கமல் - ரஜினியுடன் நடிக்கிறாரா சிவராஜ்குமார்.. ஜெயிலரையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு இருக்குமே
சென்னை: கன்னட திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிவராஜ் குமார், இப்போது ஒரு பான்-இந்தியா ஸ்டாராக வலம் வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல், குறிப்பாக, வெறும் கௌரவ வேடங்களில் மட்டுமல்லாமல், கதையின் நாயகனாகவும் பிறமொழிகளில் மிரட்டி வருகிறார். இவரது நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள 'பெத்தி' திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. இதற்கிடையில், தமிழில் இவரது நடிப்பில் இன்னும் பெயரிடப்படாத 'புரொடக்ஷன் நம்பர் 1' திரைப்படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
'ஜெயிலர்' படத்தில் 'நரசிம்மா' என்ற ஒற்றைக் கதாபாத்திரத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் அதிரவைத்த சிவராஜ் குமார், அதன் இரண்டாம் பாகத்திலும் மீண்டும் அதே மாஸோடு நடித்துள்ளார் என்று தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்நிலையில், பல தசாப்தங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் இரு பெரும் இமயங்களான ரஜினிகாந்தும், கமல் ஹாசனும் இணைந்து நடிக்கவிருக்கும் புதிய படத்தில் சிவராஜ் குமாரும் நடிக்கிறாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.
ஒரே மேடையில் இரு துருவங்கள்: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், ரெட் ஜெயண்ட் நிறுவனம் பல நூறு கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. சிறிய புரோமோவோடு வெளியான இந்த அறிவிப்பு, சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய ஹைப்-பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி மற்றும் கமல் இருவருக்குமே தான் ஒரு மிகப்பெரிய ரசிகன் என்று கூறும் சிவராஜ் குமார், சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர்களுடன் இணைவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ரஜினி - கமல்: "பல வருடங்களுக்குப் பிறகு அவர்கள் இருவரும் இணைந்து நடிப்பதை திரையில் பார்ப்பதே ஒரு அற்புதம். நானும் அந்தப் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆனால், இரு பெரும் சூப்பர் ஸ்டார்களுக்கு நடுவே தேவையில்லாமல் என் கதாபாத்திரத்தை நுழைத்தால் அது நன்றாக இருக்காது. நான் அங்கு இருக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு வலுவான காரணம் இருக்க வேண்டும். இயக்குநர் நெல்சனுக்கு எல்லாமே தெரியும். அப்படி ஒரு நல்ல வாய்ப்பு அமைந்தால் அதைவிட வேறு என்ன வேண்டும்?" என்று அவர் யதார்த்தமாகப் பேசியுள்ளார்.
'பெத்தி' படத்திற்கான அடித்தளம்: சிவராஜ் குமாரின் கைவசம் தற்போது கன்னடம், தமிழ், தெலுங்கு எனப் பல படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. குறிப்பாக, இந்த வாரம் வெளியாகும் 'பெத்தி' திரைப்படத்தில் ராம் சரண் மல்யுத்த வீரராக நடிக்க, அவருக்கு குருவாக 'கௌர்நாயுடு' என்ற மிக முக்கிய கதாபாத்திரத்தில் சிவராஜ் குமார் நடித்துள்ளார். "ராம் சரணை பார்த்தால் என் சொந்த தம்பியைப் பார்ப்பது போலவே இருக்கிறது" என்று நெகிழ்ந்த சிவராஜ் குமார், தெலுங்கில் 'கும்மடி நரசய்யா' பயோபிக் படத்திலும் நடித்து வருகிறார்.
அடுத்தடுத்த படங்கள்: கன்னடத்தில் 'டாட்', '666 ஆபரேஷன் ட்ரீம் தியேட்டர்' ஆகிய படங்களோடு, 'பெயில்' திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் 'ஜெயிலர் 2' படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications