ஸ்ரீரெட்டி... செய்வீங்களா... மக்களுக்காக ‘இதை’ நீங்க செய்வீங்களா?
மக்கள் பிரச்சினைக்காக நடிகை ஸ்ரீ ரெட்டி போராட வேண்டும் என சென்னை அன்பு நகர் பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை: நடிகை ஸ்ரீ ரெட்டியின் வீட்டருகே வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியால் அப்பகுதிவாசிகள் பெரும் பிரச்சினைக்கு ஆளாகி வருகின்றனர்.
தெலுங்கு மற்றும் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பலர் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தற்போது தமிழ்ப் படங்களில் நடித்து வரும் இவர், சென்னையில் குடியிருக்கிறார்.
வளசரவாக்கம் அன்பு நகர் 10 வது தெருவில் இவரது வீடு உள்ளது.

நடுரோட்டில் குப்பைத்தொட்டி:
அங்கு இவரது வீட்டிற்கு எதிரே குப்பைத் தொட்டி ஒன்று உள்ளது. அந்த குப்பை தொட்டி சாலையின் குறுக்கே நடுரோட்டில் இருப்பதால், போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

சுகாதார சீர்கேடு:
அதோடு அக்குப்பை தொட்டியில் கொட்டப்படும் உணவுப்பொருட்களை, ஆடு, மாடுகள், நாய்கள் உள்ளிட்டவை வெளியே எடுத்து போட்டுவிடுவதால், அந்த சாலையே குப்பைக் கூளமாக காட்சியளிக்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது.

கோரிக்கை:
இப்பிரச்சினை தொடர்பாக நீண்ட நாட்களாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனது குடியிருப்பு பகுதி மக்களின் நலனுக்காக, நடிகை ஸ்ரீ ரெட்டி போராட்டத்தில் குதிக்க வேண்டும் என்றும் இப்பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அன்பு நகர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எதிர்பார்ப்பு:
நடிகை ஸ்ரீ ரெட்டி ஹைதராபாத்தில் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில், தனக்காக வீதியில் இறங்கி போராடிய ஸ்ரீ ரெட்டி, தன் பகுதி மக்களின் கோரிக்கைக்காகவும், போராட்டத்தில் குதிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











