மதிக்கப்படாத மண்டேலா.. அரசியல் தவறுகளை சுட்டிக் காட்டினால் விருது இல்லையா? நல்லா இருக்குங்க உங்க நியாயம்!
சென்னை: கடந்த வாரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட மாநில திரைப்பட விருதுகள் ஒருபுறம் பாராட்டுக்களை பெற்றாலும், மறுபுறம் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியும் வருகிறது. அதுவும் தேசிய விருதுக்கு தேர்வான படங்களை மாநில அரசு அங்கீகரிக்காதது பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது. சில இணையவாசிகள் தொடங்கி சில திரைப்பிரபலங்கள் வரை பலரும் ஏன் இந்த படத்திற்கு விருது கிடைக்கவில்லை? அதுவும் ஒரு விருது கூட மாநில அரசு அங்கீகரிக்காதது ஏன் எனற கேள்வியை முன் வைத்து வருகிறார்கள்.
இதில் பலரது ஆதரவு பெற்ற படம் என்றால் மண்டேலா தான். இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக இன்னும் சொல்லப் போனால் கதையின் நாயகனாக நடித்து வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. வாக்குரிமையின் அத்தியாவசியத்தையும் சமூகத்தில் எந்த அளவுக்கு சாதிய ஆதிக்க முறை புரையோடிக் கிடக்கிறது என்பதையும் பேசிய படம் மண்டேலா.
தமிழ் சினிமா சூழலில் கடந்த 10 , 12 ஆண்டுகளாக அரசியல் கருத்துக்களை பேசுகிற படங்கள் அதிகம் வெளியானாலும் அஸ்வின் மடோனாவின் மண்டேலா படம் மற்ற படங்கள் அனைத்தையும் கடந்து வித்தியாசப்பட்ட படம். படத்தின் கதை, கதாபாத்திர வடிவமைப்பு, வசனங்கள், திரைக்கதை நகர்வு என மொத்த படமும் மெச்சத் தகுந்த படம்.

மண்டேலா: அறியாமையில் இருக்கும் விளிம்பு நிலை மக்களையும் அவர்களின் வாக்குகளையும் அரசியல் கட்சிகள் எப்படி எல்லாம் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதை மிகவும் எதார்த்தமாக எடுத்துச் சொன்ன படம் மண்டேலா. இன்னும் சொல்லப்போனால் இந்தியா போன்ற சாதிய படிநிலைகள் இருக்கும் நாட்டில் இந்த படிநிலையில் கடைசியாக இருக்கும் சமூகங்களை ஆதிக்க சாதியினர் எவ்வாறு அடக்குமுறைக்கு உள்ளாக்குகிறார்கள் என்பதையும், அதே ஆதிக்க சாதியினர் தேர்தல் என்று வந்ததும் ஒடுக்கப்பட்ட மக்களுடன் எப்படி உறவாடுகிறார்கள் என்பதையும் கண்முன் நிறுத்திய படம். இந்த படத்தை அங்கீகரித்து தேசிய விருகளை மத்திய அரசே வழங்கியது. குறிப்பாக சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த திரைக்கதை என மண்டேலா படம் மொத்தம் இரண்டு விருதுகளை அள்ளியது.
திராவிடக் கட்சிகள்: இந்த படத்திற்கு தமிழ்நாடு அரசு விருது வழங்காதது ஏமாற்றத்தை மட்டும் இல்லாமல் விமர்சனத்தையும் எழுப்பி உள்ளது. அதாவது படம் தமிழ்நாட்டு அரசியல் சூழலை, சமூக சூழலை கண்ணாடி போல காட்டிவிட்டதே என்ற எண்ணத்தால் படத்திற்கு விருது வழங்கப்படவில்லையா? 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தும் சமூகத்தில் இன்னும் இது போன்ற அவலங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று நேரடியாகவே அரசியல் கட்சிகளை, பெரியாரின் வழி வந்தவர்களின் வாரிசுகளை விமர்சித்ததால் மண்டேலா படத்திற்கு மாநில விருது வழங்கப்படவில்லையா என்ற கேள்விகள் எழாமல் இல்லை.

அரசியல் காரணமா?: இவைதான் காரணமா அல்லது அதன் பின்னர் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான மாவீரன் படமும் திராவிடக் கட்சிகள் நடைமுறைப்படுத்தி வரும் குடிசை மாற்று வாரியம், ஹவுசிங் போர்டு போன்றவைகளின் எதார்த்தத்தை வெளிகாட்டியதால், மடோன் அஸ்வினின் திரைப்படங்கள் தொடர்ந்து திராவிடக் கட்சிகளை மறைமுகமாகவும் நேரடியாகவும் விமர்சித்து வருவதால் விருதுகள் கொடுக்கப்படவில்லையா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை. சர்வதேச அளவில் தமிழ் சினிமாக்கள் போட்டி போட்டு வரும் நிலையில் நமது மாநிலத்திலேயே இது போன்ற படங்கள் அங்கீகரிக்கப்படாததை ஒரு உள்ளர்த்தம் கொண்ட சிரிப்புடன் கடந்து செல்லும் திரைப்பட ரசிகர்களை பார்க்க முடிகிறது. சும்மாவா சொன்னார்கள் உள்ளூர் மாடு விலைபோகாது என!..


Click it and Unblock the Notifications











