எஸ்.வி.சேகர் கொடுக்கும் ‘அல்வா’.. புதிய சிக்கலில் நடிகர் சங்கத் தேர்தல்!
நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறும் இடத்தில் எஸ்.வி.சேகரின் நாடகம் நடைபெற இருப்பது புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலுக்கு போலீசார் ஏற்கனவே அனுமதி மறுத்துள்ள நிலையில், எஸ்.வி.சேகர் மூலம் மேலும் ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நாசர், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், இயக்குனர் கே.பாக்யராஜ், ஐசரி கணேஷ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன.
தேர்தல் நெருங்கிவிட்டதால், இரண்டு அணிகளுமே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஊர் ஊராக சென்று நாடக கலைஞர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றன.

நடிகர் சங்கத் தேர்தல்:
இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் திட்டமிட்டபடி வரும் 23ம் தேதி எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், கல்லூரி வளாகம் அமைந்துள்ள இடம் முதலமைச்சர், அமைச்சர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் குடியிருக்கும் பகுதி என்பதால் பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

விஷால் வழக்கு:
இதையடுத்து தேர்தலுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் நடிகர் விஷால் மனு அளித்துள்ளார். மேலும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் அவர் தாக்கல் செய்துள்ளார்.

எஸ்.வி.சேகரின் அல்வா:
இது ஒருபுறம் இருக்க, நடிகர் சங்கத் தேர்தலுக்கு எஸ்.வி.சேகர் மூலம் மற்றொரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதாவது எஸ்.வி.சேகரின் 'அல்வா' நாடகமும் அதே நாளில் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடக்க உள்ளது. இதனால் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விஷாலுடன் பிரச்சினை:
எஸ்.வி.சேகருக்கும், விஷாலுக்கும் ஏற்கனவே பிரச்சினை உள்ளது. நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகளில் இருந்தும் எஸ்.வி.சேகரை, விஷால் அணி தூக்கிவிட்டது. உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தனது உறுப்பினர் பதிவை தக்க வைத்திருக்கிறார் எஸ்.வி.சேகர்.

கேள்விக்குறி
எனவே, தற்போதைய சூழலில் விஷாலுடன் அவர் சமாதானமாக செல்வாரா என்பது கேள்விக்குறியே. இதனால் நடிகர் சங்கத் தேர்தல் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை வேறு இடத்துக்கு வாக்குப்பதிவை மாற்ற தேர்தல் அதிகாரி முடிவு செய்யலாம் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











