திடீருன்னு "பிட்டு சிடி.." லைவ் வர்ணனை.. தியேட்டரில் நெளிந்த ரசிகாஸ்.. வாத்தி பண்ற வேலையா இது?
தனுஷ் நடித்த வாத்தி திரைப்படத்தில் இடம்பெற்ற ஆரம்பக் காட்சிகள் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளன.
சென்னை: இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில், யூ சர்டிபிகேட் வாங்கி, தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் ஆபாச வசனத்தால் படம் பார்க்க சென்றவர்களை அவஸ்தைப்படுத்தி வருகிறது.
கல்வி வியாபாரமாகிவிட்டது என்பதை சுட்டிக்காட்ட எடுக்கப்பட்ட திரைப்படம்தான் வாத்தி. பிரச்சார நெடி அதிகமாக இருந்த போதிலும் சமூகத்திற்கு தேவையான கருத்து.. இளம் தலைமுறையினர் பார்க்க வேண்டிய திரைப்படம், என்றெல்லாம் ஒரு தரப்பில் ஆதரவு குரல்கள் ஒலித்து வருகின்றன.
இப்படி இளம் தலைமுறையினர் பார்க்க வேண்டிய திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியில் இத்தனை ஆபாசம் தேவையா என்பது படம் பார்த்தவர்கள் மனதில் எழும் முதல் கேள்வியாக மாறி உள்ளது.

பிட்டு வீடியோ
திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியில் 1998ம் ஆண்டு ஆசிரியராக பணியாற்றி சாதனை படைத்த தனுஷ் கதாபாத்திரம் யார் என்பதை இன்றைய தலைமுறை இளைஞர்கள் சிலர் தேடுவது போல காட்சி நகருகிறது. இதற்காக வீடியோ கடை ஒன்றில் தேடுதல் வேட்டை நடத்துகிறார்கள் அந்த இளைஞர்கள். பிட்டு திரைப்படம் ஓட்டியவரின் வீடியோ கடை என்ற அறிமுகத்துடன் அந்த காட்சி தொடங்குகிறது

பாஷையா முக்கியம்
வீடியோ கடை ஓனர் வேறு யாருமல்ல மொட்டை ராஜேந்திரன்தான். அங்கு தேடும்போது சில ஆபாச சிடிகள் கையில் கிடைக்கின்றன அதன் மேல் ஆபாச நடிகைகளின் படங்கள் இடம்பெற்று இருக்கின்றன. "இதெல்லாம் இன்டர்நெட்டில் தேடினால் கூட கிடைக்காது, பழைய காலத்து பொக்கிஷம்.." என்று லயித்து சொல்கிறார் ஒரு இளைஞர். குடும்பத்தோடு படத்தை பார்க்க சென்றவர்கள் குறுகுறு என்று முழித்த முதல் தருணம் அது. அதே காட்சியில் அடுத்து வரும் வசனங்கள் இன்னும் மோசம்.

என்ன டயலாக் இதெல்லாம்
தனுஷ் முதுகை காட்டியபடி பாடம் நடத்துவதை போல ஒரு வீடியோவை அந்த இளைஞர்கள் பார்க்கிறார்கள். பலான படம் என்று பார்த்தால் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறாரே என்று, அந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞர் ஒருவர் கேட்க, அவரது நண்பரின் கதாபாத்திரம் இதற்கு விளக்கம் சொல்கிறது. "இப்படித்தான் ஆரம்பிப்பார்கள்.. இந்த மாதிரி படத்தில் கதாபாத்திரத்திற்குள் ஒன்றிப்போக அதன் பிறகு "ஆக்ஷனில் இறங்குவார்கள்." அப்போதுதான் அதில் சுவாரசியம் இருக்கும்.." என்று ஒரு ஆபாச விளக்கம் அளிக்கிறார். படம் முழுக்க கல்வியின் மகத்துவம்.. ஆசிரியர் பணியின் அர்ப்பணிப்பு குறித்து பாடம் நடத்திவிட்டு, ஆரம்பக் காட்சியில் ஒரு ஆசிரியர் பாடம் நடத்துவதை, ஜானி சின்ஸ் மாதிரி ஆபாச நடிகர்களை மனதில் வைத்து காட்சியமைக்க இயக்குனருக்கு எப்படி மனது வந்ததோ, தெரியவில்லை.

ஆபாசத்தை அள்ளி வீச வேண்டாமே
படத்திற்கு அனைவரும் பார்க்கக்கூடிய யூ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுடன் படம் பார்க்க வந்த பெற்றோர்களுக்கு இந்த காட்சி ஆரம்பத்திலேயே முகம் சுளிக்க வைத்ததை பார்க்க முடிந்தது. ஆபாச படம் எப்படி இருக்கும் என்ற வர்ணனை வளர் இளம் தலைமுறையினரை பார்த்தேயாக வேண்டும் என்று தூண்ட செய்வதை போல அமைந்திருந்தது. நிஜத்தில் நடப்பதை தான் நாங்கள் கதையாக எடுக்கிறோம் என்று இதற்கு சாக்குப் போக்கு காரணங்களை இயக்குனர்கள் கூறக்கூடும். அப்படி என்றால் A சர்டிபிகேட் வாங்கி விட்டு நீங்கள் என்ன வேண்டுமானாலும் காட்சியாக வைத்துக் கொள்ளுங்களேன். உங்களை நம்பி தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு குறிப்பாக இளம் தலைமுறையினருக்கு ஆபாசத்தை அள்ளி வீசாதீர்கள் என்பதுதான் படம் பார்க்க வந்த அனைவரின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications











