Ponniyin Selvan 2: முதல் பாகத்தை போல.. 500 கோடி வசூலை தாண்டுமா பொன்னியின் செல்வன் 2.. என்ன சிக்கல்?
சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு தலைமையில் பொன்னியின் செல்வன் 2 ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான போது சிறுவர்கள் முதல் 90 வயதான தாத்தா, பாட்டிகள் என அதற்கு முன் தியேட்டர் பக்கமே வராதவர்கள் கூட பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க தியேட்டருக்கு படையெடுத்தனர்.

அதன் காரணமாக சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா துலிபாலா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்து ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடி வரை வசூல் செய்து படக்குழுவையே திக்குமுக்காட செய்தது.
பொன்னியின் செல்வன்: பொன்னி நதி பார்க்கணும் பாடலின் ஈர்ப்பு ரசிகர்களை பொன்னியின் செல்வனையும் பார்க்கத் தூண்டியது. இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ரஜினிகாந்த் பேசியதும், பொன்னியின் செல்வன் டிரைலரின் தொடக்கத்தில் வந்த கமல்ஹாசனின் குரலும் படத்துக்கு பெரிய பலமாகவும் ஹைப் மெட்டீரியலாகவும் அமைந்தன.
ஆனால், அப்போது கூட மற்ற மாநிலங்களில் குறிப்பாக பாலிவுட் ரசிகர்களை கவரும் விதமாக பொன்னியின் செல்வன் படத்தை இந்தியில் புரமோட் செய்யவே இல்லை என்கிற குற்றச்சாட்டு ரசிகர்களாலே வைக்கப்பட்டது. இத்தனைக்கும் பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கும் நிலையில், தாராளமாக அங்கேயும் புரமோஷன் செய்தால் படத்திற்கான பாக்ஸ் ஆபிஸ் மேலும், அதிகரித்து இருக்கும் என்றும் ரசிகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

500 கோடி: எப்படி இருந்தாலும், பொன்னியின் செல்வன் முதல் பாகம் தமிழ்நாடு மற்றும் தமிழர்கள் வாழும் ஓவர்சீஸ்களில் மிகப்பெரிய வெற்றிநடைப் போட்டு 500 கோடி வசூலை சாத்தியமாக்கியது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படம் 1000 கோடி வசூலை ஈட்டுமா? அல்லது குறைந்த பட்சம் அதே 500 கோடி வசூலையாவது ஈட்டுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான பின்னர், அந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்தன. பாகுபலி ரேஞ்சுக்கு படம் பிரம்மாண்டமாக இல்லை என்கிற குற்றச்சாட்டுகள் குவிந்தன. இன்னும் 20 நாட்களில் படம் வெளியாக உள்ள நிலையில், அதற்கான எந்தவொரு பெரிய ஹைப்பையும் லைகாவோ அல்லது மணிரத்னமோ இதுவரை ஏற்படுத்தவில்லை என்றும் சமீபத்தில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் பெரிதாக கவரவில்லை என்கிற குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.

ஹைப் இல்லை: இந்நிலையில், இருக்கும் இன்னும் இரு வாரங்களில் ராஜமெளலி பாணி புரமோஷனை மணிரத்னம் மேற்கொண்டால் தான் மீண்டும் ஒரு 500 கோடி வசூலை பொன்னியின் செல்வன் 2 படம் பெறும் என்றும் கூறப்படுகின்றன. இல்லையென்றால் வசூலில் முதல் பாகத்தை முந்துவது மிகவும் சிரமம் என்கின்றனர். பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லரின் அந்த கடைசி ஐஸ்வர்யா ராய் - சியான் விக்ரம் காட்சி போல இன்னமும் நறுக்கென்ற ப்ரோ கட்ஸ்களுடன் ஒரு க்ளிம்ஸை வெளியிடுவது, டிக்கெட் புக்கிங்கை ஆரம்பித்து அதிர்வலைகளை கிளப்புவது போன்ற யுக்திகளை லைகா எப்போது ஆரம்பிக்கப் போகிறது என்கிற ஆவலில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
முதல் பாகத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் எப்படியாவது இரண்டாவது பாகத்தை பார்த்தாலே போதும் வசூலை அள்ளிவிடலாம் என்கிற கணக்கில் லைகா நிறுவனம் அமைதியாக உள்ளதா? என்றும் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











