அட்லீ - அல்லு அர்ஜுன் படம்.. வில்லனாக வில் ஸ்மித், ட்வைன் ஜான்சன்?.. ஹாலிவுட்வரைக்கும் போறாரே
சென்னை: அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது. தீபிகா படுகோனே இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அட்லீ தமிழில் நான்கு படங்கள் மட்டுமே இயக்கியிருக்கிறார். அவற்றில் மூன்று படங்கள் விஜய்யை வைத்து இயக்கியிருந்தார். கோலிவுட்டில் முன்னணி இயக்குநர் என்ற இடத்தை பிடித்த அவர்; அடுத்ததாக ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். அதில் ஷாருக்குடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் எல்லாம் நடித்திருந்தார்கள். அனிருத் இசையமைத்த்திருந்தார்.
மெகா ஹிட்: அந்தப் படம் தமிழ்நாட்டில் பெரிதாக செல்ஃப் எடுக்கவில்லை. அதேசமயம் வட மாநிலங்களில் படம் சக்கைப்போடு போட்டது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் அங்கு ஜவான் கொண்டாடப்பட்டது. உலக அளவில் மொத்தம் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியா முழுவதும் ஃபேமஸான இயக்குநராக மாறிவிட்டார் அட்லீ.

அடுத்த படம்: ஜவான் படத்தின் வெற்றிக்கு பிறகு ஹிந்தியில் அவருக்கு வாய்ப்புகள் வரத்தான் செய்தன. ஆனால் இந்த முறை தென்னிந்திய ஹீரோவை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டார். முதலில் கமல்ஹாசனையும், சல்மான் கானையும் வைத்து அட்லீ ஒரு படம் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது பிறகு உறுதியானது. அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவிருக்கிறார்.
பிரமாண்ட படம்: இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவிருக்கிறது. சைன்ஸ் ஃபிக்ஷன் அல்லது சூப்பர் ஹீரோ ஜானரில் இந்தப் படம் உருவாகவிருப்பதாக தெரிகிறது. சமீபத்தில்தான் படம் பற்றிய அறிவிப்பு வீடியோ வெளியானது. மேலும் அட்லீயோ கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மற்றும் இதர பணிகளுக்கான பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவுக்கு சென்றார். அதுதொடர்பான வீடியோவும் வெளியாகி ட்ரெண்டானது.
வில்லன் யார்?: படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார். கண்டிப்பாக இப்படத்தை ஜவானைவிடவும் பெரிய ஹிட்டாக கொடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் இயக்குநர். இந்நிலையில் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படத்தில் வில்லனாக நடிக்க வில் ஸ்மித் மற்றும் ட்வைன் ஜான்சன் (ராக்) ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அட்லீ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











