இதுக்காகவாவது ‘பிரபுதேவா’வுக்கும், மோகன்லாலுக்கும் வாழ்த்து சொல்லியிருக்கலாம் ஆண்டவரே!
பத்ம விருது பெற்ற நடிகர்கள் பிரபுதேவா மற்றும் மோகன்லாலுக்கு நடிகர் கமல் ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் இருந்து பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு நடிகர் கமல் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் சார்பில் இந்தாண்டு மொத்தம் 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பங்காரு அடிகளார், பிரபுதேவா, மதுரை சின்னப்பிள்ளை, நர்த்தகி நடராஜ், டிரம்ஸ் சிவமணி, சங்கர் மகாதேவன் உள்ளிட்டோரின் பெயர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவருமான கமல் டிவிட்டர் வாயிலாக தமிழகத்தில் இருந்து பத்ம விருதுகளுக்குத் தேர்வானவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதில், திருநங்கை நர்த்தகி நடராஜனுக்கு தனியே ஒரு பதிவும், மற்றவர்களுக்கு சேர்த்து ஒரு பதிவும் அவர் வெளியிட்டுள்ளார்.

பிரபுதேவா பெயர் இல்லை
ஆனால், இந்த இரண்டு பதிவிலேயும் நடிகர் பிரபுதேவாவின் பெயர் இல்லை. காரணம் பிரபுதேவாவுக்கு கர்நாடகா பிரிவில் விருது வழங்கப்பட்டிருப்பது தான் என டிவிட்டரில் கமல் ரசிகர்கள் சமாளித்து வருகின்றனர்.

கமலுடன் நடித்தவர்
கர்நாடகாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர் தான். கமலுடன் அவர் காதலா காதலா படத்தில் சேர்ந்து நடித்துள்ளார். அப்படி இருக்கையில் அந்த நட்பு அடிப்படையிலாவது பிரபுதேவாவிற்கு அவர் தனியே ஒரு வாழ்த்து தெரிவித்திருக்கலாம்.

கர்நாடகா பிரிவு
அப்படிச் செய்யாமல் கர்நாடகப் பிரிவு என்ற ஒரே ஒரு காரணத்திற்காக மட்டும் அவருக்கு வாழ்த்து சொல்லாமல் இருப்பது நாகரீகமாக இருக்குமா என்பதே ரசிகர்கள் மனதில் எழும் கேள்வி. உடன் நடித்தவர், தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர் என்ற முறையில் பிரபுதேவாவுக்கும் கமல் ஒரு வாழ்த்தை பதிவாக வெளியிட்டிருக்கலாம்.

மோகன்லாலுக்கு வாழ்த்து இல்லை
இதேபோல், மலையாள சினிமாவைச் சேர்ந்த மோகன்லாலும் தமிழில் சில படங்கள் நடித்துள்ளார். அவர் நடித்த த்ரிஷ்யம் படத்தைத் தான் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார் கமல். எனவே, பிரபுதேவாவிற்கும், மோகன்லாலுக்கும் தன்னோடு சினிமா வட்டாரத் தொடர்பில் உள்ளவர்கள் என்ற அடிப்படையிலாவது கமல் ஒரு வாழ்த்தை தட்டியிருக்கலாம் என்பதே ரசிகர்களின் கருத்து.


Click it and Unblock the Notifications











