அமித்ஷாவை சந்திப்பாரா விஜய்.. ட்விட்டரில் டிரெண்டாகும் #ThalapathyVJTheNumeroUno.. என்ன மேட்டர்?
சென்னை: நேற்று சென்னை வந்த அமைச்சர் அமித்ஷாவை திடீரென திரை பிரபலங்கள் அதிகளவில் சந்தித்து வருகின்றனர். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பிரபலங்கள் அடுத்தடுத்து சந்தித்து வரும் நிலையில், நடிகர் விஜய்யும் சந்திப்பாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் கால் பதிக்கும் விதமாக பாஜக அரசு செங்கோல் உள்ளிட்ட ஏகப்பட்ட அரசியல்களை இப்போதே கையில் எடுத்திருப்பதாக விவாதங்களும் விமர்சனங்களும் கிளம்பி உள்ளன.
நடிகர் விஜய் விரைவில் அரசியலில் குதிக்க ஆயத்தமாகி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிரெண்டாகும் #ThalapathyVJTheNumeroUno: நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வரும் ஜூன் 22ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜூன் மாதம் முழுவதுமே தளபதி விஜய்யின் பிறந்த மாதம் என்றே அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
வரும் வாரம் பொதுத் தேர்வில் வெற்றிப் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த மாவட்ட வாரியான மாணவர்களை நடிகர் விஜய் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே பொன்னியின் செல்வன் 2 படம் கூட விஜய்யின் வாரிசு படத்தின் வசூலை முந்தவில்லை என்றும் விஜய் தான் நம்பர் ஒன் நடிகர் என பதிவிட்டு டிரெண்டிங்கை ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.
அரசியலில் விஜய்: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை போடுவது, இளம் வாக்காளர்களை குறி வைத்து மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது உள்ளிட்ட பல வேலைகளை செய்து வரும் நடிகர் விஜய் விரைவில் அரசியலில் அதிரடியாக களம் இறங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் அடிக்கடி விஜய் அரசியல் குறித்த போஸ்டர்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகின்றனர்.

அமித்ஷாவை சந்திப்பாரா விஜய்: தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பலர் சென்னைக்கு வந்துள்ள அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில், நடிகர் விஜய்யும் விரைவில் அமித்ஷாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பிரதமர் மோடியை நடிகர் விஜய் சந்தித்துள்ள நிலையில், விஜய் பாஜக உடன் இணைந்து செயல்படுவார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











