கலைஞர் 100 விழாவுக்கு விஜய் வருவாரா?.. விஷால், சிம்பு எல்லாம் வரமாட்டாங்களாம்.. ஏன் தெரியுமா?
சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழா நாளை (ஜனவரி 6) பிரம்மாண்டமாக கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு நேரில் சந்தித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற உள்ள விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த விழாவில் நடிகர் விஜய் பங்கேற்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. மேலும், யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகின்றனர். யாரெல்லாம் பங்கேற்க மாட்டார்கள் என்பது குறித்த தகவல்களும் வெளியாகி உள்ளன.
தமிழ் சினிமாவுக்கு பல நல்ல வசனங்களையும், திரைக்கதைகளையும் கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. அவரது நூற்றாண்டு விழாவை கடந்த டிசம்பர் 24ம் தேதி நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருந்தது. ஆனால், மிக்ஜாம் புயல் காரணமாக அந்த விழா ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 6ம் தேதி நாளை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

ரஜினி, கமலுக்கு அழைப்பு: தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தனர். மேலும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் நேரில் சந்தித்து அவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
சூர்யா, கார்த்தி பங்கேற்பு: கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி சென்னை வந்துள்ளனர். இன்று விஜயகாந்தின் நினைவிடத்தில் சூர்யா கதறி அழுது விஜயகாந்த் உடன் பெரியண்ணா படத்தில் நடித்த அனுபவங்களையும் அவரது தட்டில் இருந்த கறியை எடுத்து ஊட்டி விட்டு நீ நல்லா சாப்பிட்டா தான் நல்லா தெம்பா நடிக்க முடியும் என பேசியதை எல்லாம் நினைவு கூர்ந்தார். முன்னதாக நேற்று சிவகுமார் மற்றும் கார்த்தி விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இன்று மூன்று பேரும் விஜயகாந்த் இல்லத்துக்கும் சென்று பிரேமலதாவுக்கு ஆறுதல் கூறினர். இந்நிலையில், நாளை நடைபெற உள்ள கலைஞர் 100 விழாவில் இருவரும் பங்கேற்பது உறுதியாகி உள்ளது. தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
விஜய் வருவாரா?: நடிகர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவரும் சென்னையில் தான் படப்பிடிப்பில் இருப்பதால் கண்டிப்பாக வருகிறேன் என சொல்லியிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் அஜித் பங்கேற்பாரா? என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.
சிம்பு, விஷால் வரமாட்டாங்களாம்: புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாட்டில் இருக்கும் நடிகர் விஷால் இந்த விழாவில் பங்கேற்க வாய்ப்பில்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், நடிகர் சிம்புவும் இன்னமும் சென்னை திரும்பாத நிலையில், அவரும் பங்கேற்க மாட்டார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











