Vidaamuyarchi: அஜித் ரசிகர்கள் சிலருக்கு ஏன் விடாமுயற்சி பிடிக்கல.. அப்படி என்னதான் மிஸ்ஸிங்?
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் நேற்று அதாவது பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் விடாமுயற்சி. படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்டு, ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், ஆங்கிலப் படமான பிரேக் டவுன் படத்தின் அதிகாரப்பூர்வ, ரீமேக். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அஜித் ரசிகர்கள் சிலருக்கு இந்தப் படம் பிடிக்கவில்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு விடாமுயற்சி படம் பிடிக்காமல் போக காரணங்கள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
விடாமுயற்சி படத்தின் கதையைத் தேர்வு செய்த பின்னர் அஜித்தான் படத்தின் படப்பிடிப்பை அஜர்பைஜான் நாட்டில் நடத்தலாம் என அறிவுருத்தியுள்ளார். இதுமட்டும் இல்லாமல், இயக்குநர் மகிழ் திருமேனி இடமும், படக்குழுவினர் இடமும் அஜித் கூறிய முக்கியமான விஷயங்கள் என்றால், அது, " தனது வழக்கமான படங்களைப் போல் இல்லாமல் இந்தப் படம் இருக்கக் கூடாது. அதாவது தனக்கான மாஸ் காட்சிகள், மாஸான டயலாக்குகள் என எதுவுமே இருக்க கூடாது. முழுக்க முழுக்க தனது கம்ஃபர்ட் ஜோனில் இருந்து வெளியே ஒரு படம் செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

அஜித்தின் இந்த வார்த்தைகளை கருத்தில் கொண்டுதான் படத்தின் திரைக்கதையையும் காட்சிகளையும் படக்குழுவினர் அமைத்துள்ளனர். படத்தில் சண்டைக் காட்சிகளே ப்ரீ க்ளைமேக்ஸில் இருந்துதான் தொடங்குகிறது. அஜித்தை இதுபோன்று பார்த்தே பல ஆண்டுகள் ஆகிறது. மேலும் படத்தின் திரைக்கதை சுவாரஸ்யமானதாக இருந்தாலும், பரபரப்பு குறைவாகவே உள்ளது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
மாஸான காட்சிகள் : வழக்கமாக அஜித்தின் படம் என்றால், மாஸான ஓபனிங் காட்சி, படத்தில் அவ்வப்போது மாஸான என்ட்ரி காட்சிகள், தியேட்டரையே அலறவிடும் டயலாக்குகள், படத்தின் தீம் மியூசிக்கினை இசைக்கவிட்டு அஜித் நடந்து வரும் காட்சிகள், வில்லனைப் பார்த்து அஜித் விடும் லுக், கையில் துப்பாக்கியோ அல்லது வேறு எதாவது ஆயுதத்தையோ வைத்து வில்லன்களை அடித்து துவைப்பது என இதுபோன்று, ரசிகர்களை சீட்டிலேயே உட்காரவிடாமல் ஆட்டம்போட வைக்கும் காட்சிகள் நிறைந்த படங்களையே, அஜித் ரசிகர்கள் கடந்த பல ஆண்டுகளாக பார்த்து வருகின்றனர்.

விமர்சனம்: காதல் மன்னனாக இருந்த அஜித்தை, தல, அல்டிமேட் ஸ்டார் போன்ற அந்தஸ்திற்கு கொண்டு வந்து நிறுத்திய படங்கள் எல்லாம் மேலே பட்டியலிடப்பட்ட காட்சிகள்தான். ஆனால் விடாமுயற்சி படத்தில் இதுபோன்ற காட்சிகள் என எதுவுமே இல்லை. இதற்கு முன்னர் அஜித் இதேபோல் ஒரு படத்தில் தனது வழக்கமான பாணி சினிமாவில் இருந்து முற்றிலும் வேறுபட்ட கதைக்களத்தில் நடித்த படம், நேர் கொண்ட பார்வை. அந்தப் படத்திலும் கூட, அஜித் ரசிகர்களுக்காக ஒரு சண்டைக் காட்சி வைக்கப்பட்டது. நேர்கொண்ட பார்வை படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தது.

மகிழ் திருமேனி: படம் குறித்து புரோமோசன்களில் பேசும்போது, இயக்குநர் மகிழ் திருமேனி கூறியது, 'இந்தப் படம் அஜித்தின் வழக்கமான படங்களைப் போல் இல்லாமல், மாஸான காட்சிகள், வசனங்கள் என எதுவுமே இருக்காது. கதையும் திரைக்கதையும் தரமானதாக இருக்கும் என தெரிவித்திருந்தார். இதை அறிந்து கொள்ளாத ரசிகர்கள், படத்தை வழக்கமான மசாலா படமாக இருக்கும் என எதிர்பார்த்து வந்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் சினிமா ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications











