அயோத்தி, டூரிஸ்ட் ஃபேமிலிக்கு அப்ளாஸ்.. சசிகுமாரின் அந்த படத்தைக் கண்டுக்கல.. ரசிகர்களுக்கு என்னாச்சு?
சென்னை: சசிகுமார் தமிழ் சினிமாவின் பெருமை மிகு அடையாளங்களில் ஒருவராக மெல்ல மெல்ல மாறி வருகிறார். அதற்கு காரணம் அவர் தேர்வு செய்து நடிக்கும் படங்களின் கதைகள். தனக்கு முக்கியத்துவம் தேவையில்லை. கதைக்குத்தான் முக்கியத்துவம். தேவையில்லாத சண்டை காட்சிகள், பில்டப் காட்சிகள் என எதுவும் இல்லாத மிகவும் எதார்த்தமான கதைகளை தேர்வு செய்து அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்திப் போகிறார். இந்த காரணத்தினால் சசிகுமார் தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறி வருகிறார்.
வித்தியாசமான கதைகளை வைத்துள்ள புதுமுக இயக்குநர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நடிகராக மாறி நிற்கிறார். நடுத்தர வயது கொண்ட கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்திப் போகும் சசி, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து வருகிறார். இவரது நடிப்பில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது என்றால் அது, கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான அயோத்தி படம் தான். தாரை தப்பட்டை, சுப்ரமணியபுரம், நாடோடிகள் போன்ற படங்களைப் போல இந்த படத்தில் நடிப்பதற்கு பெரிய ஸ்கோப் இல்லை. ஆனாலும் அவர் அயோத்தி போன்ற கதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என ஏற்று நடித்ததே பாராட்டுக்குரிய விஷயம்.
படத்தில் ஒரு நடிகராக நடிக்க, நடிப்பைக் கொட்ட பெருமளவுக்கு ஸ்கோப் இல்லை என்றாலும், படம் பேசிய மனிதாபிமானம் மிகவும் பெரியது. இந்த படத்தில் நடித்ததற்காக சசிகுமாருக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டே இருந்தது. இந்த படம் கொடுத்த அன்பு அவரை நல்ல கதைகளை நோக்கி நகர வைத்தது. அதன் பின்னர் கடந்த ஆண்டில் சூரியின் கருடன் படத்தில் நடித்தார். இந்த படம் கனமான கதை, சிறப்பான திரைக்கதை கொண்ட படமாக இருந்தாலும், இப்படத்தையும் ஒரு பக்கா கமர்ஷியல் படங்களின் வரிசையில் சேர்க்கலாம். ஆனாலும் படம் கதைக்காகவும் திரைக்கதைகாகவும் ஹிட் அடித்தது.

வெற்றி: தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அயோத்தி படத்தை எந்த அளவிற்கு பாராட்டினார்களோ அதே அளவுக்கு பாராட்டி வருகிறார்கள். விமர்சகர்களை கடந்து ரசிகர்களும் படம் குறித்து பாசிடிவாக பேசி வருகிறார்கள். இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வசூலிலும் படம் ஏற்றம் கண்டு வருவதால் வணிக ரீதியாகவும் வெற்றிப் படமாக மாறி வருகிறது. டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்ததற்காக சசிகுமாரையும் மொத்த படக்குழுவையும் பாராட்டி வருகிறார்கள்.
பாராட்டுகள்: அயோத்தி படம் பேசிய மனிதாபிமானம் மற்றும் சகோதரத்துவம், குடும்ப வன்முறையால் பெண்கள் எந்த அளவிற்கு ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்துரைத்த விதம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்தது. இது எங்கோ, எப்போதோ யாருக்கோ நடப்பதில்லை. குடும்ப கட்டமைப்பின் மூலம் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறையும் சுரண்டலும் பெரும்பாலும் அனைத்து குடும்பத்திலும் நடக்கிறது. இப்படியான காட்சிகளும் ரசிகர்களை படத்துடன் ஒன்றச் செய்தது. ஒரு கட்டத்திற்கு மேல் படம் பேசிய மனித நேயமும், கிளைமாக்ஸில் தலைதூக்கி நின்ற சகோதரத்துவமும் ஆப்ஸ்களை அள்ளியது.

எல்லைக் கோடுகள்: அதேபோல், டூரிஸ்ட் ஃபேமிலி இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு குடியேறும் ஒரு தமிழ் குடும்பம் இங்கு சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஆழமாக பேசவில்லை என்றாலும், அன்பு தான் ஒருவர் அகதியா இல்லை என்பதை தீர்மானிக்கிறது, இரு நாடுகளின் எல்லைக்கோடுகள் கிடையாது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது டூரிஸ்ட் ஃபேமிலி படம். அயோத்தி படத்தைப் போல இந்த படமும் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிப் படமாக உருவெடுத்து வருகிறது.
நந்தன்: சசிகுமார் நடித்த அயோத்தி மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். படத்தை வணிக ரீதியாக வெற்றிப் படமாக மாற்றுகிறார்கள். இந்த படங்கள் பாராட்டுக்கும் வெற்றிக்கும் தகுதியானவை தான். ஆனால் கடந்த ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான நந்தன் படத்தை ரசிகர்கள் கொண்டாடாமல் போனதற்கும், அதை வணிக ரீதியாக வெற்றிப் படமாக மாற்றாமல் போனதற்கும் ரசிகர்களிடத்தில் என்ன பதில் இருக்கிறது? அதே நேரத்தில் இந்த படத்தை கொண்டாடிய ரசிகர்களுக்கும் இருக்கிறார்கள். ஆனால் அயோத்தி மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலியைக் கொண்டாடிய அளவுக்கு இல்லை என்பது நிதர்சனம்.

என்ன பிரச்னை: நந்தன் உண்மைக்கு நெருக்கமாக இல்லையா? நந்தன் படத்தில் எதையாவது திரித்து காட்டிவிட்டார்களா? சசிகுமாரின் நடிப்பு பிரச்னையா? படத்தின் திரைக்கதையில் மிகப்பெரிய சொதப்பலா? நந்தன் படத்தில் என்ன பிரச்னை என்ற கேள்வியைக் கேட்டால் எத்தனை ரசிகர்கள் பதில் சொல்லுவார்கள் என்று தெரியவில்லை. படத்தில் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் உண்மை, அதை பொய் என மறுப்பவர்களை கையைப் பிடித்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அழைத்துச் செல்ல நான் தயார் என்று அறிவித்த இயக்குநர் இரா. சரவணனின் தைரியம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் சாதிய மனப்பான்மை கொண்டவர்களுக்கு சூடு வைத்தது போல இருந்திருக்கும்.
பரிதாபம்: சசிகுமார் நடிப்பில் வெளியான படங்களிலேயே நந்தன் படமும் சிறந்த படம். ஆனால் அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்த போது விபத்தில் இறந்த மனைவியின் உடலை மீண்டும் அயோத்திக்கு கொண்டு செல்ல ஒரு குடும்பம் படும் இன்னல்களை பார்த்து தமிழ் ரசிகர்கள் பரிதாப படுகிறார்கள். டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு பிழைக்க வந்த ஒரு குடும்பத்தின் மீது தீவிரவாதிகள் என்று இட்டுக் கட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாமல், அந்த குடும்பத்தின் மீது தமிழ் ரசிகர்கள் பரிதாப படுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அந்த படத்துடன் ஒன்றிப் போய் அவர்கள் மீது அக்கறை கொள்கிறார்கள், இரக்கம் கொள்கிறார்கள்.

அக்கறை: ஆனால் நந்தன் படத்தைப் பார்த்து ஒடுக்கப்பட்ட மக்களின் மீது பரிதாபமோ, இரக்கமோ காட்டத் தேவையில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை பெறவே அவர்கள் போராடுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட புரிதல் இங்கு பரவலாக அனைவரிடத்திலும் இருந்திருந்தால் நந்தன் படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு இருக்கும். அயோத்தியில் இருந்து, இலங்கையில் இருந்து வந்தவர்கள் மீது காட்டப்படும் அக்கறை, இங்கு நம்முடன் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது இருப்பதில்லை.
க்ள்ள மௌனம்: வெளிநாட்டில் வெள்ளையர்களால் கருப்பின மக்கள் ஒடுக்குமுறையை சந்திக்கும்போது இணையத்தில் ஹேஷ்டேக் போட்டு டிரெண்டாக்கும் இணையவாசிகளில் பலர், தமிழ்நாட்டின் உழைக்கும் வர்க்கத்தில் மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கிற தலித்கள் மீது சாதி ரீதியிலான ஒடுக்குமுறைகள் நிகழ்த்தப்படும் போது கள்ள மௌனமாக இருப்பது நூற்றாண்டுகளாக நடந்து வருவதன் நீட்சிதான். அந்த கள்ள மௌனத்தால்தான் நந்தனை தோல்விப் படமாக மாற்றியுள்ளது. இப்படியான கள்ளமௌனத்தினைக் கொண்டுள்ள ரசிகர்களுக்கு தங்களை ஒரு மனிதாபிமானிகளாக,சமத்துவத்தை விரும்புகிறவர்களாக, ஒற்றுமையை போதிப்பவர்களாக காட்டிக் கொள்ள டூரிஸ்ட் ஃபேமிலி, அயோத்தி போன்ற படங்கள் தேவைப்படுகிறது. ஆனால் இந்த மூன்று படங்களிலும் நடித்த, மூன்று கதைகளையும் உணர்ந்து அதை உண்மைக்கு நெருக்கமாக வெளிப்படுத்திய சசிகுமாருக்கு ஒரு இறுக்கமான அரவணைப்பு.


Click it and Unblock the Notifications











