Kalki Box Office: பிரபாஸின் பிரம்மாண்டம்.. தங்கல், பாகுபலி 2 வசூலை முறியடிக்குமா கல்கி 2898 ஏடி?
சென்னை: இதுவரை வெளியான இந்திய படங்களில் அதிக வசூலை ஈட்டியிருப்பது அமீர்கான் நடித்த தங்கல் திரைப்படம் தான். அதற்கு முன்னதாக பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்தது பிரபாஸ் நடித்த பாகுபலி 2 திரைப்படம் தான். இந்நிலையில், அந்த இரு படங்களின் வசூலை கல்கி முறியடிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியளவில் பிரம்மாண்ட படங்களை ஷங்கர் இயக்கி வந்த நிலையில், அதன் பின்னர் அதனை ராஜமெளலி அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்று விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

மசாலா படங்களை மட்டுமே டோலிவுட் கொடுத்துக் கொண்டிருக்கிறது என மற்ற திரையுலகங்கள் கலாய்த்துக் கொண்டிருக்க ஏகப்பட்ட பான் இந்தியா ஸ்டார்களை கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கி பாக்ஸ் ஆபிஸில் பாலிவுட்டையே திணறவிட்டு வருகிறது.
பாகுபலி 2 வசூல்: 2015ம் ஆண்டு 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ராஜமெளலி பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, சத்யராஜை வைத்து உருவாக்கிய பாகுபலி படம் 650 கோடி வரை வசூல் செய்து அப்பவே மாஸ் காட்டியது. வாழ்வில் ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என ராஜமெளலி பண்ண பிரம்மாண்ட புரமோஷன் மற்றும் பாகுபலியை கட்டப்பாவே ஏன் கொன்றார் என்பதை தெரிந்துக் கொள்ள 2017ம் ஆண்டு வெளியான பாகுபலி 2ம் பாகத்தை இந்தியா முழுவதும் ரசிகர்கள் திரையரங்குக்கு படையெடுத்துச் சென்று பார்த்து 1800 கோடி வசூலை சாத்தியமாக்கினர்.

முறியடித்த தங்கல்: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் எல்லாமே ஆடிப் போய் விட்டனர். யாருடா அந்த பிரபாஸ் என திரும்பிப் பார்க்க ஆரம்பித்தனர். அமீர் கான் தில்லாக தங்கல் படத்தை இறக்கி 2000 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி மிகப்பெரிய ரெக்கார்டை படைத்தார். தங்கல் படத்தை இயக்கிய நித்தேஷ் திவாரி தான் அடுத்து ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவியை வைத்து ராமாயணம் படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்கி முந்துமா?: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 ஏடி படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் உலகம் முழுவதும் குவிந்து வரும் நிலையில், முதல் நாள் பாக்ஸ் ஆபிஸே 200 கோடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் இந்தியா முழுவதும் பாகுபலி படத்தை போலவே வரவேற்பை பெற்றால் கண்டிப்பாக 2000 கோடி வசூலை தாண்ட வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். கல்கி 2898 ஏடி அந்த சாதனையை முறியடிக்கவில்லை என்றால் கூட கல்கி 2ம் பாகம் வெளியானால் நிச்சயம் புதிய பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டை படைக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.


Click it and Unblock the Notifications











