மகேஷ் பாபு சவாலை ஏற்பாரா விஜய்? பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ வெளியிட்ட டோலிவுட் சூப்பர்ஸ்டார்!
ஹைதராபாத்: டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு, பிறந்தநாளை முன்னிட்டு நடிகர்கள் விஜய், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஸ்ருதி ஹாசனுக்கு ஒரு சவால் விடுத்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்கான மகேஷ் பாபுவின் 45வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
தனது பிறந்தநாளை முன்னிட்டு செடி நடும் வீடியோவை மகேஷ் பாபு வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களுக்கு தரிசனம்
டோலிவுட் சினிமாவின் மாஸ் என்டர்டெயினரான மகேஷ் பாபு, தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார். நேற்று மாலை முதலே அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெறிக்கவிட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது மகேஷ் பாபு வெளியிட்ட வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
நல்ல காரியம்
தனது பிறந்தநாளில் இதைத் தவிர வேறு என்ன நல்ல காரியத்தை செய்வது என ட்வீட் போட்டுள்ள மகேஷ் பாபு, #GreenIndiaChallenge என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு, தனது தோட்டத்தில் செடி நடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். முன்னதாக நடிகை சமந்தா உள்ளிட்ட பலர் இந்த சவாலை செய்தது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு சவால்
மேலும், அந்த வீடியோவுடன் சேர்த்து தளபதி விஜய், ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோருக்கு மகேஷ் பாபு அந்த சவாலை விடுத்துள்ளார். மகேஷ் பாபுவின் பல படங்களை தமிழில் ரீமேக் செய்து பிளாக்பஸ்டர் கொடுத்த நடிகர் விஜய்யும் மகேஷ் பாபுவும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சவாலை ஏற்பாரா விஜய்?
மகேஷ் பாபு விடுத்துள்ள சவாலை ஏற்று தளபதி விஜய் வீடியோ வெளியிடுவாரா? தளபதி தரிசனமும் கிடைக்குமா? என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். எப்போதுமே ரசிகர்களுக்காக இருக்கும் நடிகர் விஜய், நிச்சயம் இந்த சவாலை ஏற்பார் என்றும் மகேஷ் பாபுவுக்கு இதற்காக நன்றி தெரிவித்தும், பிறந்தநாள் வாழ்த்துக்களை பதிவிட்டும் விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

ஏற்கனவே
அதெல்லாம் தளபதி விஜய் ஏற்கனவே நிறைய செடிகளை நட்டுள்ளார் என இந்த ரசிகர், மகேஷ் பாபுவுக்கு போட்டோவுடன் கமெண்ட் செய்துள்ளார். விஜய் ரசிகர்களும் மகேஷ் பாபு ரசிகர்களும் அதற்கு லைக் போட்டு வருகின்றனர். ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் மற்றும் ஸ்ருதி ஹாசன் ரசிகர்களும் மகேஷ் பாபுவை வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











