விதவிதமான கெட்அப்...உடல் எடை குறைப்பு...ஹாட்ரிக் அடிக்க தயாராகும் சிவகார்த்திகேயன்
சென்னை : கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த திரைத்துறை பணிகள் தற்போது வேகமெடுக்க துவங்கி உள்ளன. ஓவர்டைம் எடுத்து செய்யும் அளவிற்கு பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளன.
தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மக்கள் வருவார்களா என்ற தயக்கத்தால் படங்களை ரிலீஸ் செய்யாமல் இருந்த தயாரிப்பாளர்கள், விஜய் நடித்த மாஸ்டர் படத்திற்கு கிடைத்த வெற்றிக்கு பிறகு, வரிசையாக படங்களை ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளனர்.
அதிலும் தியேட்டர்களில் 100 சதவீதம் பேருக்கு அனுமதி என்ற தமிழக அரசின் உத்தரவு சினிமா துறையினரை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது. இதனால் ஏற்கனவே பிஸியான நடிகராக உள்ள சிவகார்த்திகேயன், இப்போது மேலும் பிஸியாகி விட்டார். அதிலும் புதிய படம் ஒன்றிற்காக உடல் எடையை ரொம்பவே குறைத்துள்ளார் இவர்.

மார்ச்சில் வருகிறார் டாக்டர்
கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய டைரக்டர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் மார்ச் 26 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரியங்கா அருள்மோகன் ஹீரோயினாக நடிக்கிறார்.

அடுத்து என்ன
டாக்டர் படத்தின் பணிகள் முடிந்து விட்டதால், அடுத்தபடியாக புதுமுக இயக்குனரான சிபி இயக்கும் டான் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்திலும் பிரியங்கா தான் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி. இப்படத்தை வேகமாக முடித்து, விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதிலும் வார இறுதி நாட்களில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர்.

ஒரே நேரத்தில் 2 படங்கள்
அதே சமயம், ரவிக்குமார் ராஜேந்திரன் இயக்கும் அறிவியல் கதை உடைய படமான அயலான் படத்தின் சூட்டிங்கையும் முடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தை இந்த ஆண்டு கிறிஸ்துமஸை ஒட்டி வரும் வார இறுதி நாட்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனால் 2021 ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் 3 படங்கள் வெளிவர உள்ளன.

பிஸியான சிவகார்த்திகேயன்
படங்களில் நடித்து வந்தாலும் அத்துடன் தயாரிப்பு பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். கனா படத்தை தொடர்ந்து, டாக்டர் படத்தையும் இவர் இணைந்து தயாரித்துள்ளார். அடுத்தபடியாக பிரதீப்பை வைத்து வாலி என்ற படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை டைரக்டர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











