பேரழகன், அயன் எல்லாம் அடுத்தது தான்.. AVM சரவணனை பார்த்து சூர்யா தேம்பித் தேம்பி அழ காரணம் என்ன தெரியுமா?
சென்னை: மொத்த தமிழ் திரையுலகமும் AVM சரவணன் மறைவு குறித்து தான் பேசிக் கொண்டுள்ளது. தமிழ் சினிமாவின் ஜாம்பவான். அவர் ஒரு வார்த்தை சொன்னால் அதை தட்டிக் கழித்துவிட்டு நகரும் பிரபலங்களே இங்கு இல்லை எனும் அளவுக்கு திரையுலகில் அனைவராலும் மதிக்கப்பட்டவர் AVM சரவணன். இவர் இன்று அதாவது டிசம்பர் 4ஆம் தேதி வயது மூப்பு காரணமாக மறைந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் சென்னை வடபழனியில் உள்ள AVM ஸ்டுடியோவுக்கு படையெடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் அவரது அப்பா சிவக்குமார் என இருவரும் ஒன்றாக வந்து அஞ்சலி செலுத்தினர். அப்போது சூர்யா மிகவும் மனமுடைந்து தேம்பித் தேம்பி அழுதார். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அஞ்சலி செலுத்திய பின்னர் சூர்யாவின் அப்பா சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் பகிர்ந்து கொண்ட தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

சிவக்குமார் பேசுகையில், " நான் கடந்த 1965ஆம் ஆண்டு AVM நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டேன். எனது உண்மையான பெயர் பழனிசாமி. ஆனால் AV மெய்யப்பன் தான் எனது பெயரை சிவக்குமார் என்று மாற்றினார். முதல் படத்திலேயே எனது காட்சிகள் பெரும்பாலும் வெட்டி எடுக்கப்பட்டு விட்டது. அது எனக்கு மன வருத்தத்தை கொடுத்தது. இதனால் நான் உடைந்து அழுது கொண்டு இருந்தேன்.
சிவக்குமார்: இதைப் பார்த்த AVM சரவணன் என்னிடத்தில் வந்து, உங்களுடன் நடித்த நடிகை உங்களை விட வயதில் மூத்தவர் போல காட்சி அளித்தார். அதனால் தான் அப்பா (AV மெய்யப்பன்) உங்கள் காட்சிகளை நீக்கி விட்டார். எனவே நீங்கள் வருத்தப்பட வேண்டாம். விரைவிலேயே உங்களுக்கு நமது நிறுவனம் தயாரிக்கும் படத்திலேயே நல்ல வேடம் கொடுக்கிறோம் என்று தெரிவித்தார். அதேபோல் 1968ஆம் ஆண்டு உயர்ந்த மனிதன் படத்தில் நடித்தேன். என்னை நடிக்க வைத்தது, AVM சரவணன் சார் தான்.

சூர்யாவின் உண்மையான பெயர்: அவரது நினைவாகத்தான் எனது மகன் சூர்யாவுக்கு நிஜப் பெயர் சரவணன் என்று வைத்தேன். எனக்கு முதல் படத்தில் ரூபாய் 1000 சம்பளமாக கொடுத்தார். ஆனால் எனது மகனுக்கு பேரழகன் படத்தில் எனது மகன் கேட்ட சம்பளத்தை கொடுத்தார்" என்று கூறினார். சிவக்குமார் இவ்வாறு தெரிவித்தது பலருக்கும் புருவம் உயர வைத்தது.
காரணம்: அவரது பெயரை தனக்குச் சூட்டியதை நடிகர் சூர்யாவுக்கு அவரது தந்தை எப்படியும் பலமுறை சொல்லி இருப்பார். இதை நினைத்தும் அவரது தயாரிப்பில் பேரழகன் மற்றும் அயன் படத்தின் போது AVM சரவணனுடனான அனுபவத்தை நினைத்து கண்ணீர் விட்டு அழுதிருக்கலாம் என்று பலரும் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











