பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை! தேவையில்லாத ஆணிகள்தான் தீர்வா? திருந்துங்க தமிழ் சினிமா

சென்னை: பெண்ணின் மீது நடத்தப்படும் பாலியல் வன்புணர்வு, பாலியல் வன்கொடுமை என்பது, பெண்ணிற்கும் அந்த பெண்ணின் குடும்பத்திற்கும் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தக் கூடியது என பல தமிழ் படங்கள் கூறி வருகின்றது. பெண்ணின் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையை மைய்யமாகக் கொண்ட திரைப்படமோ அல்லது படத்தின் எதாவது ஒரு காட்சியோ, அந்த படத்தின் மூலம் அல்லது அந்த காட்சியின் மூலம் ரசிகர்களுக்கு பெரும்பான்மையான இயக்குநர்கள் சொல்ல வருவது, ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டால் அது அவமானத்திற்குரியது என்பதுதான்.

ஆனால் உண்மையிலேயே ஒரு பெண்ணின் மீதோ அல்லது குழந்தையின் மீதோ நடத்தப்படும் பாலியல் வன்கொடுமையை, கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் மிகப்பெரிய ஊடகமாக திகழும் சினிமாவில் தொடர்ந்து அவமானமாகவே கட்டமைத்து வருகின்றனர். இதனால் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுவிட்டால் அல்லது பாலியல் தொடர்பாக எதாவது ஒரு அவமானத்தை எதிர்கொண்டுவிட்டார் என்றாலோ, பெண்ணோ மற்றும் அவரது குடும்பமோ முடங்கிப்போவதைப் போன்றோ, அல்லது தற்கொலை செய்துகொள்வதைப் போன்றோதான் காட்சிகள் வைக்கப்படுகின்றன. சினிமாவை நிஜ வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கும் தன்மை இங்கு அதிகமாக இருப்பதால் ஆடியன்ஸும் இதுபோன்ற முடிவுகளை எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.

ஒருவர் மீது இருக்கும் கோபத்தை தீர்க்க அவர்கள் குடும்பத்தைச் சார்ந்த பெண்ணை அல்லது குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினால் கோபத்தை தீர்த்துக் கொள்ளமுடியும் என்ற எண்ணத்தை தமிழ் சினிமா நீண்ட நெடும் காலமாக காட்சிப் படுத்தி வருகின்றது. இது தவறு என்ற எண்ணத்தை தமிழ் சினிமா சொல்லத்தவறிவிட்டது. இது ஆடியன்ஸ் மத்தியிலும் இதுபோன்ற எண்ணத்தை ஊக்குவிக்க காரணமாகிவிடுகின்றது. வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் மன்சூர் அலிகான் கூட ஒரு பேட்டியில், லியோ படத்தில் " த்ரிஷாவுடன் ரேப் காட்சிகள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என பேசுகின்றார். அவரது பேச்சில் பாலியல் வன்புணர்வு காட்சியை எளிமைப்படுத்திவிடும் தொனி உள்ளதை பார்க்கமுடிகின்றது.

Tamil cinema

ஆண்கள் மீட்பர்களா? அதேபோல், முழுக்க முழுக்க பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமையை மையப்படுத்திய கதைகளில், மீட்பர்களாக பெரும்பாலும் ஆண்களே உள்ளனர். இந்த கதாநாயக சித்தரிப்பு என்பது, ஆடியன்ஸ் மத்தியில் மீண்டும் மீண்டும் தனக்கோ தன்னைச் சார்ந்தவர்களுக்கோ இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டால் தங்களை யார் வந்து மீட்பார்கள் என்ற ஒருவித அச்ச உணர்வையே அதிகரிக்கச் செய்கின்றது. இதே போன்ற காட்சிகள்தான் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைக்கும் தமிழ் சினிமா தீர்வாக தருகின்றது. ஆனால் இது தீர்வாக இல்லாமல் கதாநாயக சித்தரிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் உள்ளது.

Tamil cinema

தேவையில்லாத ஆணி: உதாரணமாக அண்மையில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் மகாராஜா. விஜய் சேதுபதியின் 50வது படமான இந்த படத்தில்கூட குழந்தையை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய சிங்கம் புலி கதாபாத்திரத்தை விஜய் சேதுபதி கொல்வதைப் போன்று காட்சி படுத்தப்பட்டிருக்கும். மேலும் விஜய் சேதுபதியின் குழந்தை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக காரணமாக இருந்த முக்கிய வில்லனோடு சண்டை செய்கின்றார். கதாநாயகனாக அல்லது மீட்பராக வரும் விஜய் சேதுபதி தனது மகளை பாலியல் வன்புணர்வு செய்தவனை கொலை செய்வது என்பது மீண்டும் மீண்டும் கதாநாயக பிம்பத்தை கட்டமைக்கும்தானே தவிர, பாலியல் வன்புணர்வுக்கு ஆளான தனது மகளுக்கு தீர்வை நோக்கி நகர்த்த தேவையில்லாத ஆணிதான் அந்த பழிவாங்கல், கொலை, சண்டை எல்லாமே.

Tamil cinema

மடைமாறிய சினிமா: இதேபோல்தான் சித்தா படமும் இருந்தது. படத்தின் கதாநாயகி சித்தார்த்தை நோக்கி, " நான் அதுல இருந்து எப்படி மீண்டு வந்தேன் என கேட்கத் தோணலயா" என்பது போன்ற கேள்வியோடு படத்தை முடித்திருந்தால் இந்த படமும் அருவி போன்ற படங்களின் வரிசையில் இணைந்திருக்கும். ஆனால் இந்த படத்தில் கதாநாயகனுக்காக கற்பிக்கப்பட்ட ஆண்மைத்தனத்தை நிரூபிக்க பாலியல் வன்புணர்வு செய்தவனை கொலை செய்யும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல் இதுவும் தேவையில்லாத ஆணிதான். உதாரணமாக அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக். பிங்க் படத்தில் சண்டைக்காட்சி கிடையாது, ஆனால் அஜித் போன்ற மாஸ் கதாநாயகன் அந்த படத்தின் ரீமேக்கில் நடிப்பதால் அவரது ஆண்மைத்தனத்தை நிரூபிக்க சண்டைக்காட்சி வைக்கப்படுகின்றது.

Tamil cinema

பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை: இப்படி ஒரு பெண் அல்லது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானால் அவர்களை அதில் இருந்து மீட்பதற்கு கதாநாயகன் வருவான் என்ற போலி பிம்பம் என்பது நிஜவாழ்க்கையில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படும் பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் மனதில், " நமக்காக யார் வருவார்? நாம் அமைதியாக இருந்து கொள்வதுதான் நல்லது" என்ற மனநிலையை உருவாக்கிட அதிக வாய்ப்புகள் உள்ளது. தொடக்கத்தில் கூறியதைப் போல் சினிமாவை நிஜ வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கும் சமூகமாக இருப்பதால் இந்த மனநிலை இயல்பாகவே பாதிக்கப்பட்டவர்களின் மனதில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

Tamil cinema

தொல்லை தரும் கதாநாயக பிம்பம்: ஆனால் பாதிப்புக்குள்ளான பெண் அதில் இருந்து மீண்டு வருவதைப் போன்ற படங்கள் (அனல் மேலே பனித்துளி போன்ற சில படங்களே உள்ளது) இங்கு எடுக்கப்படவே இல்லை. மேலும் பாதிப்புக்குள்ளான பெண்ணே தனக்கான தீர்வை தானே எட்டுவதைப் போன்ற கதைகளில் நடிக்க பெரிய ஸ்டார்கள் முன்வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அப்படியே முன்வந்து படத்தில் நடித்தாலும் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஆண்கள்தான் மீட்பார்கள், அதாவது கதாநாயகர்கள்தான் மீட்பார்கள் என்ற மனநிலை படத்தை வெகுஜன மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் தடையாக இருக்கின்றது.

Tamil cinema

வன்முறை: அதேநேரத்தில் ஹிந்தியில் வெளியான ஹில்டி என்ற படத்தின் கதாநாயகி தான் சிறுவயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்க காரணமாக இருந்த தனது பேராசிரியரை தனது கல்லூரி விழா மேடையில் தைரியமாக தோலுரித்துக் காட்டுவதும், தான் எவ்வாறு அதில் இருந்து மீண்டு வந்தேன் என்பதையும் மிக நேர்த்தியாக காட்சி படுத்தியிருப்பார் இயக்குநர் ருச்சி நரைன். பாலியல் வன்புணர்வு என்பது பெண்ணின் உடல் மீது நடத்தப்படும் வன்முறை என்பதை தமிழ் சினிமா சொல்லத்தவறியதன் விளைவுதான் மன்சூர் அலிகானின் அந்தப் பேச்சு. அதேபோல் வரலாறு படத்தில் ஆம்பளையா என்ற கேள்வியைச் சந்தித்த பின்னர், கதாநாயகியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது என்பது முற்றிலுமே வன்முறைக்காட்சி. ஆனால் அஜித் போன்ற கதாநாயகன் இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதால், ஏற்கனவே கற்பிக்கப்பட்டுள்ள தவறான கருத்தான, பெண்ணை அடக்கி ஆள்வதுதான் ஆண்மைத்தனம் என்ற கேவலமான கற்பிதத்தை ஊக்குவிதமாக அமைந்து விடுகின்றது.

கையாலாகாதத்தனம்: இதனை சரியாக சொல்லாத வரையிலும், வெறுமனே கதாநாயக பிம்பம் மட்டும் கட்டமைக்கப்படும். தமிழ் சினிமாவால் பாலியல் வன்புணர்வு தொடர்பான கதைகளில் பாலியல் வன்புணர்வு என்பது பெண்ணின் மீது நடத்தப்படுகின்ற வன்முறை என கட்டமைக்கப்படுது தொடரும். வேறு எதற்காகவோ இருக்கும் கோபத்தை நேர்மையான முறையில் வெளிக்காட்டத்தெரியாத கையாலாகாதத்தனம். இது ரசிகர்களுக்கு புரியாமல் போக வாய்ப்புள்ளது. அதேபோல் ஆண்மை மற்றும் பெண்மை எனும் கற்பிதம் உடைக்கப்படாத வரையில், பாலியல் வன்புணர்வு என்பது மான , அவமான பிரச்னையாக மட்டுமே பார்க்கப்படும். பாலியல் வன்கொடுமைகள் நடக்க காரணங்கள் என்னவென சினிமா போன்ற பண்பாட்டுத் தளங்களில் விவாதிக்கவேண்டும். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் பாதிப்பில் இருந்து மீண்டு வர என்னமாதிரியான சிரமங்களைச் சந்திக்கின்றர் போன்ற படங்கள் தொடர்ந்து வரவேண்டும். அப்படி வராதவரையில் ரசிகர்கள் மத்தியில் பாலியல் வன்புணர்வுக்கோ பாலியல் வன்கொடுமைக்கோ ஆளாக்கப்படுவது என்பது வன்முறை என்பது புரியாமல் தற்போது இருக்கின்ற மனநிலையே தொடர வாய்ப்புள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X