமூக விமர்சனம்தான். அதற்கு சிறந்த உதாரணமாக மௌன கீதங்கள் படத்தில் இடம்பெற்ற பிரபலமான காட்சியைக் கூட எடுத்துக் கொள்ளலாம். அலுவலகத்திற்குச் செல்லும் அவசரத்தில் இருக்கும் கணவனிடம் தனது ஜாக்கெட்டின் ஹூக்கை மாட்டிவிடுமாறு மனைவி கேட்க, அவர் மறுத்துவிடுகிறார். உடனே, "இதுவே ராத்திரியா இருந்தா எவ்வளவு வேகமா கழட்டுறீங்க?" என்று மனைவி கேட்கும் பதில் கேள்வி, வெறும் விரசமாகவும் 18+ஆகவும் மட்டுமே பார்க்கப்படுகிறது.
ஆனால் அந்த வசனத்தை ஆழமாகப் பார்த்தால், மனைவியின் தேவையைப் புரிந்துகொள்ளாத ஆணாதிக்க மனநிலைக்கு எதிராக வைக்கப்பட்ட கேள்வியாக இருப்பது புரியவரும். தனது விருப்பத்திற்காக மனைவியை நாடும் கணவன், அவளுக்குத் தேவைப்படும் சிறிய உதவியைக் கூட செய்ய மறுப்பதை ஒரே வரியில் கேள்விக்குள்ளாக்கியிருந்தார் பாக்யராஜ். இதுபோன்ற வசனங்கள் அவரது படங்களில் ஏராளமாக இடம்பெற்றுள்ளன.

ஆணாதிக்கம்: அவர் படங்கள் வெளியான காலகட்டத்தில், கணவன் தவறு செய்தாலும் மனைவி அமைதியாக சகித்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் பெரும்பாலான திரைப்படங்களின் வழக்கமாக இருந்தது. அந்த மரபை உடைத்து, கணவனின் தவறை நேருக்கு நேர் கேள்வி கேட்கும் பெண் கதாபாத்திரங்களை உருவாக்கிய இயக்குநர்களில் முக்கியமானவர் பாக்யராஜ். பொம்பள பொம்பளையா இருக்கனும், அடக்க ஒடுக்கமா இருக்கனும், பயபக்தியா இருக்கனும் என்ற அடிமைத்தனத்தை வலியுறுத்தும் வசனங்களை பாக்யராஜ் கையாளவில்லை. தம்பதிகளுக்கிடையேயான புரிதல், பாலியல் கல்வியின் அவசியம், குடும்ப உறவுகளில் உரையாடலின் முக்கியத்துவம் போன்ற விஷயங்களையும் அவர் நகைச்சுவை கலந்த திரைக்கதையின் மூலம் மக்களிடம் கொண்டு சென்றார்.
உத்வேகம்: திரைக்கதை அமைப்பு, வசனங்கள், கதாபாத்திர வடிவமைப்பு, குடும்பப் பின்னணியில் சமூகக் கருத்துகளை சொல்லும் திறன் என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பள்ளியை உருவாக்கியவர் பாக்யராஜ். அவரது படங்களைப் பார்த்து சினிமாவுக்கு வந்த இயக்குநர்களும் எழுத்தாளர்களும் இன்று ஏராளம். சமீபத்தில் வெளியாகி உள்ள கட்டா குஸ்தி 2 படத்தின் இயக்குநர் பேசும் போது கூட, கட்டா குஸ்தி படங்களை ஒருவர் உரிமை கொண்டாட முடியும் என்றால் அது கே. பாக்யராஜ் சாரால் தான் முடியும், அவர் தான் அதற்கு தகுதியானவர் என்று கூறி இருந்தார்.

பொருத்தம்: ஒரு கலைஞருக்கு அரசு மரியாதை வழங்கப்படுவது, அவரது வாழ்நாள் சாதனை, கலை உலகிற்கும் சமூகத்திற்கும் அவர் செய்த பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான். அந்த வகையில் தமிழ் சினிமாவின் கதை சொல்லும் மொழியையே மாற்றிய பாக்யராஜுக்கு வழங்கப்பட்ட அரசு மரியாதை பொருத்தமானதே என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதனால், ஒரு சில வசனங்களை மட்டும் தனியாக எடுத்துப் பார்த்து பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவுக்காக உழைத்த ஒரு படைப்பாளியின் ஒட்டுமொத்த பங்களிப்பை புறம் தள்ளுவது என்பது அறிவற்ற சமூகத்திற்கான அடையாளமாகிவிடும். மாறாக, அவரது படைப்புகளின் சமூகப் பின்னணியையும் அவர் உடைத்த பழைய கற்பிதங்களையும் புரிந்துகொள்வதே அவசியம். அப்படி இருக்கையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு கொடுத்த அரசு மரியாதை என்பது சரியா தவறா என்ற வாதத்திற்குள் செல்வதே தவறு.


Click it and Unblock the Notifications