Coolie Review: கூலி நல்லா இருக்கு.. ஆனால் நல்லா இல்லை.. படம் பார்த்தவர்கள் இப்படி சொல்ல காரணம் என்ன?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, ஆமிர் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கூலி படம் இன்று அதாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படம் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்டாலும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் தமிழ்நாட்டிற்கு முன்னதாகவே படம் வெளியாகிவிட்டது. இப்படி இருக்கும்போது அங்கு படம் பார்த்த ரசிகர்கள் படம் எப்படி உள்ளது என்பது குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இதில் படம் நன்றாக இருக்கிறது எனவும், படம் சுமார் என்றும், படத்தை ஒருமுறை பார்க்கலாம் என்றும், படம் மொக்கை, விடாமுயற்சி, தக் லைஃப் படத்திற்கு பின்னர், தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் மிகப்பெரிய அடியைச் சந்திக்கவுள்ள படம் என்று எல்லாம் சிலர் பதிவிட்டு வருகிறார்கள். படம் நன்றாக உள்ளது, ஆனால் படத்தில் இதுதான் பிரச்னை என பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

எங்கு பிரச்னை: எனவே படத்தில் என்ன பிரச்னை, ஏன் படம் நன்றாக உள்ளது எனக் கூறும் ரசிகர்களே படம் பெரிய அளவுக்கு இல்லை என்றும் கூறுகிறார்கள் என்பது பலரது கேள்வியாக உள்ளது. அதாவது படம் பார்த்த ரசிகர்கள் தெரிவிப்பது, படத்தை விக்ரம் படம் அளவுக்கு இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் படம் அப்படி இல்லை. ரஜினி படமான நன்றாக உள்ளது. ஆனால் லோகேஷ் கனகராஜின் இதற்கு முந்தைய படங்கள், அவற்றின் திரைக்கதையுடன் ஒப்பிடுகையில் இந்த படம் அந்த அளவுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்.
LCU: லோகேஷ் கனகராஜ் தனது லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் படங்கள் எடுக்க கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் போது, அதில் இருந்து வெளியே வந்து படம் எடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தால், மற்ற படங்களின் திரைக்கதையின் தாக்கம், அதாவது லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் திரைக்கதையின் தாக்கம் இந்த படத்தில் வந்துவிடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். அதனால் தான் கூலி படத்தின் திரைக்கதை சொதப்ப காரணம் எனவும் கூறப்படுகிறது.

அழுத்தம்: இது மட்டும் இல்லாமல், தமிழில் இருந்து ஒரு பான் இந்தியா படம் போக வேண்டும் என்று தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கூறியதும் லோகேஷ்க்கு கூடுதல் பொறுப்புகளை தலையில் சுமக்க வைத்திருக்கலாம். அதனால்தான் படம் நன்றாக இருக்கிறது எனக் கூறும் ரசிகர்களே லோகேஷின் முந்தைய படங்களைப் போல இல்லை எனவும் விமர்சிக்க முக்கிய காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











