அடுத்த படம் சூர்யாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இணைந்து நடிக்கிறேன்..கமல் சொன்ன முக்கிய தகவல்
சென்னை : சூர்யாவிற்கான நன்றியை அடுத்த படத்தில் முழுவதுமாக காட்ட முடிவு செய்திருக்கிறேன் என கமல் தெரிவித்துள்ளார். விக்ரம் படத்திற்கு ரசிகர்கள் அளித்த ஆதரவிற்கு தனித்தனியாக வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார் கமல்.
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருந்தது. இந்த படம் உலகம் முழுவதும் 150 கோடிக்கும் அதிகமான தொகையை வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

4 நாளில் விக்ரம் வசூல்
விக்ரம் படம் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்று, வசூலை குவித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் 109 கோடிகளை விக்ரம் படம் கடந்த 4 நாட்களில் வசூல் செய்துள்ளது. விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் உணர்ச்சிவசப்பட்டு படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் நன்றி தெரிவித்து வருகின்றனர். கமலும் இதற்கு பதில் போட்டு வந்தார்.
Recommended Video

கமலின் நன்றி வீடியோ
இந்த சமயத்தில் விக்ரம் படத்திற்கு ரசிகர்கள் தந்த பிரம்மாண்ட வெற்றிக்கு ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பில் கமல் நன்றி தெரிவித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தனித்தனியாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் கமல். அதில் தமிழில் அவர் பேசிய வீடியோவில், தரமான திரைப்படங்களை தாங்கிப்பிடிக்க தமிழ் ரசிகர்கள் ஒருபோதும் தவறியதில்லை. தரமான, திறமையான நடிகர்களையும் தான். அந்த வெற்றி வரிசையில் என்னையும், எங்களின் விக்ரம் படத்தையும் தேர்வு செய்தது எங்கள் பாக்யம்.

தியேட்டரை அதிர வைத்த சூர்யா
இந்த படத்தில் பணியாற்றிய அனிருத் உள்ளிட்டவர்கள் மட்டுமல்ல. பெயர் தெரியாமல் பின்னணியில் வேலை செய்த அனைவருக்கும் உங்களின் பாராட்டை பகிர்ந்தளிப்பது தான் நியாயம். தம்பிகள் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், செம்பன் வினோத் என வீரியம் மிக்க நடிகர் படை வெற்றியின் முக்கிய காரணங்கள். கடைசி மூன்று நிமிடங்களே வந்து திரையங்குகளை அதிர வைத்த என் அன்பு தம்பி சூர்யா அவர்கள் என் அன்பிற்காக மட்டுமே அதை செய்தார்.

அடுத்த படத்தில் நன்றி காட்டுவேன்
அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாக காட்டி விடலாம் என்று இருக்கிறேன். இயக்குநர் லோகேஷிற்கு என் பாலும், சினிமா மேலும் இருக்கும் அன்பு படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளிலும், படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிந்தது. ரசிகர்களின் அன்பும் அவ்வாறாகவே இருக்கிறது. உங்கள் அன்பு தொடர விழையும் ராஜ்கமல் ஃபிலிம்சின் ஊழியன் உங்கள் நான் என பேசி முடித்தார்.
இந்தியில் என்ன பேசினார்
இந்தியில் பேசுகையில், சினிமாவிற்கு மொழி கிடையாது. சினிமா எனக்கு ஆக்சிஜன் போன்றது. விக்ரம் படத்திற்கு கிடைத்துள்ள வெற்றி தன்னுடைய வெற்றி அல்ல. உண்மையான சினிமாவிற்கு கிடைத்த வெற்றி என கமல் பேசி உள்ளார்.கமலின் இந்த வீடியோக்களால் ட்விட்டரில் #VikramRoaringSuccess, #Vikram3 ஆகி ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











