2.ஓ... லைகாவின் புரமோஷன் குளறுபடிகள்!
தமிழ் சினிமாவில் பெரும் முதலீட்டை செய்து தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் நிறுவனம் 'லைகா,' விஜய் நடித்த கத்தி படத்திற்கு பின் இந்திய மற்றும் சர்வதேச சினிமா சந்தையில் தனிப் பெரும் நிறுவனமாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ரஜினிகாந்த் - அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிக்கும் 2.0 படத்தை ஷங்கர் இயக்கத்தில் ரூ 400 கோடி செலவில் 15 மொழிகளில் லைக்கா நிறுவனம் தயாரிப்பது மேற்கண்ட நோக்கத்தை அமல்படுத்தவே.

இப்படத்தின் பெரும் பகுதி வருவாய் தமிழ்நாடு, ஆந்திரா, வட இந்திய பகுதிகளில் (இந்தி) திரையிடப்படுவதன் மூலம் வர வேண்டும். அதற்காகத்தான் மும்பையில் இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக்வெளியீட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஊடகங்கள் மூலம் உலகளவில் கொண்டு சேர்ப்பதில் லைகா வெற்றி பெற்றதா என்ற கேள்வி உள்ளது.
படத்தின் ஆடியோ வெளியீட்டை துபாயில் நடத்தி வெளிநாட்டு சினிமா சந்தையில் லைகாவுக்கு முக்கியத்துவத்தை அதிகரிக்கவும், வியாபாரத்தை சுறுசுறுப்பாக ஆக்கவும் முயற்சிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்காக பலகோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது.

ஆனால் லைக்கா நிறுவனம் எதிர்பார்த்த ஊடக உச்சம் எட்டப்படவில்லை. தமிழகத்தில் லைகா எடுக்கும் தயாரிப்பு, புரமோஷன் அனைத்துப் பணிகளிலும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
லைக்கா தயாரித்த மற்றும் விநியோக முறையில் திரையிட்ட அனைத்து படங்களிலும் வியாபார விஷயங்களில் தொடர்ந்து குளறுபடிகள் நடைபெற்று வருகின்றன.

2.ஓ திரைப்படத்தின் புரமோஷனும், வியாபாரமும் ரஜினி - ஷங்கர் - ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் தன்னெழுச்சியாகவே நடைபெற்று வருகிறது. படத்தின் மீதும் ரஜினி மீதும் ஆர்வம் கொண்டோர் தங்கள் விருப்பத்தின் பேரில் படத்தை புரமோட் செய்து வருகின்றனர். ஆனால் மோசமான ஒருங்கிணைப்பு, மக்கள் தொடர்பு போன்றவற்றால் செம கடுப்பில் உள்ளனர் இந்திய செய்தியாளர்கள். சர்வதேச செய்தியாளர் சந்திப்பு என்று சொல்லி சொதப்பிய சொதப்பல் போதும் சாம்பிளுக்கு.
இதனை மேன்மைபடுத்தவும் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் லைகா நிறுவனத்திற்கு உள்ளது.
நிதி வசதி, எளிதான சர்வதேச தொடர்புகள் என அனைத்தும் இருந்தும் தமிழ்நாட்டில் பழம் தின்று கொட்டை போட்ட சினிமா நாட்டாமைகள், உள்குத்து மீடியேட்டர்களின் வளையத்தை விட்டு வெளியில் வர வேண்டிய நிலையில் லைகா உள்ளது.
இதுவரை நடந்தது எப்படியோ... இனி இந்த நிறுவனம் வெற்றிப்பாதையில் நடைபோட வேண்டிய கட்டாயம். 2.ஓ லைகாவுக்கு புதிய பாதையாக அமையும் என நம்புவோம்.


Click it and Unblock the Notifications











