»   »  தமிழ் சினிமாவில் 2ம் பாகங்கள் தேறாதது ஏன்... ஏன் ...ஏன்?

தமிழ் சினிமாவில் 2ம் பாகங்கள் தேறாதது ஏன்... ஏன் ...ஏன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரும்பாலான ஹாலிவுட் படங்கள் அடுத்தடுத்த பாகங்கள் வந்து மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றன, இதற்கு சமீபத்திய உதாரணம் மிஷன் இம்பாஸிபிள் இதுவரை 5 பாகங்கள் முறையே வெளிவந்து மாபெரும் வெற்றியைப் பெற்று இருக்கின்றன.

ஆனால் தமிழ்த் திரையில் பார்ட் 2 படங்கள் குறைவான அளவிலேயே எடுக்கப் படுகின்றன.அவ்வாறு எடுத்தாலும் கூட அவை வெற்றியைப் பதிவு செய்ய பெரும்பாலும் தடுமாறுகின்றன அல்லது தவறி விடுகின்றன, இதற்குக் காரணம் என்னவென்று பெரும்பாலும் யாரும் அலசுவது இல்லை.

Why Part 2 Movies Less in Tamil Cinema?

ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் ஒரு படம் திரைக்கு வந்து ஒருவாரம் ஓடினாலே அதை வெற்றித் திரைப்படமாக அங்கீகரித்து விடுகிறார்கள், முதல் பாகமே ஓடாத நிலையில் பார்ட் 2 படங்கள் எடுத்து கையை சுட்டுக் கொள்ள எந்த தயாரிப்பாளரும் முன்வருவதில்லை.

தமிழ் சினிமாவில் பார்ட் 2 படங்களின் வரவு குறைவாக இருப்பது ஏன் என்று ஒரு சில முன்னணி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் கேட்டபோது, அவர்கள் சில முக்கியமான கருத்துக்களை முன்வைத்தனர்.

அவற்றை இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்..

இரண்டாம் பாகம் சாதகமே - இயக்குநர் ஹரி

சாமி, சிங்கம் போன்ற வெற்றிப் படங்களின் இயக்குநர் ஹரி கூறும்போது "ஒரு வெற்றி பெற்ற படத்தின் அடுத்த தொடர்ச்சியை எடுக்கும் போது படத்திற்கு ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு விடுகிறது, 2 ம் பாகம் எடுக்கும் போது அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க நிறைய சிரமப்பட வேண்டியதில்லை. அதே போன்று மக்களிடம் கதாபத்திரங்களை அறிமுகம் செய்ய மெனக்கேட வேண்டியதில்லை, நான் மேலே கூறிய விசயங்கள் அனைத்தும் 2 ம் பாகத்திற்கு சாதகமான விஷயங்கள்.

பாதகமான விஷயங்கள்

படத்திற்கு பாதகமான விஷயங்கள் என்று பார்த்தால் மக்கள் 2 ம் பாகத்தில் நிறைய புதுமையான விஷயங்களை, சுவாரசியங்களை எதிர்பார்க்கிறார்கள். அவற்றை சரியான அளவில் கொடுக்க முடியாமல் போகும்போது மக்கள் மத்தியில் படம் வரவேற்பு பெறத் தவறிவிடுகிறது.

சி.வி.குமார் தயாரிப்பாளர்

சூது கவ்வும், பீட்சா, இன்று நேற்று நாளை போன்ற வெற்றிப் படங்களின் தயாரிப்பாளர் சி.வி.குமார் கூறும் போது "ஒரு படத்தின் 2 ம் பாகம் தொடங்கும் போது முதல் பாகத்தின் முடிவில் இருந்து வித்தியாசமாக ஆரம்பிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். நாம் சற்று வித்தியாசமாக கொடுத்தால் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார்கள். உதாரணத்திற்கு நான் தயாரித்த பீட்சா திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது, ஆனால் அதன் தொடர்ச்சியாக நான் தயாரித்த வில்லா 2 மக்களிடம் வரவேற்பு பெறவில்லை.

2 ம் பாகம் சாதகமே

நான் ஒரு படத்தின் கதையைக் கேட்கும்போதே அதன் 2 ம் பாகத்தை தயாரிக்க வாய்ப்பு இருக்கிறதா என்றுதான் பார்க்கிறேன். தற்போது சூது கவ்வும், இன்று நேற்று நாளை மற்றும் தெகிடி ஆகிய படங்களின் 2 ம் பாகத்தை தயாரிக்கும் முடிவில் இருக்கிறேன்.

பார்த்திபன் நடிகர்/இயக்குநர்

தமிழ்த் திரையின் நடிகர்களில் ஒருவரும் வித்தியாசமான இயக்குனருமான பார்த்திபன் கூறும்போது "தமிழ்த் திரையில் 2 ம் பாகங்கள் என்பது ஒரு அரிதான விஷயமாகவே இன்றுவரை உள்ளது. ஒரு படம் 2 ம் பாகம் எடுப்பதும் எடுக்காததும் அதன் வெற்றியைப் பொறுத்தே முடிவாகிறது.

இங்கு வாய்ப்புகள் குறைவு

பெரும்பாலான கதைகளில் 2 ம் பாகம் எடுப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. நான் இயக்கிய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்,திரைப்படம் வெற்றி பெற்றாலும் கூட அதன் 2 ம் பாகத்தை எடுப்பது கடினமான ஒரு செயலாகவே உள்ளது, ஏனெனில் 2 ம் பாகம் எடுக்கும்போது பட்ஜெட் பெரும்பாலும் அதிகரித்து விடும். நிறைய தயாரிப்பாளர்கள் என்னை புதிய பாதை படத்தின் 2 ம் பாகத்தை எடுக்கக் கோருகின்றனர். ஆனால் நான் இயக்கினால் அது 2 ம் பாகமாக இருக்குமே தவிர புதிய பாதையின் தொடர்ச்சியாக இருக்காது.

தனஞ்ஜெயன் தயாரிப்பாளர்

படங்களின் தொடர்ச்சிகளை எடுக்க நிறையத் திட்டமிட வேண்டும், தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரை யார் நடிக்கிறார்கள் என்று பார்க்கிறார்களே தவிர என்ன கதை என்று பார்க்க மாட்டார்கள். ஹாலிவுட் படங்களான பேட்மேன், சூப்பர்மேன் படங்களின் வரிசையில் முகமூடி படத்தைத் தயாரித்தேன், அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கலாம் என்று திட்டமிட்டபோது முதல் பாகம் சரியாகப் போகாததால் அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டேன்.

மகிழ் திருமேனி இயக்குநர்

1970 களில் இருந்தே ஹாலிவுட்டில் படங்களின் தொடர்ச்சியை எடுக்க ஆரம்பித்து விட்டார்கள், உதாரணத்திற்கு ஹாலிவுட்டில் சக்கைப் போடு போட்ட காட்பாதர் திரைப்படம் அடுத்தடுத்த பாகங்கள் எடுத்தபோது அதை விளக்குவதற்கு காரணங்கள் இருந்தன. நான் மட்டுமல்லாது இளைய தலைமுறை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அடுத்தடுத்த பாகங்களை இயக்க முன்வரவேண்டும்.

பழைய கதை புதிய வடிவங்களில்

இயக்குனர் கவுதம் மேனன் நடிகர் விஜயுடன் இணைந்து யோஹன் திரைப்படத்தைத் தொடங்கினார், அடுத்தடுத்த பாகங்களை எடுக்கும் எண்ணத்துடன் இருவரும் கைகோர்த்தனர் ஆனால் என்ன காரணத்தினாலோ படம் தொடரவில்லை. பெரும்பாலும் 2 ம் பாகம் எடுக்கும்போது பழைய திரைக்கதையை புதிய வடிவங்களில் தருகின்றனர் அதனை மக்கள் விரும்புவதில்லை.

English summary
Less Franchise Movies in Tamil Industry - Reasons.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil