பூட்டு போட்ட தயாரிப்பாளர்கள் 20 பேருக்கு மேல் நடவடிக்கை உறுதி: விஷால் திட்டவட்டம்!
தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்ட விவகாரத்தில் 20 பேருக்கு மேல் நடவடிக்கை உறுதி என விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னை: தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்ட விவகாரத்தில் 20 பேருக்கு மேல் நடவடிக்கை உறுதி என அச்சங்கத்தின் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் பதவி விலகக் கோரி, தயாரிப்பாளர்கள் சிலர் தி.நகர் மற்றும் அண்ணாசாலையில் உள்ள சங்கத்துக்கு பூட்டு போட்டனர். இந்த விவகாரத்தில் விஷால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் நீதிமன்றம் மூலம் ஆணைப் பெற்று சங்கத்துக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது. இந்நிலையில் விஷால் தலைமையில் தயாரிப்பாளர் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், பூட்டு போட்ட விவகாரத்தில் சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் 20 பேருக்கு மேல் நடவடிக்கை எடுப்பது உறுதி எனக் கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்ட விவகாரம் குறித்து செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய 20க்கும் மேற்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி.
நான் என்றுமே தன்னிச்சையாக செயல்பட்டது கிடையாது. பழைய நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு இருந்ததால் தான் நாங்கள் போட்டியிட்டோம்.
சினிமா டிக்கெட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது வரவேற்கதக்க நடவடிக்கை. அதற்காக மத்திய அரசுக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்" என அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











