தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகள் இல்லையா? மூன்று பெரிய படத்திலும் மலையாள நடிகைகள்!
சென்னை: தமிழ்..தமிழ் என வாய் ஓயாமல் பேசி வரும் தமிழ் இயக்குநர்களே தங்கள் படத்திற்கு தமிழ் நடிகைகளை தேர்வு செய்யாமல் மலையாள நடிகைகளை தேர்வு செய்து நடிக்க வைத்துள்ளார்கள். கடந்த வாரம் வெளியான தங்கலான், இந்த வாரம் வெளியான வாழை, கொட்டுக்காளி போன்ற படத்தில் முக்கிய ரோலில் மலையாள நடிகைகளே நடித்துள்ளனர்.
தங்கலான்: தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விக்ரமின் வித்தியாசமான நடிப்பில் வெளியான தங்கலான் படத்தை இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கி இருந்தார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்திருந்த இப்படத்தில், நடிகை பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு கிடைத்து வந்தாலும் கூட, வசூலில் பட்டையை கிளப்பியது. இந்த படத்தில் மலையாள நடிகையான பார்வதி திருவோத்து முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

வாழை: அது போல பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜின் நான்காவது படமான வாழை படம் நேற்று தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தில், கலையரசன், பொன்வேல், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா போன்ற பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படத்திலும் முதன்மை ரோலில் மலையாள நடிகையான நிகிலாவே நடித்திருந்தார்,

கொட்டுக்காளி: மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளை பெற்ற திரைப்படம் கொட்டுக்காளி. கூழாங்கல் திரைப்படத்தை இயக்கிய பி.எஸ். வினோத் ராஜ் இயக்கிய இப்படத்தில் சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நேற்று வெளியான இப்படத்தில் அன்னா பென், பெரிதாக எந்த வசனத்தையும் பேசாமல் பார்வையால் பேசி ஸ்கோர் செய்து விட்டார்.

திறமையான நடிகைகள் இல்லை? இப்படி தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த முக்கியமான படத்தில் மலையாள நடிகைகளே லீட் ரோலில் நடித்திருப்பது தமிழ் ரசிகர்கள் மனதில், தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகளுக்கு பஞ்சமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. ஆனால், தமிழ் சினிமாவில் பல திறமையான நடிகைகள் இருக்கும் போதும், புதுமுக நடிகைகளுக்கு, ஹிட் படங்கள் அமையாததாலும், அடுத்தடுத்து புதுப்பட வாய்ப்புகள் கிடைக்காததாலும், தொழில் போட்டி, படவாய்ப்புகளைத் தேடிப்பெறும் வழிமுறையில் பின்தங்கியிருப்பதாலும், பிரபல நாயகிகளாகி நீண்டகாலங்களுக்குத் திரையுலகில் நீடித்திருக்க முடிவதில்லை என சினிமா வட்டாரங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











