கேஜிஎஃப் படத்தை மனந்திறந்து பாராட்டிய புனித் ராஜ்குமார்...தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ
சென்னை : கேஜிஎஃப் 2 உலகம் முழுவதும் வசூலில் சக்கை போடு போட்டு வரும் நிலையில், கேஜிஎஃப் படக்குழுவிற்கு மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் வாழ்த்து சொன்ன நெகிழ்ச்சியான பழைய வீடியோ ஒன்று தற்போது செம வைரலாகி வருகிறது.
டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னட ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த கேஜிஎஃப் சாப்டர் 2 படம் ஏப்ரல் 14 ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. கிட்டதட்ட 10,000 க்கும் அதிகமான தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விரைவில் 1000 கோடி கிளப்
பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 படம் வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்து, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரிலீசான 8 நாட்களில் இதுவரை உலகம் முழுவதும் 800 கோடிகளை வசூல் செய்துள்ளது இந்த படம். இன்னும் ஓரிரு நாட்களில் 1000 கோடி கிளப்பில் இணைய உள்ளது.

பாகுபலி 2 சாதனையை முறியடிக்குமா
ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படம் ரிலீசான 15 நாட்களில் 1000 கோடி கிளப்பில் இணைந்தது. இந்த சாதனையை கேஜிஎஃப் 2 விரைவில் முறியடிக்க உள்ளது. இதுவரை ராஜமெளலி இயக்கிய பாகுபலி 2 படம் தான் அதிகபட்சமாக 1800 கோடி வசூல் செய்து, அதிக வசூல் சாதனை படைத்த இந்திய படங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த சாதனையையும் கேஜிஎஃப் 2 முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

கேஜிஎஃப்பை பாராட்டிய புனித் ராஜ்குமார்
இந்நிலையில் கேஜிஎஃப் டீமிற்கு மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் வாழ்த்து சொன்ன பழைய வீடியோவை ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ 2018 ம் ஆண்டு கேஜிஎஃப் சாப்டர் 1 ரிலீசாவதற்கு முன், கேஜிஎஃப் படம் பிரம்மாண்ட வெற்றி அடைய வேண்டும் என புனித் ராஜ்குமார் வாழ்த்து கூறி வெளியிட்டதாகும். தனது படங்களுக்கு போட்டியாக கேஜிஎஃப் படம் வசூல் செய்து விட கூடாது என துளியும் பொறாமை இல்லாமல் மனம் திறந்து புனித் ராஜ்குமார், யாஷ், பிரசாந்த் நீல், கேஜிஎஃப் டீமில் உள்ள அனைவருக்கும் வாழ்த்து கூறி இருந்தார்.

வைரலாக்கிய ரசிகர்கள்
புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார். இருந்தாலும் அவரை ரசிகர்கள் தற்போது வரை கொண்டாடி வருகிறார்கள். இப்போதும் கேஜிஎஃப் 2 படம் வெற்றி அடைந்துள்ள நிலையில் புனித் ராஜ்குமார் பேசிய பழைய வீடியோவை சோஷியல் மீடியாவில் மிக அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











