சிவா படம் அவ்ளோதானா? விஜய்சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ்... மீண்டும் இணைகிறதாமே நானும் ரவுடிதான் டீம்
சென்னை: நானும் ரவுடிதான் டீம், அப்படியே இன்னொரு படத்தில் இணைய இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
சிம்பு, வரலட்சுமி நடித்த போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், அடுத்து இயக்கிய படம் நானும் ரவுடிதான்.
இதில், விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா, ஆர்.ஜே.பாலாஜி, மன்சூர் அலிகான் உட்பட பலர் நடித்திருந்தனர்.
Recommended Video

விக்னேஷ், நயன்தாரா காதல்
2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் வெற்றி பெற்றது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் பட ஷூட்டிங்கில்தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் ஒன்றாக சினிமா விழாக்களுக்குச் சென்று வரத் தொடங்கினர். முதலில் நம்ப மறுத்த ரசிகர்கள், பின்னர் அவர்கள் ஒன்றாக செல்வதைப் பார்த்து நம்பினர்.

தானா சேர்ந்த கூட்டம்
இந்நிலையில் நானும் ரவுடிதான் படத்துக்குப் பிறகு, சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். கார்த்திக், கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், நந்தா, கலையரசன் உட்பட பலர் நடித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

சிவகார்த்திகேயன்
இந்தப் படம் சுமாராக ஓடியது. அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மெகா பட்ஜெட் படத்தை இயக்க இருந்தார். இதை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பதாக இருந்தது. இதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் பட்ஜெட் அதிகமானதால் அந்தப் படத்தை தயாரிக்க, அவர்கள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

விஜய்சேதுபதி
இதையடுத்து வேறு கதையை விக்னேஷ் சிவன் தயார் செய்துள்ளார். அந்தக் கதையை நடிகர் விஜய்சேதுபதியிடம் அவர் சொன்னதாகவும் அவர் அதில் நடிக்க அவர் சம்மதித்துள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருக்கிறது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக, நயன்தாரா நடிக்க இருக்கிறார்.

நயன்தாரா
ஏற்கனவே இந்த ஜோடி ரசிக்கப்பட்டதால், இந்தக் கூட்டணிக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் சேதுபதி தற்போது ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் விவசாயியாகவும் விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார். வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார் உட்பட சில படங்களில் நடித்துவருகிறார். தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











